Skip to main content

காந்தி படுகொலையும் வெறுப்பரசியலும்

 

காந்தி படுகொலையும் வெறுப்பரசியலும்

வெறுப்பு அரசியல் எப்போதும் எதிரியை கட்டமைத்துக்கொண்டேயிருக்கும். எதிரி இல்லையெனில் தனக்கு இருப்பில்லை என்பதை அது நன்றாக அறியும். தன் கோட்பாட்டு மரணம் நேராதிருக்க எதிரியின் மரணம் குறித்து சிந்தை செலுத்தும்.. அப்படியே மரணித்தாலும் புதிய எதிரி ஒன்றை அது எப்படியாவது நிர்மாணித்து அதை செலாவணியாக்க எத்தனிக்கும்.

வெறுப்பு அரசியல் தன்னை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தும். மதம், சாதி, இனம், மொழி என அது பிரதான வடிவங்களில் ஏதோவொன்றையோ இல்லை அனைத்தையுமோ பெறும். 

வெறுப்பரசியல் எப்போதும் எவரையும் திட்டிக்கொண்டேயிருக்கும். அதன் இலக்கியமே வசவுமொழிதான். அதற்கு வரலாற்றை தோண்டிப்பார்க்கும் ஆர்வம் இல்லாமல் இருக்காது. ஆனால் நடந்தவை- கடந்தவை எல்லாம் தனக்கு மோசம் செய்யப்பட்ட- தன்னை அபகரித்துக்கொண்டே நிகழ்வுகளாகவே அது வரலாற்றை சுருக்கிப் பார்க்கும். மோசம் எவரால் என அது பேசித்தான் தன் எதிரியை சுட்டிக்காட்டும். அதற்கு  நிவாரணத்தை பெற்றே ஆகவேண்டும் என கதையாடும். வரலாற்றை நேர்செய்தல் என பெயரிட்டு அதை நோக்கி காய் நகர்த்தும். பழக்கமான பெயர் ஒன்றை அதற்கு இடும். இல்லையேல் பெயரிட்டு அதை பழக்கமாக்கும்.

 பன்முக உரையாடல் என்கிற சாத்தியப்பாட்டிற்கு அது எப்போதும் கதவடைத்தே வைக்கும். பிறர் குரல் என அதற்கு ஏதும் இருக்கக்கூடாது. தன் குரலை எப்போதும் சத்தமாக வைத்துக்கொள்ளும்.  வெறுப்பரசியல் பொல்லாதது. அவருக்கு வேண்டாதவரை கொலை செய்துவிட்டு நியாயம் பேசும்.

காந்தியின் படுகொலைக்கும் இந்த வெறுப்பரசியலுக்கும் உள்ள தொடர்பை விரிவாக பேசும் நூலாக The Murderer, The Monarch and The Fakir by Appu Esthose Suresh and Priyanka Kotamaraju அக்டோபர் 2021ல் வெளியானது. எந்த காந்தி கொலை செய்யப்பட்டார்- அகிம்சாவாதியா , தேசவிரோதியா ,  ராம் ஆனாலும் அல்லா ஏசு ஆனாலும் அன்பே கடவுள் உண்மையே கடவுள் என்று பேசியவரா எந்த காந்தியை என அப்பு எஸ்தோஸ், பிரியங்கா கோடமராஜு என்கிற ஆசிரியர் இருவரும் ஆராய முற்படுகின்றனர்.

அப்பு சுரேஷ் புகழ்வாய்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் பிரியங்கா கேம்பிரிட்ஜ் புலமையாளர்.

இந்த புத்தகம் எந்தவித திசை மாற்றமும் இல்லாமல் காந்தி படுகொலை , அதை இயக்கிய சித்தாந்தம், சித்தாந்தத்தை உருவாக்கிய சாவர்க்கர் போன்றவர்கள், அதை அமுலாக்க விரும்பிய ஹிந்து மகாசபா எனும் ஸ்தாபனம், சதிகார குழு என்பதை  மய்யப்படுத்தியே எழுதப்பட்டுள்ளது. இந்த ஆங்கில நூல் வெளிவந்த அடுத்த ஆண்டிலேயே இப்போது தமிழில் வருகிறது. மூலநூலே தமிழில் தான் எழுதப்பட்டுள்ளதோ என்ற எண்ணத்தை தரக்கூடிய வாசிப்பு அனுபவத்தை அக்களூர் ரவியின் மொழிபெயர்ப்பு தருகிறது.

அக்களூர் இரவி தமிழ் சமூகத்திற்கு தன் மொழிபெயர்ப்பு பணி மூலம் அற்புதமான மேம்பட்ட உழைப்பை நல்கி வருகிறார். அவரின் இந்தியா கருத்தாக்கமானாலும், காந்தி பகத்சிங் ஆனாலும், ஒபாமா ஆனாலும், அரசியல் சிந்தனையாளர் புத்தரானாலும் நல்லதோர் தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல் கருத்தாங்கள் மட்டுமல்லாது ஏராள இலக்கியப் பிரதிகளும் அவரின் உழைப்பால் தமிழுக்கு கிடைத்துள்ளன. தேர்ந்த மொழிபெயர்ப்பாளாராக மூல நூலை சிறப்பாக உள்வாங்கியவராக பயணிக்கும் இரவியின் தமிழ்த் தொண்டு மேலும் சிறக்கட்டும்.



காந்தி புரிந்து கொண்டு பரிந்துரைத்த அஞ்சாமை கொண்ட இந்திய தேசியம் என்பதற்கும் சாவர்க்கர் விரும்பிய  மிலிட்டரைசிடு மஸ்குலின் இந்துத்துவா தேசியம்என்பதற்குமான வேறுபாட்டை இந்நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  தேசியம் என்கிற மகிழ்ச்சிப்பாடு குறித்து Slavoj Zizekன் மேற்கோள் ஒன்றை ஆசிரியர்கள் காட்டுகின்றனர். பிறர் எனும் others கட்டுமானம் குறித்த சுவாரஸ்யமான மேற்கோளது.

விடுதலையடையும் இந்திய தேசம் எனும் கட்டுமான பிரச்னையை கருத்தில்கொண்டு அதை தங்கள் இந்து தேச கட்டுமானமாக ஆக்க விரும்பிய சிலரின் சதியை இந்தப் புத்தகம் கூடுதலான தகவல்களுடன் பேசுகிறது. இராணுவத்துவம்- ஆண்மைத்துவம் என்ற வழிகளில் மட்டுமல்லாமல், சமஸ்தானங்களில் செயல்பட்ட சிலரின் சதி பங்களிப்பையும் இந்த புத்தகம் உரக்கப்பேசுகிறது.

புலனாய்வு பத்திரிகையின் அறம் வழி நின்று ஆசிரியர்கள் தங்கள் முயற்சியை வெளிப்படுத்தியுள்ளனர். துல்லியமான தகவல்களை சேகரித்து எங்கு  எந்த நாளில் எவரெவர் என்ன பேசிக்கொண்டார்கள்- சதி எப்படி கவனமாக நிறைவேற்றப்பட்டது என்பதை இந்த ஆக்கம் பேசுகிறது.

நவீன இந்தியாவின் பெரும் பூகம்பான இந்த நிகழ்வை ஏன் பாடப்புத்தகங்கள் அலட்சியம் செய்தன என்ற கேள்வியை இந்த புலனாய்வாளர்கள் எழுப்பியுள்ளனர். எது எப்படியாயினும் இந்த புத்தகம் காந்தியின் உயரிய சிந்தனைகள் தொடர்ந்த பேசுபொருளாக வழிகாட்டும் திசையாக இருக்கவேண்டும் என்றவிழைவை முன்வைக்கிறது.

                                          II

காந்தி படுகொலைக்கு முதல்நாள் நாதுராம் ஆப்தே கர்கரே பிர்லா மந்திரில் சந்திப்பது என முடிவெடுக்கின்றனர். அந்தக் கோயிலில் இப்படி ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. விஷ்ணு எனும் காக்கும் கடவுள் வேறு எவருமல்லர். அவர் அழிக்கும் கடவுளான ருத்ரந்தான். ருத்ரன் வேறு யாருமல்ல படைக்கும் கடவுளான பிரம்மாதான். அங்கு அவர்களை ருத்ரா தான் வழிநடத்தியிருக்கக்கூடும்.. நாதுராம் விநாயக் தன்னை விநாயக் என்றும் நாரயண ஆப்தே நாரயனன் என்றும் சொல்லி விமானத்தில் பறந்துள்ளனர். அவர்கள் புனைபெயர்கள் எளிதில் இவர்களை அடையாளம் காட்டக்கூடியதாகவே இருந்தன.

ஜனவரி 30 மாலை 5.18க்கு மனுபென்னை சற்று தள்ளிவிட்டு துப்பாக்கியால் மகாத்மாவை சுட்ட கோட்சேவை சார்ஜெண்ட் தேவ்ராஜ் சிங் கையை பிடித்து சில குத்துக்களை விடாமல் இருந்தால் மேலும் பல குண்டுகளை கூட்டத்தினரைப் பார்த்து கோட்சே சுட்டிருக்க வேண்டும். சுற்றி வந்த 10 பேர்கள் கோட்சேவை கட்டுப்படுத்தினர் என்ற செய்தியை ராபர்ட் பைனே தந்திருப்பார்.

இந்த புத்தகத்தில் சதியில் ஈடுபட்டவர்கள்- வாக்குமூலத்தில் இடம் பெற்றவர்கள் என இரு பிரிவை ஆசிரியர்கள் சொல்கின்றனர். சாவர்க்கர் அதில் வாக்குமூல பெயர் பட்டியலில் இருந்தார். இக்கொலையில் தனக்கு தொடர்பில்லை என்பதை மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் உடல், மனம், மொழிகளால் அவர் எப்படி நகர்த்தினார் என்பது விரிவாக பேசப்பட்டுள்ளது. கோட்சே உட்பட பலரும் அதற்கு ஒத்துழைத்த காட்சியையும் ஊகித்து உணரமுடிகிறது.

 மதன்லால் எனும் அகதி காந்தி படுகொலையில் மிக முக்கிய காரக்டர். அந்த பாத்திரம் சதிகாரர்களால் எப்படி பயன்படுத்தப்பட்டது.  பாகிஸ்தான் பகுதியிலிருந்து அகதியாக பெரும் பாதிப்பு அல்லலுக்கு உள்ளான அவன் எப்படி பயன்பட்டான் என்பதும் விரிவாக பேசப்படுகிறது. அவன் குறித்து அறிந்த பேரா ஜெயின் அவர்களின் தகவல்களை மொரார்ஜி தேசாயும் அவர் வழி படேலும் எடுத்துக்கொண்டவிதமும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 இந்த புத்தக ஆசிரியர் இப்படிச் சொல்கிறார். ஜனவரி 20, 1948 கொலை முயற்சி நடந்த அந்த உரிய நேரத்தில் போதுமான தகவல்கள் இருந்தும் கோட்சேவின் அடையாளத்தை தைனிக் அக்ரானி ஆசிரியர் என சொல்லப்பட்டிருந்தும் காவல்துறை தவறியதை சுட்டிக்காட்டுகிறார். உளவுத்துறை நடவடிக்கை எடுக்கத் தேவையான தகவல்கள் முன்னதாகவே கிடைத்திருந்தும் காந்தி படுகொலையை அது தடுக்கத் தவறியது. இது இந்திய உளவுத்துறை வரலாற்றில் மிகப்பெரிய வீழ்ச்சியான சம்பவம் என ஆசிரியர்கள் கருதுவதை நாம் காண்கிறோம்.

இந்து மகாசபா அலுவலகம் இதன் பின்னணியில் இருந்ததை இப்புத்தகம் விரிவாக விவாதிக்கிறது. சாவர்க்கர் தொலைபேசி எண் உடன் இந்து மகாசபா  டிரங்கால் பதிவும் சொல்லப்பட்டுள்ளது.

சாவர்க்கரை யார் யார் எப்போது சந்தித்தார்கள், எங்கு எப்போது பயணித்தார்கள், மிக முக்கிய ஆகஸ்ட் சதி விமானப் பயணம் என பலவும் விறுவிறுப்பான காட்சிகளாக வாசகர்கள் முன் படைக்கப்பட்டுள்ளன. நகர்வாலா உயர் பம்பாய் அதிகாரியின் விசாரணை சாவர்க்கர் தொடர்பை ஆதாரங்களை திரட்டி தந்தது.

ஜனவரி 20 1948 குண்டுவெடிப்பு படுகொலை முயற்சிக்கு முன்னர் கோட்சே, ஆப்தே சாவர்க்கரை சந்தித்ததும், வேறொரு சதிகாரர் கார்க்கரே மதன்லாலுடன் வந்து போனதும் விசாரணையில் பெரிதாக்கப்படாமல் போயுள்ளன. சாவர்க்கரோ தான் எவரையும் சந்திக்கவில்லை என்பதை அழுத்தமாக சொல்லிவந்தார். கபூர் கமிஷன் வெளியாகும்வரை இது போன்ற உண்மைகள் மக்களுக்கு தெரியாமல் வைக்கப்பட்டதை இந்த புத்தக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 நகர்வாலா பிப்ரவரி 1 நாட்குறிப்போ சாவர்க்கர் சந்திப்புகளில்தான் மகாத்மா ஒழிப்பு திட்டம் இறுதியானதாக சொல்கிறது. சாவர்க்கர் வீட்டில் நடந்த சோதனைகளில் கோட்சேவுடன் கடந்த காலத்தில் எழுதிக்கொண்ட கடிதங்கள் கிடைத்தன. ஆனால் நேரடியாக தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

நகர்வாலா டைரி குறிப்பு பிப் 23, 1948ல் சாவர்க்கரின் புரட்சிகர சித்தாந்த ஈர்ப்பே அதை திருப்தி செய்யவே கோட்சே, ஆப்தே, கார்க்கரே இந்த குற்றத்தை செய்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

சாவர்க்கர் அவரது கூட்டாளிகள் தவிர காந்தியின் படுகொலையை வேறு யாரெல்லாம் விழைந்திருப்பார்கள் என்ற கேள்வியுடன் மேலும் தங்கள் ஆய்வை இந்த ஆசிரியர்கள் நகர்த்தியுள்ளனர். இதில் சமஸ்தானங்களின், அங்கிருந்த சில முக்கியஸ்தர்கள் சிலரின் உடந்தையான பாத்திரங்களையும் ஆசிரியர் வெளிக்கொணர்ந்தனர்.

குவாலியர் சார்ந்த்  டாக்டர் பார்ச்சூர் மூலம்  துப்பாக்கி பெற்றது, ஆல்வார் சமஸ்தான பிரதமர் டாக்டர் நாரயண் காரே, சாமியார் ஓம்பாபா எனப்படும் கோபி கிருஷ்ண வியாஸ் குறித்து ஆசிரியர் விரிவாக பேசியுள்ளனர்.  ஆல்வார் சமஸ்தான பிரதமர் பங்கை எவரும் கண்டுகொள்ளாமல் ஆதாரமில்லை என தள்ளியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாமியார் காந்தி படுகொலையை முன்பே சொன்னவர் என்பதுடன் காந்தி கொலையன்று அவர் ஆல்வார் ராஜாவை பார்க்க முயற்சித்துள்ளதும் சொல்லப்பட்டுள்ளது. கோட்சே காரே உறவு மறைக்கப்பட்டது. அது தொடர்பான விசாரணைகள் நடைபெறாத புதிரையும் இப்புத்தகம் வெளிப்படுத்துகிறது. காரே ஆகஸ்ட் 1947ல் அகில இந்திய ஹிந்து தேசிய முன்னணியை டெல்லியில் துவக்கினார். அன்று சதிகாரர்கள் பலர் சந்தித்துள்ளனர்.

 சமஸ்தானங்களில் வலது சித்தாந்தங்களுக்கு ஆதரவாக இருந்த சிலருக்கு காந்தி ஒழிப்பு ஏன் தேவைப்பட்டிருக்கலாம் என்பதை கிரிப்ஸ்க்கு காந்தி எழுதிய கடிதம் போன்ற சிலவற்றை முன்வைத்து இந்த புத்தகம் விவாதிக்கிறது. சமஸ்தானங்கள் இந்து பண்பாட்டின் காவலர்கள் என்ற உளவியலால் இந்து மகாசபா செயல்பட்டதும் காரணமாக இருக்கலாம் என ஆசிரியர் முடிவிற்கு வருகின்றனர்.

சாவர்க்கர் ஜூலை 19, 1944ல் ஜெய்ப்பூர் ராஜாவிற்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், முஸ்லீம்கள் போன்ற பலரிடமிருந்தும் சமஸ்தானங்களின் அதிகாரம், கெளரவம் காக்க அவர் உறுதியளித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமஸ்தானங்கள், ஹிந்து இராணுவமயமாக்கல் ஆகியவற்றில் மூஞ்சே செயல்பாடுகளும் இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.

நாசிக்கில் அமைந்த ஹிந்து இராணுவப்பள்ளியின் அமைப்பே இந்து வரலாறு ஒன்றின் தேவையை வெளிப்படுத்தும் விதமாக ஆக்ரமிப்பாளர்களை அம்பலப்படுத்தி நீக்கும் உளவியலுடன் அமைக்கப்பட்டதை விரிவாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஹிந்துஸ்தான் எனப் பெயரிட்டு, ராம் பூமி என இடத்தை அழைக்கும் சிம்பல்களை செய்தனர்.

மூஞ்சே ஜனவரி 6, 1947ல் படேலுக்கு எழுதிய கடிதத்தில் ஹிந்துக்களின் பாதையில் காந்தியின் குறுக்கீடு குறித்த அதிருப்தியை பதிவு செய்திருந்தார். ஆகஸ்ட் 1947 சதிகாரர்கள் கூடிய கூட்டத்தில் சாவர்க்கருடன் மூஞ்சேயும் பங்கேற்றதை பார்க்கிறோம். விடுதலை கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் அன்று ஆத்ம விசார தினம் அனுசரிக்கலாம் என்ற உணர்வே கூட்டத்தில் வெளிப்பட்டுள்ளது. காவிக்கொடி ஏற்றவும் முடிவானது.

செங்கோட்டை டெல்லியில்தான் முக்கிய அரசியல் வழக்குகள் நடைபெறும். முன்னர்  கடைசி முகல் மன்னர் பகதூர் ஷா வழக்கை பிரிட்டிஷார் அங்குதான் நடத்தினர். 1945 நேதாஜியின் இராணுவத்தினரான அய் என் புகழ் பெற்ற வழக்கும் அங்கு நடந்தது. இப்போது அந்த வரலாற்றில் காந்தியின் கொலை வழக்கும் இடம்பெற்றது. நீதிபதியாக இருந்தவர் ஆத்ம சரண். கோட்சே, ஆப்தே, கர்கரே முன்வரிசை என்றால் பின்வரிசையில் சாவர்க்கர் அமரவைக்கப்பட்டார். ஜனவரி 20,1948 அன்று கையில் இருந்த பிற 5 குண்டுகளையும் கோட்சே  சாதாரண மக்களின் உயிர்ப்பலிகளைப்பற்றி கவலை கொள்ளாது வெடிக்க எண்ணியது விசாரணையில் தெரியவந்தது.

பிப்ரவரி 10, 1949ல் தீர்ப்பு சொல்லப்பட்டது. கோட்சேவிற்கும் ஆப்தேவிற்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. சாவர்க்கர் நீங்கலாக மற்றவர்க்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. போலீசாரின் அலட்சியத்தை ஆத்மசரன் சென்சூர் செய்தார். அப்பீல்களை பரிசீலிக்க சிறப்பு நீதிமன்றம் சிம்லாவில் செயல்பட்டது.

ராம்தாஸ் காந்தி அமைதிக்காகவும் அகிம்சைக்காகவும் நின்ற காந்திஜியை கோட்சே கொன்றது சரியா என்ற கேள்வியுடன் கோட்சேவிற்கு கடிதம் அனுப்பினார். ராம்தாஸ் மற்றும் உறவினர்களுக்கு தன்னால் ஏற்பட்ட மனவலியை கோட்சே தெரிவித்தாலும்  வேறு ஒரு பக்கத்திலிருந்தும் அதைப்பார்க்க வேண்டும். நேரில் சந்திக்க விரும்பவில்லை என பதில் எழுதியதையும் காண்கிறோம். இக்கடிதப் போக்குவரத்து மே 1949ல் நடந்தது.

நவம்பர் 15 1949ல் கோட்சேயும் ஆப்தேயும் தூக்கு ஏற்றப்பட்டபோது அகண்ட பாரதம் என்கிற முழக்கத்தை எழுப்பினர்.

ஆனால் வாஜ்பாய் பிரதமராக வாய்ப்பு கிடைத்தவுடன் பாகிஸ்தான் சென்றபோது அவர் மரியாதை செய்த இடத்தில் ஒன்றாக பாகிஸ்தான் தீர்மானம் இயற்றப்பட்ட 1940க்கான நினைவிடம் இருந்த முரணையும் பார்க்கிறோம்.

ஆப்தேவும் கோட்சேயும் தங்கள் மரணத்துடன் காந்தி கொலையின் ஏராள சதி இரகசியங்களை சேர்த்தே புதைத்துவிட்டனர். அவற்றை தோண்டும் செயல் முழுமையடையாது என்றே தோன்றுகிறது. அவ்வப்போது அந்தப் பயணத்தில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் புதிய தகவல்களை கொண்டு வந்து நாம் அறிய தருகின்றனர்

ஹிந்துத்துவம் தன் அடிப்படைகளை பொதுவான தேசம்- இனம், நாகரீகம் அதாவது ஒரே தேசம்- ஒரே பண்பாடு என எப்படி தொடர்ந்து கட்ட விழைகிறது என்பதையும் இந்த புத்தகம் தன் ஆய்வு பின்னணியில் சேர்த்துக்கொண்டுள்ளது.

கிலாபத், மாப்ளா கிளர்ச்சிகள் குறித்த பார்வைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்துக்கள் அனைவரையும் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டியமைப்பதில் சாதியம் என்பது பெரும் பலவீனமாக இருப்பதை சாவர்க்கர் உணர்ந்ததும் பேசப்பட்டுள்ளது.

இன்றுலவ் ஜிஹாத்’ தடுப்பு சட்டங்கள் என பாஜக ஆளும் மாநிலங்களில் உரக்கக்குரல்கள் வருவதைக்காண்கிறோம். இந்த சொல்லாட்சி எப்போது முதலில் பயன்படுத்தப்பட்டது என்பதை இந்த புத்தகம் விவரிக்கிறது. ஹிந்துக்களை காந்தியின் அகிம்சைக்கொள்கை பலவீனமாக்கியதால் சாவர்க்கரின் ஹிந்துக்களை இராணுவமயமாக்கல் என்ற மாற்று முன்வைக்கப்பட்டதை இந்த புத்தகம் அலசுகிறது.

 மனசாட்சியை மூடிவைத்துவிட்டு எந்தவித உறுத்தலும் இல்லாமல் கோட்சே புகழ்பாடல்கள் எப்படி கட்டமைக்கப்படுகின்றன என்பதையும் இந்த புத்தக ஆசிரியர்கள் விசாரிக்கின்றனர். காந்தியை தவறுக்கு மேல் தவறு செய்தவர் என்கிற கோட்சேவின் தரப்பு கட்டுடைப்பு உரை பெரிதும் கொண்டாடப்படுவதையும் காண்கிறோம். காந்தியை கோட்சே பாகிஸ்தானின் தந்தை என கேலி செய்ததையும் காண்கிறோம்.

இந்த நூல் ஆகஸ்ட் 8, 1947ன் சாவர்க்கர், கோட்சே, ஆப்தே விமான பயணத்துடன் துவங்கி அதிலிருந்து காந்தியை அப்புறப்படுத்த கொலை செய்திட எடுத்திட்ட சதிகளை நுணுக்கமாக பின்னித்தருகிறது. காந்தி கொலை தொடர்பாக வேறு எந்த நூல்களையும் படிக்காத வாசகருக்கு அந்த பின்புலத்தை அவர்களின் கோட்பாட்டு எரிச்சல் சார்ந்த அம்சங்களுடன் சேர்த்தே வழங்குகிறது. காந்தி கொலை குறித்து வேறு நூல்களை வாசித்தவர்களுக்கு அக்கொலை தொடர்பான சிறு சிறு தகவல்களை இணைத்து வாசிக்கும் வாய்ப்பைத் தருகிறது.

இந்த புத்தகம் நம்முன்னரும் இந்தக் கேள்விகளை வீசாமல் இல்லை. காந்தி என்பவர் யார்? இலட்சக்கணக்கானவரின் மனதில் அன்பையும் மதிப்புணர்வையும் விசிறிவிட்டவரா? சத்யாகிரகத்திற்கு  பலவீனமான தன் உடலை தியாகம் செய்தவரா? நம் மத்தியில் இருந்த முரட்டு மனிதர்களை பக்குவாக்க முனைந்தவரா? யார் அவர்.. இன்னும் அவர் குறித்த கேள்விகள் அவரவர் அனுபவத்தின்படி எழலாம். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்தல் படி சொல்தல்- செல்தல் என  நின்று காட்டிய அப்பெருமகனார் மனித குலத்தின் பெருந்தேடலாளராகவே இன்னும் பல காலத்திற்கு இருப்பார் எனத்தோன்றுகிறது.

17-12-2022                                                                     - ஆர். பட்டாபிராமன்

 

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா