https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, July 16, 2017

Karl Marx by Francis WheenKarl Marx by Francis Wheen
                   -R.Pattabiraman

கார்ல் மார்க்ஸ் குறித்த பிரான்சிஸ் வீன் புத்தகத்தை படித்தேன்தோழர் ஞானையாவிற்காக இரத்தின ரவி ஆர்டர் செய்திருந்த புத்தகம். அவருக்கு கொடுக்கமுடியாமல் போய்விட்டது. ரவிக்கு இதில் பெரும் வருத்தம். 1999ல் லண்டனில் புத்தகம் வெளியானது. 2003-4ல் அதை அறிந்தவுடன் படிக்கவேண்டும் என விரும்பினேன். வாங்கமுடியவில்லை. நூலகம் , நண்பர்கள் வழிகளிலும்  கிடைக்கவில்லை. 2017 ஜூலையில் 17 வருடங்களுக்கு பின்னர் படிக்க முடிந்துள்ளதுஇந்த 17 வருடங்களில் நான் 40களிலிருந்து 60களில் வாழ்வதால் புரிந்து கொள்ளும் திறன் சற்று கூடியிருக்கலாம்.
மார்க்ஸ் பற்றி ஏராள புத்தகங்களை 22ஆம் வயது முதல் கடந்த 39 வருடங்களாக படித்துக்கொண்டிருக்கும் பழக்கம் இருக்கிறதுசோவியத் வகைப்பட்டவை தவிர அய்ரோப்பிய, அமெரிக்க எழுத்தளர்களின் மேற்கு புத்தகங்களையும் படிக்க முடிந்தது. Franz Mehring எழுதியதை இதுவரை படிக்கவில்லை. ஆனால் Otto Rhule, David Riaznov , Isaiah Berlin, Harold Laski , Beer, Sydney Hook, Russel, Henry Volkov ,Peter worsley, David Mclallan, David Felix, Philip Foner, G D H Cole, சாமிநாத சர்மா  போன்றவர்களின் புகழ்வாய்ந்த ஆக்கங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. சாமிநாத சர்மாவை ஒருவர் தமிழில் படித்து விட்டால் இசையா பெர்லின், ஹரால்ட் லாஸ்கியின் சாரத்தை படித்தது போலாகும். 1930களில் அவர்கள் மார்க்ஸ் பற்றி எழுதினர். சாமிநாத சர்மா 1940 களின் துவக்கத்திலேயே இப்புத்தகங்களைப் பெற்று தமிழ்படுத்தி தனது மிகச்சிறந்த அறிவித்திறனை காட்டிவிட்டார். அவர் மார்க்ஸ் உடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த இத்தாலி மாஜினி பற்றியும் எழுத தவறவில்லை.

 இப்புத்தகமான Francis Wheen  சிறப்பு என்னவெனில் பல்வேறு புத்தகங்களில் தனித்தனியே காணப்படும் மார்க்ஸ் சம்பந்தப்பட்ட பல் நுண்ணிய தகவல்கள் ஒருசேர கிடைப்பதுதான். மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று. ஆனால் அவரின் வளர்ச்சி, மகிழ்ச்சி, துன்பம், போராட்டங்கள், குடும்பத்தார்கள்- உறவுகளை பேணுதல், அவரின் attitude, பெருமை-குறைகள் என ஒருசேர இப்புத்தகத்தில் பேசப்படுகிறது. மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு இம்மாதிரியான எழுத்துக்கள் சற்று வலியைத்தரும் அவ்வகை எழுத்தாளர்கள் குறித்து வசைப்பாடத் தோன்றும். நம்மைபோன்ற சக மனிதன் 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்து தனக்கு முந்திய காலத்தின் அறிவையெல்லாம் சேகரித்து ஜீரணித்த மனிதன், பிற்காலம் குறித்த கனவுகளை வசப்படுத்த தனக்கு சரி என உணர்ந்த வழியை அழுத்தமாக தெரிவித்த மனிதன்- கொண்டாடப்படவேண்டிய மனிதன் என்கிற நிதான பார்வை இருந்தால் இம்மாதிரி புத்தகங்கள் பயன்படுவதாக இருக்கும். மனித குல முயற்சியில் முற்றானது முடிந்து போனது என எதுவும் இல்லை. கடக்கவேண்டும்- ஒவ்வொன்றையும் கடந்தாக வேண்டும். மார்க்ஸ்க்கு அவருக்கு முந்தி இருந்த எவரும் முற்றானவராக தோன்றவில்லை. மார்க்சியத்தின்படி மார்க்ஸ் முற்றானவர் அல்ல. ஆனால் இதன் பொருள் எதிர்மறையான ஒன்றல்ல. மார்க்ஸ் தேவைப்படுகிறார் என்பதை குறைக்கும் அர்த்தத்தில் அல்ல. இந்தியாவில் மார்க்ஸ் உடன் பெரியார், அம்பேத்கார், காந்தி என சிந்தனை சேர்மான கலவை - chemistry of ideas நடந்து கொண்டுதான் இருக்கிறது. யார் விரும்பினாலும், விலகினாலும் இந்திய சமுகத்தின் எதார்த்தங்களில் மார்க்சியம் ஊடாடவேண்டியிருக்கிறது. இங்கே என் போன்றவர்கள் 40 ஆண்டுகள் செயல்பட்ட தொழிற்சங்கத்தின் மூலவர்கள் என கருதப்பட்ட குப்தா-ஜெகன் மார்க்சிய- காந்திய குழைவை முயற்சித்தனர். தமிழகத்தில் மார்க்சியம்- பெரியாரியம்- அம்பேத்காரியம் என்கிற குழைவு பொதுவாக இடதுசாரிகளால் ஏற்கப்பட்ட ஒன்றாகியுள்ளது.
சுய சிந்தனையும் சமுக மேம்பாடு குறித்த விழிப்புணர்வு கொண்ட எவரும் மார்க்சியத்தை ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் வாழ்க்கையின் ஓட்டம் குறித்தகூகுள் மேப் ஆக’ மார்க்சியத்தை வறட்டுத்தனமாக பார்க்கவும் கூடாது.. செயலுக்கும், சிந்திக்கும் பாங்கிற்குமான பொதுவான வழிகாட்டல் என்பதில் கவனம் தேவைப்படுகிறது. அட்சரம் பிசகாமல் மேற்கோள்களை கொண்டு வாழ்க்கையை அளக்கவோ செப்பனிடவோ முடியாது என்கிற அனுபவத்தை புறக்கணிக்கமுடியாது. இந்திய சமுகத்தில் மக்களை ஒன்றுபடுத்த விழையும் பிற சிந்தனைகளை ரீ-ஆக்ஷ்னரி என்று முத்திரை குத்தி அப்புறப்படுத்துவதற்கு முன்னர் பலமுறை யோசிக்கவேண்டும். அச்சிந்தனைகள் தோழமை கொள்ளத்தக்கவையா- இல்லை எதிரி பக்கம் தள்ளப்படவேண்டியவையா என்று.  .
பிரான்சிஸ் வீன் புத்தகம் ஒரு காப்பி மட்டுமே ரவியால் மலிவு விலையில் பெறமுடிந்தது. இப்போது  அமேசான் மூலம் வாங்க வேண்டுமெனில்   Hard Cover Rs. 4594 , Papaerback Rs 1351  Kindle Edition Rs 345. கிண்டில் வைத்திருப்பவர்கள் படிக்க விரும்பினால் மட்டுமே 345க்கு சற்று மலிவான விலையில் இப்புத்தகம் கிடைக்கிறது. மாவட்ட நூலகங்களில் கிடைக்கிறதா என தெரியவில்லை. கன்னிமாரா நூலகத்தில் இதுவரை என் கண்ணில் படவில்லை. இரவிக்கு நன்றி. பல ஆண்டுகள் படிக்க நினைத்த புத்தகத்தை கொடுத்து படிக்க வைத்தமைக்கு நன்றி. வாழ்நாள் அனுமதிக்கும்வரை   இப்படிப்பட்ட தேடல் தாகம் துரத்தினால் மகிழ்ச்சிதான்.

No comments:

Post a Comment