https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, January 21, 2023

அஜிதனின் மைத்ரி

 

அஜிதனின் மைத்ரி

                  எஸ். ஹேமலதா 

ஒரு பயணக்கதையா? ஆம்

ஒரு காதல் கதையா?  ஆம்

ஒரு தன் மன விசாரப் புரிதலா?  ஆம்.

உத்தராகண்ட்  பிரதேசத்தில் வாழும் பஹாடி இன மக்களின் கலாசார பண்பாட்டு விவரணையா?  ஆம்.

இப்படி பல 'ஆம்' களை சொல்ல வைக்கிறது இந்நாவல்.

நாவலாசிரியர் அஜிதன், எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் மகன். தந்தையே  குருவாக அமைந்தது பற்றி அவருடைய மகிழ்வும் அவருக்கு இந்நூலை சமர்ப்பிப்பதில் நெகிழ்ச்சியும் கொள்வதாக முன்னுரையில் அஜிதன் குறிப்பிடுகிறார்.

பயணம் தொடங்கும் பொழுதே நாமும் அவருடன் இணைந்து விடுகிறோம். மந்தாகினி ஆற்றுடன் கூடவே நெளிந்து வளைந்து கொண்டைஊசி வளைவுகளில் நாவல் ஊடே நாமும் பயணிக்கிறோம்.

கல்லூரிப் பெண்ணான மைத்ரிபன்வார் நிகழ் தலைமுறைப் பெண். நாவலின் நாயகன் ஹரனை ஜீப் பயணத்தில் சந்திக்கிறாள்.  முதல் சந்திப்பிலேயே மைத்ரி பாலின வேறுபாடு எதையும் பொருட்படுத்தாத சிந்தனையை வெளிப்படுத்துகிறாள். அதேபோல கடைசியில் ஹரனுடன் உறவு கொண்டு பிரியும் போதும் உணர்ச்சி வசப்படாமல் யதார்த்தமாக செல்வது மிகவும் liberated ஆன மைத்ரியை வாசகருக்கு உணரவைக்கும்.

மைத்ரி கதாபாத்திரம் மூலமாக இயற்கையை, பண்பாட்டை, உத்தராகண்டின் உணவு ,திருமண முறைகளை, பூக்களை, பூத்திருவிழாவை அஜிதன் சொல்லும்போது இப்புவி வாழ்வின்  நெருக்கத்தை உணர்கிறோம்.

 

ஜீப்பில் மிலிட்டரிகாரருடனான உரையாடலில் ஆசிரியரின் நகைச்சுவையை ரசிக்கலாம். ஜீப்பை முழுங்கும் பாம்பு, அண்டரண்ட பட்சி, போன்றவற்றை  மிலிட்டரிகாரர் விவரிப்பது தேர்ந்த ஹாஸ்யமாக ஹரனுக்குப்படும். ஆனால் அவை கதையாடல்கள் எனவும் அவன் மனம் உணர்த்தும். நாடு பாதுகாப்பான கையில்தான் இருக்கு என இரட்டை அர்த்த தொனியில் ஹரன் தன் எதிர்வினையை தருவான். உத்தராகண்ட் வெள்ளம்  கதைமாந்தர்கள் மூலம் பேசப்படுகிறது.

ஒவ்வொரு வினாடியும் இயற்கையை உற்று நோக்கும் ஹரன்  துடிப்பான இளைஞன். அவன் அஜிதன் போன்ற இன்றைய இளைஞனாகவும் இருக்கலாம்.

ஒரு நாள் பயணமாக கச்சர் எனப்படும் கோவேறு கழுதை மீதேறி மைத்ரியின் பிறந்த ஊர் செல்லும் போது ஆசிரியர், மைத்ரி பாத்திரத்தின் வழியாக அணுஅணுவாக அந்த நிலத்தை நம்முன் விரிக்கிறார்.   புக்யால், தேவதாரு காடு, வழியில் தென்படும் பஹ்ரல் ஆடுகள், போட்டியா இன மக்கள், அவர்கள் காவல் நாய்கள், பறவைகள் என பட்டியல் நீளும்.  உணவு பற்றிய விவரணங்களும், இசை பற்றிய விளக்கங்களும்  ஹரனுக்கு விருப்பமானவையாக  இருக்கின்றன.  அம்மக்களின் வாத்தியங்கள், நகைகள் என அலுப்பு ஏற்படாமல் செய்திகளை அடுக்கிக் கொண்டே கதை நகர்த்தும் விதத்தில் பிரமிக்க வைக்கிறார் அஜிதன். இரவு நேரத்தில்  யானைத்தோல் போர்த்தியதைப் போன்ற குளிர்ந்த மலைச்சிகரத்தில் நிற்கும் போது அந்த கடுங்குளிர் நம்மையும் பற்றிக் கொள்கிறது.

கவிதையும் கதையுமாக ஆங்காங்கே சிற்சில ஆங்கில சமஸ்கிருத உத்தராகண்டின் கர்வாலி பதங்கள் சுவையாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

உயிராசையின் மற்றுமொரு லீலை .  லட்சம் கோடி விண்மீன்களாக மைத்ரி சூழ்ந்திருந்தாள் என்ற கனவு நிலையில் ஹரன்  இந்நாவலில் வாழ்கிறான்.

 

17-1-2023

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment