https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, January 5, 2023

தோழர் சாருவின் வாழ்க்கையிலே..

 

              தோழர் சாருவின் வாழ்க்கையிலே..

சாரு பெரும் புரட்சிகரவாதி என்பதை பலர் அறிந்திருக்கலாம். பகத்சிங் பற்றிக்கூட பல சுவையான தகவல்கள் உண்டு. பெரும் ரசனைக்காரர் அவர். சினிமா விரும்பி. காதலை கொண்டாடியவன். சாரு  மஜூம்தார் குறித்தும் சுவையான செய்திகள் கிடைக்கின்றன.


சாரு காசியில் பிறந்தவர். 1919 ஆண்டு உறுதி. ஆனால் மாதம் பெங்காலியில் ஜைஸ்தா அதாவது நாம் அறியும் மே- ஜூன்.  தந்தை பிரேஷ்வர் மஜும்தார் நல்ல படிப்பாளி. லாயர். பொய் சொல்லவேண்டியிருப்பதால் வக்கீல் தொழில் வேண்டாம் என ஆசிரியரானார்.  தாய் உமாசங்கரி. உமாசங்கரியை வக்கீல் பையன் எனக்கொடுத்த மாமனார் சந்திரமோகன் பெரும் சொத்துக்காரர். நிலப்பிரபு. இப்படி தொழிலைவிட்டுவிட்ட மாப்பிள்ளை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. சொத்துக்கு ஆசைப்பட்ட உறவினர்களால் கடத்தப்பட்ட சந்திரமோகன்  சாருவின் தாத்தா என்னவானார் - எவருக்கும் தெரியாமலேயே போனது.

சாருவை சிலிகுரி ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். 7-8 வகுப்பின் சகவாசம் பள்ளியிலேயே சிகரெட் பிடிக்க வைத்தது. வாத்தியார் கையும் களவுமாக பார்த்துவிட்டார். பிற பையன்கள் இனி பிடிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியைத் தந்தனர். சாருவோசார் உங்கள் எதிரில்’ பிடிக்க மாட்டேன் என்றார்.

பரிட்சை ஹாலில் இருந்து சாரு ஒரு மணி நேரத்தில் பேப்பரை கொடுத்து விட்டு வெளியே வருகிறார். வாத்தியார் எல்லாம் எழுதினாயா என்கிறார். 40 மார்க் பாஸாகிவிடுவேன் என்கிறார் சாரு.

ஆனால் பள்ளி இறுதி தேர்வில் முதல் மாணவனாக வந்து பள்ளியின் பெயரையும் உயர்த்துகிறார். தந்தை ஏராள ஆங்கில புத்தகங்களை வீட்டில் வைத்திருந்தார். சாருவிற்கு பல பழக்கமாயின. தந்தை  அந்த மாவட்டத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவருமானார்.

சாருவிற்கு ஜெயபிரகாஷ் காங்கிரஸ் சோசலிச கட்சிபால் ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் வழியாக சிபிஅய் வந்து பின் சிபிஎம் அதில் போராடி நக்சல் இயக்கம் என அறியப்படும் எம் எல் இயக்கம் கட்டினார்.

இன்று பங்களாதேஷில் உள்ள பப்னா எட்வர்ட் கல்லூரியில் சேர்கிறார். புத்தகங்களை அப்படியே நண்பர்களிடம் கொடுத்துவிட்டு இயக்கவேலை என வெளியே வருகிறார்.

வடக்கு வங்கத்தில் சிலிகுரி பகுதியில் சிபிஅய் தலைவர் மாதப் தத்தா மிக முக்கிய விவசாயிகளின் தலைவராக அறியப்பட்டவர். அவர்தான் சாருவை கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை அணிதிரட்டவும் கட்சிக்கு கொணரவும் வழிகாட்டினார். சாருவும் வீடு திரும்பாமல் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஜல்பைகுரி சிலிகுரி சுற்றியுள்ள கிராமங்களுக்கு தன் தோழன் ஒருவருடன் நடந்தே செல்கிறார்.

நான்கு மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றலை தனது 20 வயதிலேயே அவர் வளர்த்துக்கொண்டார். பெங்காலி, இந்தி, ஆங்கிலம் தவிர வட வங்க பழங்குடிகள் மொழியான ராஜ்பங்ஷியும் பேசினார். அப்படித்தான் ஜதின் என்ற விவசாயி அவருக்கு பழக்கமானார்.

வட வங்க ஏழைகள் ஆண்டிற்கு மூன்று மாதம் அரிசி உணவைப் பார்ப்பவர்கள். சாருவோ தினம் சாப்பிட்டு பழகிய மத்தியதரவர்க்கம் சார்ந்தவர். கிராமத்தில் கிடைத்தவற்றை சாப்பிட்டு, ஆற்று பாலத்தில்,  மாட்டுகொட்டகையில் படுத்து மறுநாள் வேலைக்கு கிளம்பவேண்டும்.

ஜதின் இந்த டவுன் பாபுக்களை உபசரிக்க எண்ணி வீட்டிற்கு அழைக்கிறார். புழுங்கல் அரிசி கொதி மணம் துளைக்கிறது. ஜதின் பழங்குடி குழந்தைகள்அய்யா என குதூகலித்துமணம் பிடிக்க வருகின்றனர். ஜதீன் குழந்தைகளை விரட்டுகிறார். இன்று இந்த பாபுக்கள் விருந்தாளிகள் என்கிறார்.  சாரு வேண்டாம் , குழந்தைகள் சாப்பிடட்டும் என்கிறார். அப்போது சாருவிற்கு வயது 21. ஜதீன் இல்லை என வற்புறுத்துகிறார். சாருவின் கண் கலங்கியது.

திடிரெனெ சாரு தன் தோழனுடன் படுவேகமாக ஓடத்துவங்குகிறார். சில நிமிடங்கள் ஓடி களைப்பாகி இருவரும் நிற்கின்றனர். ஏன் சாரு இப்படி என தோழன் கேட்கிறார். ஏய் ரொம்ப பசி..ஜதீன் திரும்ப வலியுறுத்தியிருந்தால் சாப்பிட்டு தொலைந்திருப்பேன். குழந்தைகள் பாவம். வா வேறு எங்காவது ஏதாவது கிடைக்கிறதா பார்ப்போம் என தோழனுக்கு தன் வெட்கம் பிடுங்க உண்மை உரைக்கிறார்

இப்படி ஏராள கனவுகளுடன் இந்தியாவில் புரட்சி என்ற தாகத்துடன் சொந்த வாழ்வில் துன்பம் தவிர ஏதுமறியா பெருமைக்குரியவர் ஏராளம். அவர்களின் கொள்கை நடைமுறையுடன்  நாம் ஒத்துப்போகமுடியுமா என்பது வேறு விஷயம். மனிதன் தன் கனவிற்காக சுகம் தொலைத்து தன்னை துன்பத்தில் வதையில் ஆழ்த்திக்கொள்கிறான் என்பது பொதுவான உணர்வென்றால் , வாழ்க்கை  எவரிடத்தும் ஏதோ ஒன்றை கற்க எனச் சொல்கிறது

 

2. சாருவும் லீலாவும்

சிபிஅய் கட்சியில் நிலைமைகள் வேகமாக மாறுகின்றன. பொதுச்செயலர் ஜோஷி  நீக்கப்பட்டு ரணதிவே பொதுச்செயலராகிறார். சோவியத் மாதிரி புரட்சி insurrection என தலைமறைவு கட்சி மார்ச் 9 1949 நாளை புரட்சிக்காக குறிக்கிறது. ஆனால் ஏதும் மக்களை அசைக்கவில்லை.

தெலங்கானா எழுச்சியை திரும்பபெறுவது குறித்து பெரும் விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. மாவோவின் தலைமையிலான சீனப்புரட்சியி ஆந்திர தோழர்களிடம் செல்வாக்கு செலுத்தியது. அவர்கள் ஆந்திர ஆவணத்தை தோழர் ராஜேஸ்வரராவ் தலைமையில் வைத்து சீன மாதிரி புரட்சி என்றனர். ராஜேஸ்வரராவ் பொதுச்செயலர் ஆனார். தொடர்ந்த விவாதங்கள், மாஸ்கோவில் ஸ்டாலின் சந்திப்பு என கட்சிக்குள் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன.

வாழ்க்கை என்றால் 24 மணியும் புரட்சியாகவே இருக்கமுடியாது என ஒருமுறை in every day’s life என்பதில் டிராட்ஸ்கி 1920களில் எழுதியிருந்தார். அங்கு அன்பு, காதல் , பொறாமை வேறுவகை மகிழ்ச்சி உளைச்சல் எல்லாம் இருக்கத்தானே செய்யும். இதை பகத்சிங் தோழர்கள் மத்தியிலும் பார்க்கமுடிந்தது.

சாருவிற்கும் அப்படியொரு காதல் வாழ்க்கை அமையாமலா போகும்.  உயிரின் புரளல்கள் பலவகையில் bio instincts ஆக வெளிப்படாதா என்னலீலா அப்படித்தான் சாரு வாழ்க்கையில் நுழைந்தார்.

தெபகா விவாசாயிகள் போராட்டம்தான் இருவரையும் பார்க்க வைத்தது. போராட்டக் களத்தில் கண்கள் அலைபாய்ந்தன. இருவரும் சிபிஅய் தொண்டர்கள். போராளிகள்.  பழக ஆரம்பித்தனர். 5 ஆண்டுகள் காத்திருப்பு எளிதானதல்ல.  சாருவோ சிறையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.

லீலா சற்று பருத்த கருத்த திரேகம். சாருவோ ஒடிந்து விழும் மேனி. சாருவிற்கு 1951ல் விடுதலை என அறிந்தவுடன் லீலாவிற்கு கல்யாணம் மணவாழ்க்கை எண்ணம் அதிகரித்தது. லீலா சென்குப்தா படித்த குடும்பத்திலிருந்து வந்தவர். தந்தை  ஹரேந்திரநாத் சென்குப்தா மாவட்ட போர்டின் டாக்டர் . பங்களாதேஷ் பகுதியிலிருந்து சிலிகுரிக்கு வந்தது அவர்கள் குடும்பம்.

சாருவிற்கு தந்தையிடம் அனுமதி பெற வேண்டுமே எனக் கவலை. லீலாவை தந்தை பிரேஷ்வரிடம் அழைத்து செல்கிறார். அவர் ஊர்  காங்கிரஸ் தலைவரும் கூட. யார் இது தந்தையின்  உறுமல். லீலா சென்குப்தா. கல்யாணம் செய்ய விழைகிறேன் என்கிறார் மகன் சாரு.

உனக்கு பிராம்மண பெண் ஒருத்தியை பார்த்து வைத்திருக்கிறேன் . சாதி தாண்டி என்றால் சமூகத்தில் பிரச்னை எனத் தந்தை கறாராக சொல்கிறார். இல்லை என மறுத்து லீலாதான் என் வாழ்க்கைக்கு என்கிறார் சாரு. அப்படியெனில் என் பிணத்தில் தான் நீ விழிக்க வேண்டும்- இது தந்தையின் உறுமல்.. சாருவும் லீலாவும் மனக்காயத்துடன் வெளியேறுகின்றனர்.

கட்சி அறிவிப்பு ஒன்றை  வெளியிடுகிறது. ஜனவரி 9, 1952  மாலை 6 மணிக்கு முக்கிய கூட்ட நிகழ்வு. தோழர்கள் பங்கேற்கவும். சாரு லீலா திருமணத்திற்குத்தான் இப்படி ஒரு ரகசிய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ்தான் அழைப்பிதழ்..

மணம் முடித்து லீலாவுடன் சாரு வீட்டிற்கு வருகிறார். ஏற்கனவே தாயார் புவனேஸ்வரி இறந்த வருத்தத்தில் தந்தை. தங்கை பேலா அண்ணியை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே போகிறார். மணமக்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் கோரியபோது ஏதும் சொல்லாமல் கோபத்தில் தந்தை மெளனமாக இருந்தார்.

லீலா உள்ளே போய் இரவு என்ன சாப்பாடு செய்யலாம் என ஆரம்பிக்கிறார். பிரேஷ்வருக்குஆஜாரம்தடுக்குமா என்ற மனப்போராட்டம்.  மனதை நிதானப்படுத்திக்கொண்டு வெளியே போய் பெரும் மீனை வாங்கி வந்து பேலா மூலம் மருமகளிடம் தருகிறார்.  ஆஜாரத்தைதூர எறிந்துவிட்டு சாப்பிடுகிறார். அன்பின் வழி பெரியதானது.

மறுநாள் கடை  திறந்தவுடன் வெளியே போய் விலை உயர்ந்த சில்க் புடவை வாங்கி வருகிறார். பிடித்திருக்கிறதா என பேலாவை விட்டு லீலாவிடம் கேட்கச் சொல்கிறார். லீலா நேராக தந்தையிடம் வந்து நான் வெள்ளை நிறம் மட்டுமே உடுத்துவதாகச் சொல்கிறார். உடனே பணத்தை எடுத்துக்கொடுத்து  பிடித்த நிறத்தை வாங்கிக்கொள் என்கிறார் பிரேஷ்வர்.

சில மாதங்களில் என் பெளமா  அதாவது மருமகள் மகாலக்ஷ்மி போல என வருபவர்களிடம் சொல்லத்துவங்கினார். லீலா அன்பால் குடும்பத்தையும், கைக்குழந்தையுடன் தேயிலை தொழிலாளர்களையும் வென்றார் என்பது வரலாறாக

                                                                                     3

சாரு மஜும்தார் என்றாலே கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் அறிந்தவர்களுக்கு நக்சல்பாரி எழுச்சி, பின்னர் இந்தப் போராட்டத்திற்கு துணையாக நின்ற போராளிகள் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேற்றம், புரட்சிகர தோழர்களின் ஒருங்கிணைப்புக்குழு, பின்னர் அதை சிபிஎம் எல் எனும் கட்சியாக்குதல் என்பதெல்லாம் பட்டுத்தெறிக்கும்.

நக்சல்பாரி பகுதி எழுச்சி, போலீஸ் ஒடுக்குமுறையை அடுத்து 1967 நவம்பரில்தான் AICCCR என்கிற ஒருங்கிணைந்த அமைப்பை 7 மாநிலங்களிலிருந்து வந்த தோழர்கள் அமைக்கின்றனர். மாவோ சிந்தனைகளின் வெளிச்சத்தில் என்பது உரக்க சொல்லப்பட்டது. முதலில் சிபிஎம் என்ற tag  பயன்படுத்தப்பட்டு எதிர்ப்பு அமைப்பாகவே  அது செயல்படலானது. மே 1968ல் சிபிஎம் ஒட்டு என்பது அவசியமில்லை என்கிற முடிவை எடுத்தனர்.

சிபிஅய், சிபிஎம் இரண்டின் மீதான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. நக்சல் எழுச்சியின் தள நாயகன் கனு சன்யால் அக்டோபர் 1968ல்  கைது செய்யப்படுகிறார். போலீஸ் வேட்டை அதிகரிக்கப்பட்டது. சென்ற டிசம்பரில்தான் சாரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். அதே 1967ல் தான் சாரு, கனு, பிரமோத் சென்குப்தா, செளரன் போஸ், சரோஜ் தத்தா போன்ற பலர் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கனு, கோகன், குதன், தீபக் போன்ற தோழர்கள் காட்டுவழி தப்பி சீனா செல்வது என முடிவெடுத்து பெரும் துன்பங்களை சந்தித்தனர்.  சாரு 1967 லிருந்தே கட்சி ஒன்றின் தேவையை வலியுறுத்தி வந்தார். ஆனால் ஏப்ரல் 22 ,1969ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  மேதினம் அன்று வெளியுலகு எம் எல் கட்சியின் பிறப்பை அறிகிறது.

சாரு தோழர்களை உற்சாகப்படுத்தி பாதையைக்காட்டிட ஏராளம் தொடர்ந்து எழுதினார். புரட்சிகர கட்சி, ஆயுதப்பாதை, கிராமம் சார்ந்து இயங்குதல், அறிவுஜீவிகளையல்ல விவசாயிகளை  நம்பி செயல்படுதல், எதிரிகளை அழித்தொழிப்பது , இரகசிய கட்சி , மாவோ சிந்தனைகள் போன்றவைகளை சொல்லும் கட்டுரைகள் எழுதினார். சீனப்பாதை நம் பாதை சீனத்தலைவர் நம் தலைவர் முழக்கங்கள் வைக்கப்பட்டன.

தேசபிரதி, லிபரேஷன் பத்ரிகைகள் கட்சியின் சார்பில் வந்தன. மாவோவின் ரெட் புக் இளைஞர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சாருவின் மீது உடன் வந்த பல தோழர்கள் அதிருப்தி அடைந்தனர். போலீஸ் அடக்குமுறைகளில் பலர் பலியாயினர். சாரு எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டார் என்ற விமர்சனங்கள்  1972ல் எழுந்தன.

நாகிரெட்டி முழுமையாக சீன கட்சியின் அதிகாரத்தை ஏற்காமல் இருந்தார். பிரமோத் சென்குப்தா தேர்தல் புறக்கணிப்பு ஏற்கமுடியாதென வெளியேறினார். ’பிப்ளவ கோப் பதே’ என தனியான புத்தகம் எழுதினார். சாருவின் arrogance என விமர்சித்திருந்தார். முக்கிய தோழர் அசித் சென் நகர்ந்தார். சத்யாநாராயண் சிங் தனித்த கட்சியை துவக்கினார். மற்றொரு தலைவர் சுசித்லால் ரே செளத்ரியும் முரண்படலானார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தது. மாறுபட்ட குரல்களை நிதானமாக கவனித்து வந்தது.  சீனத்தலைவர்களை சந்திக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அனுப்ப எம் எல் கட்சி முடிவு செய்தது.

1951 பிப்ரவரி 9ல்  ஒன்றுபட்ட சிபிஅய் தலைவர்களான டாங்கே, அஜாய்,ராஜேஸ்வர், பசவபுன்னையா ஸ்டாலினை சந்தித்து அறிவுரை பெற்ற  நினைவு விவரம் அறிந்தவர்களுக்கு வரலாம். அந்த விவாதம் தோழர் ஸ்டாலின் அறிவுரை ஆகியவற்றை revolutionaries democracy என்ற பத்திரிகை முழுமையாக வெளியிட்டிருந்தது. முன்னர் 1947ல் டாங்கே சோவியத் தலைவர்களை சந்தித்து சில ஆலோசனைகள் பெற்று வந்தார்.

சீனாவின் சூ என் லாய் அவர்களும் பொலிட்ப்யூரோவில் இருந்த காங் செங்கும் இங்கிருந்து சென்ற செளரன் போஸை சந்தித்தனர்.  இந்த சந்திப்பு அக்டோபர் 29, 1970ல் நடந்ததாக அறிகிறோம். சரோஜ் தத்தாவும், சுனிதி குமாரும் செல்லமுடியாமல் போனது.

பேசுவதை எதையும் இப்போது குறிப்பு எடுக்கவேண்டாம், நன்றாக கவனித்து உள்வாங்க போஸிற்கு சூ என் லாய் அறிவுறுத்தினார்.  மாவோ மீது காட்டும் அன்பு மரியாதைக்கு நன்றி என்றாலும் நீங்கள் அவரை உங்கள் சேர்மன் என சொல்லியிருக்கக்கூடாதென்றார். அழித்தொழிப்பு  என்ற பெயரில் கொலைகள் பற்றியும் விமர்சித்ததாக அறிகிறோம்.  கம்யூனிஸ்ட் கட்சிகளில்  patriarchal party என ஏதுமில்லை. சாருவின் சில பார்முலேஷன்ஸ் குறித்தும் நேர் செய்துகொள்ள காங் செங் அறிவுறுத்தினார்.

agrarian programme என்பதை  உருவாக்கி தெளிவடையுங்கள் என்றார். உங்கள் கட்சியின் மீது மாவோவிற்கு மதிப்பு இருக்கிறது எனபதும் சொல்லப்பட்டது. போஸ் இந்தியா திரும்பி இந்த சந்திப்பை சொல்ல விரும்பினார். சாரு unwillingness கணக்கில்கொண்டு இந்த சந்திப்பு பற்றி சொல்லவேண்டாம் என்ற நிலை எடுக்கப்பட்டதாக அறிகிறோம். அவ்வப்போது சில செய்திகளாக போஸ் அதை வெளிப்படுத்தலானார்.

பங்களாதேஷ் விடுதலை என்பதிலும் அங்குள்ள எம் எல் கட்சி நிலைப்பாட்டை இந்திய எம் எல் தோழர்கள் ஆதரித்தனர். அங்கு பாகிஸ்தான்  முக்தி வாகினி இரண்டையும் விமர்சித்து வந்தனர். இந்தியா உள்நாட்டு விஷயத்தில் தலையிடுவது தவறு என்ற நிலைப்பாட்டை இங்கு தோழர்கள் எடுத்தனர்.

நக்சல் இயக்கம் அதன் தொடர்ச்சியாக உருவான எம் எல் அதன் அடிப்படையில் பெற்ற அனுபவங்களுக்கும் 50 ஆண்டுகள் முடிந்து போயுள்ளது.   மக்கள் முன் அவர்களின் முன்னேற்றத்திற்காக என இந்தியா பல்வேறு சோதனைகளை கண்டு வரும் சமூகமாக போய்க்கொண்டிருக்கிறது

4

சாரு மஜூம்தார் வாழ்க்கை குறித்த அசோக் முகோபாத்யாயா புத்தகத்தின் இறுதி பகுதியில் Internal Feud என்ற சிறு அத்தியாயம் இருக்கிறது.

அமைப்புகளில் ஒரே நோக்கத்துடன் ஒன்றாக பணியாற்ற வந்தவர்கள் மத்தியில் மாற்றுக்கருத்துக்கள் வந்து அவை உஷ்ண விவாதமாகும்போது வசவுச் சொற்களும் முத்திரையிடல்களும்  அவதூறுகளும் எப்படியெல்லாம் அதிகமாகும்- சக தோழர்கள் மீது சந்தேக நிழலை படியச் செய்தலும், அவர்களால் எல்லாம் வீணாகிவிட்டது போன்ற பிரமை கூட்டலும் எப்படி அந்த எம் எல் இயக்கத்தோழர்கள் தலைவர்கள் மத்தியில் நடந்தது பற்றியும் அந்த அத்தியாயத்தில் பேசப்பட்டுள்ளது.

லெனினே முன்னொரு காலத்தில் மார்க்சிய போப் என கருதப்பட்ட காட்ஸ்கியை அவர் சோவியத் புரட்சி குறித்து எழுப்பிய கேள்விகளுக்காக ஓடுகாலி என விமர்சித்ததையும் அறிவோம். டிராட்ஸ்கிக்கும் புகாரினுக்கும் ஸ்டாலின் காலத்தில் பெரும் துரோகப்பட்டங்கள் தரப்படாமல் இல்லை.

இது கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மட்டுமல்ல, எந்த இயக்கத்திலும் அதன் பெரும்பான்மைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீதும், அல்லது அந்த சிறுபான்மையினர் பெரும்பான்மை தலைமை மீதும் பரஸ்பர முத்திரை குத்தல்களையும் சாடல்களையும் செய்வதைக் காணமுடியும்.

பல தரப்பு வாத பிரதிவாதங்களை செவிமடுத்து புரிந்துகொள்ளும் அறிதல்முறை வளர்த்தெடுக்கப்படவில்லை. தனிநபர்களும் அதற்கான நேரத்தையும் பொறுமையையும்  காட்டி கற்கமுடியவில்லை.

பொதுவாக எவரும் தன் கருத்துக்கு மாற்றான கருத்து வருவதை விரும்புவதில்லை. தான் ஓர் அமைப்பால் மிக உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நினைப்பவர்களிடத்தில் அவர்கள் உயரத்திற்கேற்ப இந்த சகிப்புத்தன்மையின் அளவு எதிர் விகிதத்தில் அமைவதையும் காணமுடியும்.  முகநூல் உதாசீனங்களில் இதை நாம் அனுமானிக்கமுடியும்.

Dissent என்பது அதற்கான  நியாயங்களுடன் வரும்போதும் கூட அதை அனுமதிக்காத நிலையையே பார்க்கமுடிகிறது. Dissent என்ற பெயரில் அடாவடித்தனம், அமைப்பை சீர்குலைய செய்வது, அமைப்பு நடவடிக்கைகளை நடத்தவிடாமல் கூச்சலிடுவது போன்ற பெயரில் நடைபெறுவதை எந்த அமைப்பு தலைமையும் சகித்துக்கொள்வது கடினமானது. அதேபோல்  மாறுபட்ட கருத்தை அடாவடித்தனமாக சொல்வதே புனித கடமை என சிலர் கொள்வதையும்  காணமுடிகிறது.  விவாதத்தில் பரஸ்பர மரியாதை கலந்த மொழி என்பது பழக்கமாகவேண்டியுள்ளது. ’கருத்து ஜெண்டில்மேன்’ எனும் லிபரலிசம்  எதற்கு  என கேட்பவர்களால் இதை ஏற்க முடியாமல் போகலாம்

அன்றாட அமைப்பின் செயல்பாட்டிற்கு சேதம் விளவிக்காமல், பதவி போராட்டங்களில் முன்வைத்துக்கொள்ளாமல் கருத்துருவாக்கத்திற்காக எழும்பும் Dissent களை அமைப்பின் தலைமை பெரும் ஆபத்தைப் போல எடுத்துக்கொள்வதும், சந்தேகங்களை அவதூறுகளை அந்த dissenters மீது பரப்புவதும் ஜனநாயக இயக்கத்திற்கு ஆரோக்கியமான பாதையாகாது என்று தோன்றுகிறது.

தோழர் நமரி சொன்னதை தந்துள்ளேன். The  ‘official’ tries to hoist the flag of arrogance on hearing the dissent and stamp its seal on it

 

5

இந்த இடுகையை முகநூலில் Nov 7, 2022 அன்று செய்திருந்தேன். சாரு பற்றி செப்டம்பர் 28ல் தான் இடுகையை ஆரம்பித்தேன். இக்கட்டுரை இடுகைகளின் தொகுப்பு எனலாம்.

இந்திய புரட்சி குறித்த பெருங்கனவுடன் இருந்த சாரு மஜூம்தாரின் இறுதி முடிவு குறித்து அசோக் முகோபாத்யாயா எழுதியுள்ளார்.

சிறைவைக்கப்பட்ட சாருவிடம் போலீஸ் அதிகாரிகளின் கேள்விக் கொடுமைகள் தினந்தோறும் நடந்தது. 1970-71 ல் அவரது மகள் அனிதாவிற்கு தந்தையை பார்க்க இருமுறைதான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அனிதா நீ நன்றாக வளர்ந்துவிட்டாய் என்கிறார் வாஞ்சையுடன் தந்தை சாரு. சிறு வயதிலேயே அவளது தேவைகளை அவளே செய்துகொள்ள கற்றுக்கொடுத்தது அவர் மனதில் நிழலாடியது.

அப்பா எப்படியிருக்கிறாய் என அனிதா கேட்க  not bad ம்மா என தந்தை பதில் தருகிறார்.  5 நிமிடத்தில் போலீசார் முன்னிலையில்  பிரியமான மகளும் தந்தையும் என்ன பேசிவிடமுடியும்.

சில நேரம் விசாரணைகள் இரவு 2 மணிக்கு கூட ஆரம்பித்து அவர் தூக்கத்தை கெடுத்து பலவீனமாக்கும் வகையில் நடக்கும். Annihilation of class enemies பற்றி சம்பந்தமற்ற கேள்விகள் அல்லது போலீசார் சம்பந்தம் என நினைக்கும் கேள்விகளாக அவை அமையும்.

மூன்றாவது வாய்ப்பில்தான் துணைவியார் லீலா, மகள்கள் அனிதா, மதுமிதா, மகன் அபிஜித் லால்பஜார் சிறையில் இருந்த சாருவைக் காண அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜூலை 27, 1972 இரவு 7.30க்கு உடல் சுகமற்ற சாருவை டாக்டர் அறிவுறுத்தலால் போலீசார் கல்கத்தா SSKM மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அதற்கு  சில தினங்களுக்கு முன்னர்   அவரிடம் 27 பக்க தட்டச்சு  அறிக்கையைக்காட்டி கையொப்பமிட வற்புறுத்துகின்றனர். என்ன என சாரு கேட்டதற்கு சாருவின் அறிக்கை என புன்சிரிப்புடன் போலீசார் சொல்கின்றனர். சாரு மறுக்கிறார்.

ஜூலை 27 இரவு சேர்க்கப்பட்ட சாரு மருத்துவமனையில் ஜூலை 28, 1972 விடியற்காலை 4.50க்கு மறைகிறார். சாவிற்கு காரணம் heart disease and cardiac failure என சொல்லப்பட்டது.  சாரு இதய நோயாளி என்பதை சிறையில் இருக்கும்போதே அனைவரும் அறிவர். நேரம் காலம் பார்க்காத நெடும் விசாரணைகள்,கோபத்தை ஏற்படுத்தும் பொறுமையை சோதிக்கும் கேள்விகள் அவரை மேலும் பலவீனப்படுத்தியிருந்தது. சிறை மருத்துவ வசதியில் அவசரத்திற்கான ஆக்சிஜன் சிலிண்டரோ,அவருக்கு தேவைப்பட்ட pethidine வசதியோ இல்லையாம்.

பலநேரங்களில் இதயவலியை சொல்லியும் சொல்லாமலும் சாரு தாங்கிக்கொண்டு சிறைவாழ்க்கையை கடந்துள்ளார்.

CPI  அதிலிருந்து CPM அதிலிருந்து புதிய CPI ML என்ற கட்சி உருவாக காரணமாக இருந்தவர் சாரு. அதன் முதல் பொதுச்செயலராக விளங்கியவர். அவர் CPI (Maoist) என்றுதான் அழைக்க விரும்பினார். சகதோழர்களின் கருத்துக்களை செவிமடுத்து எம் எல் என்பதை அவர் உருவாக்கினார். அந்த இயக்கமும் பல்வேறு பிரிவுகளுடன் 50 ஆண்டுகள் பயணத்தை அனுபவத்தைக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.

சாரு எந்த புத்தகம் கையில் கிடைத்தாலும் அதனை உடன் முடிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தார். பிரஞ்சு சார்த்தர் அவரது துணைவியார் சிமோன் புத்தகங்களையும் படித்தார். Second sex, Being and Nothingness ஆகியவை அவருக்கு பிடித்திருந்தனவாம்.

இந்திய சங்கீதம் குறித்து அறிந்தவராகவும் அவர் இருந்தார். மேற்கு இசையை அவர் தெரிந்துகொள்ள விழைந்தார். மூன்று மாதங்களில் அவை குறித்து பேசும் அளவிற்கு அறிந்துகொண்டார். வங்க இலக்கியம் குறித்து மாணவர் பருவத்திலேயே கருத்து சொல்லும் அளவிற்கு விளங்கினார். அவருக்கு சரத்சந்திரரைவிட தாராசங்கர் பந்தோபத்யாயா பிடித்தவராக இருந்தார். அவர்காந்தியர்’ தெரியுமா எனக் கேட்டதற்கு இருந்தால் என்ன என்றவர் சாரு.

தேசத்தின் மக்கள் சோசலிச சமூகம் ஒன்றில் சுரண்டலின்றி வாழ பெரும்  ஆயுத புரட்சிமாவோயிசம் என்ற பாதையை தேர்ந்தெடுத்ததில் அவருடன் ஒருவர் மாறுபடலாம். ஆனால் அந்தக் கனவை மனதில் தேக்கி வைத்தவர், அதற்காக வாழ்நாளின் சுகங்களை  துறந்து தன் வாழ்க்கையை risk ஆக்கிக்கொண்டவர் என்ற வகையில் இந்திய மக்களின் வீரர்களில் ஒருவராக சாருவும் நிற்கிறார்..

 

Inputs Charu Majumdar The Dreamer Rebel by Ashoke Mukhopadhyay

5-1-2023

 

No comments:

Post a Comment