அத்வானியின் எனது நாடு எனது வாழ்க்கை
திரு
அத்வானி அவர்கள் எழுதிய My Country My Life 2008ல் வந்த புத்தகம். ஆயிரம் பக்கங்கள்
அளவிலான நீள அகல புத்தகமது.
பல
மூர்க்கமான வலதுசாரி எழுத்துக்களை ஒப்பிடுகையில் வலது சிந்தனைகளை சற்று ஆக்ரோஷம் குறைவாக அரசியல் இலாபத்தை கருத்தாக வைத்துக்கொண்டு பின்னப்பட்ட
ஆக்கமாக பக்கங்களை கடந்துகொண்டிருக்கும்போது பார்க்க முடிந்தது.
ஜனசங்கின்
பிறப்பு, நேரு காலம், ஷியாமா காஷ்மீர் சிறையில் இறப்பு, தீனதயாள் கோழிக்கோடு மாநாட்டில்
தலைமை பொறுப்பெடுத்து இரண்டே மாதத்தில் இரயில் பயணத்தில் மர்மமாக இறந்து போனது, ரயில்வே
டிராக்கில் கிடத்தப்பட்டு கிடந்தது, மாநிலங்களில் காங்கிரஸிற்கு மாற்றாக கம்யூனிஸ்ட்களுடன்
சேர்ந்து ஜனசங்கமும் அரசாங்கத்தில் பங்கேற்றது, ஜனசங்கத்திற்கு வாஜ்பாய் தலைவரானது,
வங்கதேச உதயம் - இந்திரா அம்மையாருக்கு துர்கா பட்டம், ஜனசங்கத்தின் தேர்தல் தோல்விகள்
என பல நிகழ்வுகள் முதல் 200 பக்கங்களுக்குள் வந்துவிடுகின்றன.
தீனதயாளின்
Integral Humanism எனும் ideologyயை மற்ற வலதுசாரிகள் போலவே அத்வானியும் மிக உயர்வான
ஒன்றாக காந்தி, லோகியாவிற்கு அடுத்து தீனதயாள் எனும் originality என்ற புகழாரத்துடன்
வைத்துள்ளதைப் பார்க்கிறோம்.
பல
சுவையான அரசியல் செய்திகளுடன் இந்த பெரும்
புத்தகம் நகர்கிறது. அதில் ஒன்று அத்வானி 1973 பிப்ரவரியில் கான்பூர் அமர்வில் ஜனசங்க
தலைவரான நிகழ்வு. அப்போது அவர்கள் தலைவர்களைத்தேடி அல்லாடியிருப்பார்களோ என்ற உணர்வை
எனக்கு அந்நிகழ்வு உருவாக்கியது.
1972லிருந்தே
வாஜ்பாய் தோல்விக்கு பொறுப்பேற்று இனி தலைவராக நீடிக்கப்போவதில்லை என சொல்லத்துவங்கிவிட்டார்.
அத்வானியை எடுத்துக்கொள்ள வற்புறுத்துகிறார். அத்வானி நான் மக்களிடம் பேசக்கூடியவனா..அதுவும்
வாஜ்பாய் போன்ற பெரும் பேச்சாளருக்கு அடுத்து பேசத்தெரியாத தான் பொருத்தமா என்பது அத்வானியின்
தயக்கம். தீனதயாள் பேச்சாளரா அவருக்கு நல்ல
மரியாதை ஏற்படவில்லையா என வாஜ்பாய் உற்சாகமூட்டினார். தயக்கம் நீடித்தது.
மூத்தவர் குவாலியர் ராஜமாதா விஜயராஜே சிந்தியாவை அணுகுவோம்
என்றார் அத்வானி. வாஜ்பாயும் அத்வானியும் குவாலியர்
ராஜமாதாவிடம் சென்றனர். அம்மையார் அவரின் குருவிடம் கேட்டார். குரு வேண்டாம் எனச்சொன்னதால்
தலைமையேற்க மறுத்துவிட்டார்.
அடுத்து
டாக்டர் பாய் மகாவீரை பார்க்கச்சென்றனர். அவர் பாய் பரமானந்தாவின் மகன். டாக்டரின் மனைவி தலைமைப் பதவி வேண்டாம் எனச்சொல்லிவிட்டார்.
வேறு வழியில்லாமல் அத்வானி பொறுப்பேற்க வரநேர்ந்தது.
ஜனசங்ககால
தலைவர்கள் தங்களை வலதுசாரிகள் என அழைப்பதை ஏற்காமல் centrist party என அழைத்துக்கொள்வர்.
அத்வானியும் தலைமையுரையில் 1973ல் சிலநேரம் நமது நடவடிக்கைகள் வலது போல இருக்கலாம்-
சிலநேரம் இடது போலவும் இருக்கலாம். Truth is that neither rightist nor leftist
but we are forward looking எனப் பேசினார்.
பால்ராஜ்
மாதோக் என்பாரும் ஜனசங்கத் தலைவராக இருந்தவர். தீனதயாளையும் வாஜ்பாயியையும் விமர்சித்தவர். வலது அரசியலிருந்து
பிறழ்வுகளை செய்கிறார்கள் - கம்யூனிஸ்ட்டுடன் ஏன் கூட்டணி, லோகியாவுடன் நெருக்கம் ஏன்
போன்றவை அவரது விமர்சனங்கள். சமூகத்தில் தீண்டாமை கூடாது என்பது எவ்வளவு அவசியமோ அதேபோல்
அரசியலில் தீண்டாமை கூடாது என்பது தீனதயாள் பதிலாக இருந்தது.
2
இந்திராகாந்தி அம்மையார் எதிர்த்த திரு மொரார்ஜி அவர்களின் உண்ணாநோன்பு , குஜராத் தேர்தல் , எதிர்கட்சிகள் ஒற்றுமையால் அதில் காங்கிரசின் தோல்வி, இந்திரா தேர்தல் செல்லாது என்கிற அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு, ஜூன் 25 black day emergency போன்ற 1974-75 நிகழ்வுகளை அத்வானி அடுக்கிச் சொல்கிறார்.
சிறை பிடிக்கப்பட்ட ஜனநாயகம் என்பது அவசரக்கால நிலை குறித்த அத்தியாயம். அதில் அத்வானி எழுதும் முதல்வரியே மார்க்சியர்கள் அதிகம் பயன்படுத்தும் concept ஆக உள்ளது. தவிர்க்கமுடியாமல் அத்வானி சிந்தனையிலும் அந்த கருத்தாக்கம் அமர்ந்துவிட்டது போலும். அவரது வரியில்
When the idea grips the mind and hearts of a large number of people, it
becomes a motive force of history.
வங்கதேச விடுதலைக் காலத்தில் போடப்பட்ட external democracy நீடித்துக்கொண்டிருந்தது. நாட்டின் சூழலைக் கணக்கில்கொண்டு அதன் பாதுகாப்பை முன்வைத்து உள்நாட்டிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அமைச்சரவை ஆலோசனை பெறப்படாமல், பிரதமர் ஆலோசனைப்படி குடியரசுத்தலைவர் பக்ருதின் ஒப்புதலை வழங்கியிருந்தார். உள்துறை அமைச்சர் பிரம்மானந்தரெட்டிக்கே முடிவுதான் சொல்லப்பட்டதாக அத்வானி குறிப்பிடுகிறார்.
எமர்ஜென்சி குறித்து ஏராள பதிவுகள் வந்துள்ளன. அத்வானி சில புத்தகங்களை தன் வாதங்களுக்கு துணையாக வைத்துக்கொண்டு எழுதியுள்ளார்.
National Herald editorial வரிகள் சிலவற்றை அவர் எடுத்தாண்டுள்ளார். அதில் ஒரு பாரா இப்படி எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்
By stressing the need of the strong centre the Prime Minister has
pointed out the strength of the Indian democracy. A weak centre threatens the
country’s unity, integrity and very survival of freedom. She has posed the most
important question. If the country’s freedom does not survive, how can
democracy survive?
வேறு
ஒரு உரையில் பிரதமர் இவ்வாறு பேசினாராம். The
nation is more important than democracy. The aim of the opposition parties was
to paralyse the Govt and indeed all national activity and thus walk over the
body of the nation…A few more steps would have led to disintegration, which
would have exposed us to foreign danger
வழக்கமான ஆள்வோர் ஆட்சியைத் தக்க வைக்கும் மொழியிலேயே இந்திரா அம்மையாரும் அத்தருணத்தில் பேசியுள்ளதைக் காண்கிறோம்
பெங்களூரில் வாஜ்பாய், அத்வானி மட்டுமல்லாமல் அங்கு பாராளுமன்ற அலுவல் தொடர்பாக வந்த மதுதந்தவதேயும் கைது செய்யப்பட்டு சிறையில் எதிர் எதிர் அறையில் வைக்கப்படுகின்றனர். அத்வானி அங்கு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் உரையாடியதைக் குறிப்பிடுகிறார்.
அப்படியொரு சிறுவன் ரோதக். பிக்பாக்கட் வழக்கில் உள்ளே வைக்கப்பட்டவன். ரோதக் போல பல சிறுவர்களை வைத்து தொழில் நடத்தும் முதலாளிகள் உண்டு. ரோதக் அடித்த ரூபாய்களை முதலாளியிடம் கொடுக்கவேண்டும். அவர் தரும் பணத்தை அச்சிறுவர்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்லவேண்டும். மாட்டியவர்களை மீட்பது முதலாளியின் தர்மம். அவரும் ஏமாற்றாமல் காப்பார்றுவார். தர்மம் என்பதைவிட அவர் தொழிலுக்கு தேவை. ரோதக் அத்வானியிடம் பிக்பாக்கேட்டை எப்படி சிறு பிளேடு மூலம் செய்யமுடியும் என்ற சாகச கதைகளை சொன்னான். ஏன் படிக்கப்போகவில்லை என அத்வானி கேட்டபோது, படித்தால் இதைவிட அதிகமாக சம்பாதிக்க முடியுமா என்ன என்ற எதிர்கேள்வி அச்சிறுவனிடமிருந்து வந்தததாம்.
3
ஜனதா கட்சியை எமர்ஜென்சி கால அனுபவங்களைக்கொண்டு கம்யூனிஸ்ட்கள் அல்லாத பல கட்சிகள் இணைந்து அமைக்கின்றனர். காங்கிரஸ் ஸ்தாபனம் சார்ந்தவர்கள், ஜனசங்கம் சார்ந்தவர்கள், சரண்சிங் போன்றவர்களின் முன்முயற்சிக்கு ஜெகஜீவனும் வலு சேர்க்கிறார். ஜனதா தோன்ற அச்சாணியாக ஜெயப்பிரகாஷ் நாராயண் விளங்கினார்.
எமர்ஜென்சி சிறைவாசம் முடிந்து தலைவர்கள் விடுவிப்பு மெதுவாக துவங்குகிறது. இரு பக்கத்தினரும் ஒருவரை ஒருவர் பாசிஸ்ட்கள் என முத்திரைக் குத்திக்கொள்கின்றனர்.
தாத்தாவைப் பார்க்கப்போகிறோம். புது வீடு வேலை முடியும் தருணம் என சங்கேத மொழியில் வெளியே வந்த மது தந்தவதே உள்ளே இருந்த ஜனசங்கத்தின் தலைவர் அத்வானிக்கு தந்தி அனுப்புகிறார். இங்கு புதுவீடு என்பது புதிய கட்சி. தாத்தா ஜேபி.
மொரார்ஜி அவர்களின் வீட்டில் ஜனதா கொடி எப்படி என்ற கூட்டத்திற்கு 10 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். சுதந்திராவின் பிலுமோடி நீலம் இருக்கட்டும் என்றார். சரண்சிங் பச்சைதான் விவசாயிகளை குறிக்கும் என்றார். சிக்கந்தர் பக்த் பச்சை என்றால் பாகிஸ்தானையும் குறிக்கும் என்றார். அத்வானி காவி நிறம் என்றார். மொரார்ஜி green and saffron ஏர் உழவனுடன் என்று விவாதத்தை முடித்து வைத்தார்.
1977 தேர்தலில் ஜனதா 295 இடங்களை 41.32 சத வாக்குகளை வென்று ஆட்சிக்கு வந்தது. இந்திரா தலைமையில் காங்கிரஸ் 154 இடங்களை 34.52 சத வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தது. முப்படைத்தளபதிகளை சந்தித்து இந்திராஆலோசித்ததாகவும், பெரும்பான்மை முடிவுகளையே தாங்கள் ஆதரிக்க முடியும் என அவர்கள் தெளிவு படுத்தியதாகவும் ஒரு தகவலை அத்வானி பதிவு செய்கிறார்.
ஜனதா என்ற ஒரே கட்சியானாலும் உட்பிரிவுகள் தங்கள் அடையாளங்களை வைத்திருந்தன. முந்திய ஜனசங்கம் 93 எம்பிக்களையும், ஸ்தாபன காங்கிரஸ் 44, சரண்சிங் லோக்தல் 71, சோசலிஸ்ட்கள் 28, ஜெகஜீவன் கட்சி 28 இடங்களையும் பெற்றதை அத்வானி தந்துள்ளார்.
காங்கிரஸ் தோல்வி என்றவுடன் அது குறித்த பிடிஅய் செய்தியை தயாரித்த கே பி கிருஷ்ணவுன்னியை அவரது பாஸ் அவசரப்படாதே wait என்கிற அறிவுறுத்தலை தந்ததாகவும் அத்வானி சொல்லிச்செல்கிறார்.
எமர்ஜென்சி காலத்தில் பறிக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம் தனிக்கதையானது. ஜனதா ஆட்சியில் அத்வானி தகவல் ஒலிபரப்பு அமைச்சரானபோது வெள்ளை அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டது.
அதேபோல் ஜனதா ஆட்சிக்கு பிரதமர் யார் என்ற போட்டியும் சுவாரஸ்யமான கதை.
4
அத்வானி அவர்களின் My Country My Life புத்தகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துவக்கம் பற்றிய கதையாடல் 300 பக்கங்களை கடந்த பின்னர்தான் துவங்குகிறது.
ஜனதாவிலிருந்து வெளியேறிய பின்னர் என்ன பெயரில் இயங்குவது என்பது விவாதமானது. அங்கிருந்த hardcore இந்துத்துவா இலட்சியவாதிகள் மீண்டும் ஜனசங்கத்தை புதுப்பிப்பது என்பதில் பிடிவாதம் காட்டினர். ஜனதா, ஜெயப்பிரகாஷ், மொரார்ஜி, அசோக மேத்தா போன்றவர்களுடனான வாஜ்பாய், அத்வானி பழக்கம் அவர்களை சற்று flexible tactics நோக்கிய பார்வைக்கு அழைத்துச் சென்றது. சமரசம் எட்டப்பட்டது.
முன்பிருந்த ஜனசங்கத்திலிருந்து பாரதிய என்ற பதத்தையும் ஜனதா கட்சியிலிருந்த புதிய அனுபவமும் சேரவேண்டும் என்பதால் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரை தேர்ந்தெடுத்தனர். தங்கள் அடிப்படை அடையாளத்துடன் அதேநேரத்தில் cadre based ஜனசங்கத்திலிருந்து cadre based mass based intermixture என்கிற அமைப்பு முறைக்கு தங்களை இலகுவாக்கிக்கொள்ள முடிவெடுத்தனர்.
ஏப்ரல் 6 1980 ல் கட்சி துவக்க நிகழ்வில் காந்தி, ஜேபி, ஷியாமா முகர்ஜி, தீனதயாள் தங்களை ஈர்க்கும் தலைவர்கள் என வாஜ்பாய் அறிவித்தார். மாநாட்டில் ஷியாமா, தீனதயாள் படத்துடன் ஜேபி படமும் இருந்தது. காந்தி படம் இருந்த விவரத்தை அத்வானி பதிவிடவில்லை.
தீனதயாளின் Integral Humanism என்பதுடன் Gandhian Socialism என்பதை ஏற்க முடிவெடுத்தனர். காந்திய சோசலிசம் என்ற பதம் கடுமையான விவாதத்தை உள்ளே உருவாக்கியது. குவாலியர் மாதா விஜயராணி சிந்தியா தனது மாற்று ஆவணத்தை வைத்து ஏற்கவே முடியாது, நீங்கள் காங்கிரசின் நகலாக முயற்சிக்காதீர் என எச்சரித்தார்.
வாஜ்பாய் அத்வானி டீம் காந்திய சோசலிசம் அவசியம் ஏன் என்பது குறித்து பேசினாலும் கட்சியில் ஆங்காங்கே அது குறித்த அதிருப்தி குரல்கள் பலமாகவே வந்தது. மாநாட்டில் சூரியன் உதயம் என்றால் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை வாஜ்பாய் தந்தார்.
ஏன்
காந்திய சோசலிசம் என்பதை வாஜ்பாய் விளக்கினார்.
ஜனதா கட்சி காந்திய ஆர்வலர்கள் பலர்
இருந்த இடம். அங்கிருந்து பிரிந்து
வந்த நாம் அதன் அடையாளத்தை
முற்றிலுமாக விடமுடியாது என்பது அதன் சாரம்.
தீனதயாளின் ஒருங்கிணைந்த மனிதாபிமானம் ஏழை எளியவர்களின் முன்னேற்றத்தை அடைப்படையாகக் கொண்டது. காந்திய சோசலிசத்துடன் அதில் முரண்பாடில்லை. காந்தியைப்போலவே அமைதி வழி மாற்றம் என்பதையே தீனதயாள் பேசினார். கம்யூனிஸ்ட்களின் வர்க்கப்போராட்ட வழியை நாமும் ஏற்கவில்லை. ஏழைகளுக்கு குரல்கொடுக்க வலுவான மாற்றாக, கம்யூனிஸ்ட்களைவிட நாம் காங்கிரசிற்கு மாற்றாக எழ வாய்ப்பு இருக்கிறது.
ஜனசங்க
வழியில் வராமல் நமது ஆக்கபூர்வ
வேலைகளை, காங்கிரசிற்கு மாற்றான போராட்ட வழிகளை
கண்ட பலர் நம்முடன் இணைந்துள்ளனர்.
அவர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில்
நாம் நமது பழைய rigidityயை
வைத்துக்கொள்ளமுடியாது போன்ற காரணங்களும் வெளிப்படுத்தப்பட்டன.
வாஜ்பாய் காரணங்களை அடுக்கிப்போனாலும் அங்கிருந்த பழைய பழகிய மனங்கள் மாற மறுத்தன. இந்திரா அம்மையார் படுகொலை, 1984 தேர்தல் தோல்வி கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்தன. விவாத வேறுபாடுகளை முடிவிற்கு கொணர 12 பேர் கமிட்டியை கட்சி அமர்த்தியது. அதில் வாஜ்பாய் அத்வானி இடம் பெறவேண்டாம், சுதந்திரமாக விவாதித்து முடிவை சொல்லட்டும் என்றனர். எவர் கமிட்டி அமைக்கிறாரோ அவருக்கு முழு விரோதமாக கமிட்டிகள் பொதுவாக செயல்படுவதில்லை.
பாஜக அமைத்த 12 பேர் வேலைக்குழு தனது முடிவுகளை அளித்தது. ஜனதாவில் ஜனசங்கை கலைத்துவிட்டு சேர்ந்தது சரி. எமர்ஜென்சியில் போராடியது சரி. Dual membership பிரச்னையை சிலர் ஊதிப்பெருக்கி ஜனதாவில் ஒற்றுமையை சிதைத்ததால் வெளியேறியதும் சரி. பாஜக அமைத்தது சரி.
தீனதயாள் வழிகாட்டிய Integral Humanism தான் கட்சியின் தத்துவ வழிகாட்டல். Gandhian Socialism என்பதை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதை reject செய்யவேண்டிய அவசியமில்லை. அந்தக்குழு கீழ்கண்ட 5 அம்சங்களை five basic commitments of BJP என்று வரையறுத்துக்கொடுத்தது.
1. Nationalism and National
Integration
2. Democracy
3. Gandhian approach to socio
economic system that is society based on equality and freedom from exploitation
4. Positive secularism Sarva
Partha Samabhaav
5. Value based politics.
கமிட்டியின்
அறிக்கை 1985 அக்டோபர் தேசிய கவுன்சில் கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டு அமைப்புநிலையில் உரியவாறு சேர்க்கப்பட்டன
5
டிசம்பர் 2 ,1989ல் பிரதமராக வி பி சிங் பொறுப்பேற்றார். அவருடைய ஜனதா தளத்திற்கு அப்போது 141 எம் பிக்கள் மட்டுமே இருந்தனர். காங்கிரஸ் ஆட்சியை அனுமதிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் வெளியிலிருந்து ஆதரவு என பாஜகவும் இடதுசாரிகளும் உடன் நின்றனர்.
இந்த ஏற்பாடு குறித்து தனது account ஒன்றை அத்வானி அவரது புத்தகமான My Country My Life ல் தந்திருப்பார். இன்று பார்க்கும்போது சற்று சுவையான தகவல்களாகவும் அவை இருக்கின்றன. ஏற்பாடு என்னவென்றால் வாரந்தோறும் பிரதமர் வி பி சிங் இல்லத்தில் விருந்துடன் சந்திப்பு உரையாடல் இருக்கும். பாஜக சார்பில் வாஜ்பாய், அத்வானி செல்வர். சிபிஅய் சார்பில் இந்திரஜித் குப்தாவும், சிபிஎம் சார்பில் சுர்ஜித்தும் செல்வர். ஜோதிபாசு டெல்லியில் இருக்கும்போதெல்லாம் இந்த சந்திப்பிற்கு அழைக்கப்படுவார். பெரும்பாலும் செவ்வாய் அன்று சந்திப்புகள் இருக்கும்.
இந்த சந்திப்புகளில் சிபிஎம் விட சிபிஅய் தலைவர்கள் சற்று சகஜமாக நேர்மையாக இருந்த பதிவையும் அத்வானி செய்கிறார். இந்திரஜித் குப்தா குறித்து தன் மேலான மதிப்பீடுகளையும் தருகிறார். அத்வானியின் வரிகளில்..
Of them, the person who impressed me the most was Indrajit Gupta. He
was a man of impeccable integrity and great simplicity, besides being an
outstanding parliamentarian. There was a perceivable naturalness in the way he
interacted with Atalji and me. In contrast, leaders of CPM were always
conscious of being politically correct in their dealings with us.
வி பி சிங் அரசு அமைந்த 6 மாதங்களுக்கு பின்னர் ஜோதிபாசுவிடமிருந்து ஒரு செய்தி தூதுவர் மூலம் வந்ததாம். வி பி சிங் அரசாங்கம் சரிவர செயல்படவில்லை. அது குறித்து அத்வானி, வாஜ்பாய், ஜோதிபாசு மூவரும் விரன் ஷா எனும் தொழிலதிபர் வீட்டில் சந்திக்கலாம் என்பது பாசு அனுப்பிய செய்தியாக அத்வானி சொல்கிறார்.
ஒன்று கல்கத்தாவில் சந்திக்கலாம் அல்லது டெல்லியில் பாஜக அலுவலகத்தில் சந்திக்கலாம் ஏன் மூன்றாம் நபர் வீட்டில் என பாசுவிடம் கேட்கப்பட்டதாம். இல்லை இல்லை என்று பாசு அனுப்பிய செய்தி அத்வானி வரிகளில்
No one should know about our meeting. Especially people in my party
would not like it.
பாசு அறிவுறுத்தல்படி பின்னால் மேற்கு வங்க கவர்னரான அந்த விரன் ஷா வீட்டில் சந்திப்பு நடந்ததாம். விவாதம் என்ன என அத்வானி தரவில்லை. தனக்கு ஏற்பட்ட மனப்பதிவை மட்டும் தருகிறார்..அதாவது அவர்கள் hypocritical outlook தெரிந்தது என்கிறார்.
வேறு பதிவும் இப்பக்கங்களில் அத்வானியால் செய்யப்பட்டுள்ளது. காங்கிரசை தனிமைப்படுத்த நாடாளுமன்ற ஒத்துழைப்பு அவசியம் என கம்யூனிஸ்ட் எம்பிக்கள் தெரிவிப்பர். ஒருமுறை அத்வானி வேண்டுகோள் விடுத்தாராம். இரு கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் எப்படி ஒத்துழைக்கலாம் என கட்சி அலுவலகங்களில் சந்தித்து பேசுவோமே என்றாராம். அதற்கு அவசியமில்லை. பாராளுமன்ற lobby ல் சந்தித்தால் போதும் என பதில் கிடைத்ததாம்.
அத்வானி ஏன் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு செல்வதில் நாட்டமாக இருந்தார் எனத் தெரியவில்லை. வருகிறேன் எனச் சொல்பவர்களை இடதுசாரிகள் அங்கு வரவேண்டாம் என ஏன் சொன்னார்கள் என்ற உளவியலும் ஆய்வுக்குரியது. இதை பொலிட்டிகலாக பார்க்கும் கண் வேண்டும். இதையெல்லாம் ’டாக்டிக்ஸ் – ஹிப்போகிரசி’ என்றெல்லாம் பார்க்காமல் அரசியல் சகஜம் என புரிந்துகொள்ளும் மனம் வேண்டும்.
நாம் விடுதலையின் 75 ஆம் ஆண்டு நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம். விடுதலையின் பொன்விழா 50 ஆண்டு கொண்டாட்டத்தை பாஜக அத்வானி அவர்களின் ஸ்வர்ண ஜெயந்தி யாத்ரா வழி நடத்தியது. நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அறியப்பட்ட விடுதலை வீரர்களின் நினைவிடம் சென்று மக்களை சந்திக்கும் ஏற்பாட்டுடன் அந்த யாத்திரை நடந்தது.
‘அசிங்கம் பிடித்த அரசியல்வாதி ‘ என்ற பெயரை எந்த அரசியல் முழுநேர ஊழியரும் பெற்றுவிடக்கூடாது என்ற உரை ஒன்றையும் அத்வானி இத்தருணத்தில் தந்தார். ஊழல் பெரும்பாலும் மேலிருந்து கீழாகத்தான் வழிகிறது. நமது அரசியல் முறை ஏற்படுத்தியுள்ள களங்கமிது. எனது கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. விடுதலைக் கால அரசியல் பெரும் இலட்சியங்களின் கனவாக பயணித்தது. எனவே ugly politician என்று மக்களிடம் ஏற்பட்டுள்ள எண்ணத்தை அனைத்து அரசியல் முழுநேர பணியாளர்களும் மாற்ற முயற்சிப்போம் என்று சென்றது அவர் உரை.
கீழ்கண்ட உறுதிமொழியை அவர் வாசிக்க பலரும் எடுத்து நடக்க வேண்டுகோள் விடப்பட்டது.
I shall never take nor give bribes
In whatever profession, I shall work with honesty, dedication,
discipline..I shall always give priority to patriotic duty over my narrow self
interest.
Whatever decisions I take in my life, I shall not discriminate on the
basis of caste or creed but, instead be guided solely by rational consideration
and interests of my motherland.
இந்த உறுதிமொழிகள் கடைப்பிடிக்கப்படுவது நல்லதே. இதில் மதம் என்ற வரியையும் சேர்த்திருந்திருந்திருக்கலாம். ஏன் விட்டார்களோ ..
அடுத்து முஸ்லீம்களுக்கு வேண்டுகோள் என்ற ஒன்றையும் அவர் இந்த யாத்திரையின் போது விடுத்தார். Four point appeal என அழைக்கப்பட்ட வேண்டுகோள்
1. Let there be no remnants of
two nation theory in the mindset of any section of Indian Muslims. Kindly stop
considering Hindus as kafirs
2. Bury vote bank politics to make democracy
healthier
3. Understand cultural nationalism. This does not erase the identity of Islam. My party celebrates the Multi religious, multi lingual and multi ethnic diversity of Indian society which is united at core by Hindutva.
4. Let us concentrate on educational development and economic elevation of poor Muslims.
இந்த வேண்டுகோளில் மிக முக்கியமாக இன்று பாஜக எடுத்துக்கொள்ளவேண்டிய அம்சம் vote bank politics யை குழி தோண்டி புதை என்ற அதன் உபந்யாசத்தைதான்.
இந்திய வாழ்க்கை வரலாற்றை நேர் செய்வது என்பது வேறு..எனக்கு உவப்பில்லாதவற்றை என் வழிக்கு உதவாத பக்கங்களை அழித்தொழிப்பது என்பது வேறு.
6
டிசம்பர் 6 வந்தால் 1992 நிகழ்வுகளின் உளவியல் நாட்டில் பேசப்படும் பொருளாகும். மதவிவகாரங்களில் religious sentiments மிக கவனமாக கையாளப்படவேண்டாமா என்கிற கேள்வியும் கூடவே பிறக்கும்.
அத்வானி அவர்களின் My Country My Life என்கிற பெரும் புத்தகத்தில் 6 ஆம் அத்தியாயம் அயோத்தியா இயக்கம் என்ற பொருளில் ஏறத்தாழ 80 பக்கங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டிருக்கும். அவர் கட்சி தரப்பு நியாயங்களை அடுக்கி சொல்லியிருப்பார். சாரமாக அவர் எழுப்பின முக்கிய கேள்வி இந்துக்களின் மத உணர்வுகளுக்கு இந்த நாட்டில் மதிப்பில்லாமல் போகலாமா என்பதாக இருந்தது.
Religious sentiments என்பது ஒவ்வொரு மதத்திலும் அதை சார்ந்தவர்களிடம் இருக்கவே செய்கிறது. அவர்களின் நம்பிக்கையை அலட்சியம் செய்யும்போதும், கேலி செய்யும்போதும், அவமரியாதை செய்யும்போதும் இந்த sentiments தீவிரமாகும் அல்லது தீவிரப்படுத்தப்படும். பிற எல்லா மதத்தினருக்கும் இருப்பதைப்போன்ற religious sentiments இந்துக்களுக்கும் அத்வானி சொல்வது போல் இருப்பதில் அல்ல பிரச்னை. தான் சாராத பிற மத sentimentsயை கேலி செய்வது பிரச்னையாவது போலவே ஒருவர் இந்து மத sentimentsயையும் காயப்படுத்துவது அவசியமில்லை எனவும் புரிந்துகொள்ளலாம்.
இங்கு religious sentiments என்பதற்கு ஏற்கப்பட்ட பொதுப்பட்டியலோ definition என்பதோ இருக்கவில்லை. பொதுப்புத்திக்கு ஏற்புடைய சில அம்சங்கள் என எடுத்துக்கொள்ளலாம். நம்பிக்கை சார்ந்த அம்சங்களை காயப்படுத்தாமல் இருப்பது என சுருக்கமாக புரிந்துகொள்ளலாம்.
ஒரு விஷயத்தில் நம்பிக்கையில் ஒரே இடம் சார்ந்து ஒரே நேரத்தில் இரு மதங்களுக்கு இடையிலேயோ அல்லது பல மதங்களுக்கு இடையிலேயோ ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படும் religious sentiments யை எப்படி அமைதிவழியில் தீர்த்துகொள்வது என்பதுதான் வந்திருக்கும் பிரச்னையே தவிர எம்மதக்காரருக்கும் இருக்கும் religious sentiments அல்ல பிரச்னை.
மரியாதைக்குரிய அத்வானி அவர்கள் இப்புத்தகத்தின் முதல் 450 பக்கங்களில் religious sentiments என வந்துவிட்டால் அதில் dispute எழுந்துவிட்டால் அதை பெரும்பான்மை மத sentimentsக்கு ஆதரவாக தீர்க்கப்படவேண்டும் என்கிற எதிர்பார்ப்பையே தருகிறார்.
அவரவர் sentiments அவரவர்க்கு என்பதில் பிரச்னையில்லை. ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான உரிமைகோரலில் ஏற்படும் religious sentiments religious belief என்பதை மத ஸ்தாபனங்கள் அமைதியான வகையில் பேசி தீர்த்து வழிகாணமுடியாமல் போனால் என்ன செய்வது என்பதுதான் constitution வழிபட்ட Indian polity முன் நிற்கும் பெரும் சவால்.
Indian polity என்பதெல்லாம் 1947 க்கு பின்னால் வந்த ஏற்பாடு, இங்கு 5000 ஆண்டுகளாக இருந்து வருவது Hindu polity தான் என்று territorial national state என்ற ஒன்று இல்லாததுபோல் கருதி, இருப்பதெல்லாம் இருந்ததெல்லாம் Hindu civilisational State தான் என்ற கருத்து அரசியலாக 1992க்கு பின்னர் தீவிரமாக்கப்பட்டுவருகிறது.
கடந்த 1000 ஆண்டுகளில் ஏற்பட்ட மத்தியகால வரலாறு முழுவதும் திரிபு என்றும் அது இந்திய வரலாற்றின் பகுதியாக கருதக்கூடாது என்பதும் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. Composite culture என்று பேசினால் அப்படிப்பேசி இந்தியாவின் நீண்ட சரடான Hindu civilisational culture என்பதை நீங்கள் மூடிவிடுகிறீர்கள் என்ற குற்றசாட்டு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
தொன்மை
வாய்ந்த இந்தியாவின் வரலாற்றைக் கட்டமைப்பது என்பது பெரும் போராட்டக்
களமாக மாற்றப்பட்டுள்ளது. மேற்கிலிருந்து அவர்கள் செல்வாக்கிலிருந்து விடுபட்டு
என் மூளையால் என்னை சிந்திக்கவிடு என்
மொழியால் என்னை பேசவிடு எனும்
sentiments தீவிரமாக்கப்பட்டுவருகின்றன.
7
1998ல் வாஜ்பாய் தலைமையில் NDA கூட்டணி சர்க்கார் பொறுப்பிற்கு வந்தது. திரு நாராயணன் குடியரசுத்தலைவராக இருந்த நேரம். அவர் நல்ல நேருவியனாக அறியப்பட்டவர். வாஜ்பாய் பிரதமராக மார்ச் 1998ல் பதவி ஏற்க, அத்வானி உள்துறை அமைச்சராகிறார்.
முதல்நாள்
வழக்கமான அதிகாரிகள் அலுவலக முறைகள் அறிமுகம்
நடந்துகொண்டிருக்கிறது. வாய்பாயிடமிருந்து போன் வருகிறது. கேரளாவில்
கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் இ
எம் எஸ் நம்பூதிரிபாத்
மறைந்துவிட்டார். அரசாங்க
சார்பில் எவராவது செல்லவேண்டும் என்பது
வாஜ்பாய் தந்த செய்தி. நான்
போகட்டுமா என அத்வானி..நல்லது
நீங்களே போய்வாருங்கள் என வாஜ்பாய். அத்வானி தனக்கு வந்த முதல்வேலை அது எனச்
சொல்லியிருப்பார்.
உள்துறை அமைச்சராக பொதுவெளியில் ஆற்றவேண்டிய முதல்பணியாக தங்கள் தலையாய ideological enemy ஒருவருக்கு செய்யவேண்டிய அஞ்சலி கடமையை வரலாறு அவருக்கு முரணாக கொடுத்தது.
அத்வானி திருவனந்தபுரம் சென்றார். சுர்ஜித் உட்பட உயர் தலைவர்கள் இருந்தனர். இ எம் எஸ் சேவைதனை அத்வானி புகழ்ந்தார். மலபார் காங்கிரஸ் தலைவராக வாழ்க்கையை துவங்கிய இ எம் எஸ் அவர்களை தங்களின் விதர்பா காங்கிரஸ் தலைவராக வாழ்க்கையை துவங்கிய ஹெட்கேவருடன் குறிப்பிட்டு அத்வானி பேசினார். அங்கு காங்கிரசில் துவங்கி இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்துவிட்டதைச் சொன்னார். இ எம் எஸ் அவர்களின் idealism மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றார்.
அரசியல் வேறுபாடுகளை கடந்து வந்ததற்கு சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் we are touched என நன்றி கூற அருகே வந்தனர். அவர்களிடம் இந்த செய்தியை தான் விடுத்ததாக அத்வானி பதிவு செல்கிறது
“ If untouchability is wrong and
unjustifiable in social relationships, how can it be right and justifiable in
political relationships? “
முன்னதாக ஆட்சி பொறுப்பு குறித்து சக தோழர்களுடன் அத்வானி இப்படி கருத்து தெரிவித்தார்.
A large area of governance does not have much to do with ideology
except the overriding principles of national interests. Indeed good governance
in most spheres of national life becomes possible only when it is
depoliticised.
அதிகாரம் என்பது ஆட்டம் போடமட்டுமல்ல அது கண் திறப்பும் கூட என்பதை ஆட்சிக்கு வரக்கூடியவர்கள் அவ்வப்போது புரிந்துகொள்ளவும் செய்வார்கள்போலும்..
8
வாஜ்பாய் அரசாங்கம் ஆட்சி 2004 தேர்தலை இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்துடன் சந்தித்தனர்.ஆனால் பாஜக தோல்வியடைந்து சோனியா தலைமையில் காங்கிரஸ் கூட்டணியுடன் வென்றது. டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக்கப்பட்டார்.
ஏன் தோல்வி என பாஜக செயற்குழு தன் ஆய்வினை செய்தது. அத்வானி அவர்கள் தனது என் நாடு என் வாழ்க்கை எனும் பெரும் சுயவரலாற்று அரசியல் புத்தகத்தில் இது குறித்து தன் கருத்தை விரிவாக பதிவு செய்திருப்பார். ஏன் கட்சி தோற்றது?
இந்தியா ஒளிர்கிறது என்பதை அவசரப்பட்டு ஐகான் முழக்கமாக்கியிருக்கக்கூடாது. எதிர் கட்சிகள் வேறு முன்னேற வேண்டிய அம்சங்களை சுட்டிக்காட்டி எங்கே ஒளிர்கிறது என பிரச்சாரம் செய்ய வாய்ப்பாக்கிவிட்டோம்.
தொகுதியின் மக்களுடன் ஜீவித தொடர்பற்ற 90 எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்த தவறை கட்சி செய்தது.
ஒவ்வொரு தேர்தல் கட்சியும் மூன்று அம்சங்களை கணக்கில் கொள்ளவேண்டும். ஒன்று தொகுதியின் புவி அம்சம், இரண்டாவது தொகுதியில் அதன் ஸ்தாபன பலம் சார்ந்த அம்சங்கள், மூன்றாவது அக்கட்சி கொண்டிருக்கும் ideological issues and connectivity. இதை மிக கவனமாக இந்த புத்தகத்தில் அத்வானி அவர்கள் விவரிக்கிறார்.
ஜெய்ப்பூரில் தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக எம்பி மற்றும் அவரது சகாக்களும் ஒன்றை செய்துகொண்டே வந்தார்களாம். தொகுதியில் சாவு எனத்தெரிந்தால் அங்கு நின்று இறுதி நிகழ்வுவரை இருப்பது பிடி சாம்பலை வாங்கிப்போய் ஹரித்துவாரில் கரைப்பது என்ற செண்டிமெண்டல் கனெக்ஷனை தக்க வைத்தார்களாம்.
அடுத்து எம்பிக்கள், கட்சி பொறுப்பாளர்கள் எங்காவது அதிகாரத்தொனியில், மக்களை அலட்சியமாக நடத்தினால் , அவர்கள் பிரச்னையை காதுகொடுக்காமல் போனால் தோல்வி உறுதியாகும் என்கிறார் அத்வானி.
எல்லாவற்றிற்கும் மேலாக நடந்த பெரிய தவறு ஒன்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது sangh fraternity அதாவது சங் பரிவார் ideological roots and relations பழுதாகிப்போனது என்பதைச் சொல்கிறார். தாழ்வில் காலம் முழுக்க நின்றவர்களை, உயர்வில் அலட்சியம் செய்ததால் ஏற்பட்ட விளைவாக அத்வானி அத்தோல்வியைப் பார்த்துள்ளார்.
அத்வானி ஏன் தோல்வி என்பதற்கு லிஸ்ட் செய்த காரணங்கள்..
Many faulty and hasty decisions were taken in candidate selection
Party workers sullen or insufficiently inspired.. We ignored our
soldiers the karyakartas
Shortcomings in ‘party -
Government ‘coordination in many states
Differences were rooted in personal ambitions and animosities.
The ethos of struggle sacrifice discipline and idealism the hallmark of
BJS BJp was weakening
Neglecting our core ideological constituency Sangh Fraternity- lack of
effective communication between senior party leaders and Sangh inspired
organisations
மேற்கூறிய பாடங்களை கட்சிகள் தங்களுக்கு உரிய வகையில் பொருத்திப்பார்த்து எடுத்துக்கொள்ளவேண்டியதை படித்துக்கொள்ளலாம்
2004 தேர்தலில் பாஜக தோற்றதற்கான காரணங்களை பட்டியலிட்ட அத்வானி எப்படி வேலைமுறையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்கிற திட்டம் ஒன்றை வைத்தார்.
வாஜ்பாயின் முழக்கம் சங்காதன், சங்கர்ஷ் , சம்ரச்சனா - அதாவது ஸ்தாபனம், போராட்டம், கட்டுமான ஆக்கபூர்வ வேலை என்பதாகும். அத்வானி கட்சியை எல்லா இடங்களுக்கும் விஸ்தரி -எல்லோரையும் தொடு அதாவது சர்வ வியாபி- சர்வ ஸ்பர்சி என்ற முழக்கத்தை வைத்தார்.
குறிப்பாக தலித், பிற்பட்டவரில் பல பிரிவுகள், மிகவும் பிற்பட்ட பகுதியுடன் நெருக்கமாக வேலை செய்தல்.
கிராமம், ஏழை எளியவர், விவசாயி, தொழிலாளர் நலன்களை மேம்படுத்தும் பொருளாதார திட்டங்களை தேசபக்த பொருளாதார அறிஞர்கள் சிந்தித்து தரவேண்டுதல்
கேடர்களின் தத்துவார்த்த, அரசியல், பொருளாதார, சமூக கண்ணோட்டங்களை மேம்படுத்தல்
நாட்டில் 60 சதத்திற்கு மேல் இளைஞர்கள்தான். அவர்களின் பார்வையில் பாஜகவை எடுபடசெய்தல்
ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு சேவைத்துறை அல்லது வளர்ச்சித்திட்டம் ஒன்றில் ஈடுபடுதல்
கட்சி எம் பி எம் எல் ஏ எனில் அவர் தலித் மேம்பாட்டு திட்டம், மதிய உணவு திட்டம், சுற்று சூழல், தூய்மை திட்டம் , தீண்டாமை எதிர்ப்பு என கவனம் செலுத்தவேண்டும்
நானாஜி தேஷ்முக் போன்றோர் ஜனதா சோதனைக்குப் பின்னர் ஒதுங்கி முற்றிலுமாக கிராம கட்டுமானம் என்பதில் தீவீர கவனம் செலுத்தினார். நம்மில் சிலராவது கிராம அபிவிருத்தி திட்டங்களில் முழு கவனம் ஏற்கவேண்டும்.
மகாத்மா காந்தி மற்றும் தீனதயாளின் கனவான அந்தோயதா கடைசி மனிதனுக்குமான உதயம் என்பது கட்சியினரால் கனவு திட்டமாக்கப்படவேண்டும்.
கட்சியின் வெள்ளிவிழா அமர்வில் அத்வானி மேற்கூறிய திட்டங்களை வைத்து உரை நிகழ்த்தியதை அவரது என் நாடு என் வாழ்க்கை புத்தகத்தை படிக்கக்கூடியவர் பார்க்கலாம்.
9
இந்த புத்தகத்தின் இறுதி பக்கங்களில் வேறு ஒரு சுவையான தகவல் சொல்லப்பட்டுள்ளது. அது fun making joke cracking வகைப்பட்ட ஒன்றெனலாம்.
பெனாசிர் பூட்டோவும் அத்வானியும் சந்தித்தால் சிந்தியில் பேசிக்கொள்வார்கள். டெல்லி வந்தால் பெனாசிருக்கு சிந்தி உணவு விருந்து அத்வானி இல்லத்தில் இருக்கும். அத்வானியின் மகள் ஜோக் ஏராளம் ஸ்டாக் வைத்திருப்பார். அரசியல் ஜோக்குகளுக்கும் பஞ்சம் இருக்காது. பெனாசிரோ ஜோக் பிரியர்.
எல்லா அப்பாவும் குழந்தைகளை விருந்தினர் வந்தால் ரைம் சொல்லிக்காட்டு என்பது போல் அத்வானி அப்பாவும் பிரதிபாவை பெனாசிருக்கு ஜோக் சொல்லிக் காட்டேன் என்கிறார். ஜோக் இது தான். அது ஒரு கேள்வியின் வழி fun.
வாஜ்பாயியும் நவாஸ் ஷரிப்பும் சந்தித்து தங்கள் சக அமைச்சர்களின் பெருமைகளை பேசுகிறார்கள். எனக்கு அறிவார்ந்த அமைச்சர் குழாம் உண்டு என்கிறார் வாஜ்பாய். நிரூபிக்க வேண்டுமே. அழைக்கிறார் அத்வானியை. அத்வானி உங்கள் பெற்றோர்க்கு உன்னுடன் பிறந்தவர் அல்லாத குழந்தை யார் என்ன பெயர்..
அத்வானி ஓ எளிய கேள்விதான். அது நான் தான் அத்வானி என்கிறார். அனைவரும் கைதட்டுகிறார்கள். நவாஸ் இந்த சோதனையை ஊர் போய் செய்யலாம் என அமைதி காக்கிறார்.
ஊருக்கு போனவுடன் கேபினட் செயலரிடம் புத்திசாலி அமைச்சர் ஒருவரிடம் இந்தக் கேள்வியை கேட்டு பதில் பெற வேண்டுகிறார். 24 மணியில் பதில் வரவேண்டும் என உத்தரவிடுகிறார். கேபினட் செயலரும் கேள்வியை கேட்டுவிட்டார். அமைச்சர் பதில் அறியமுடியாமல் தனது துறை செயலர் அதிகாரிகளை அழைக்கிறார். இன்னும் 4 மணிநேரம்தான் இருக்கிறது. இறுதியாக ஒரு புத்திசாலி செயலர் நமக்கு தான் பெனாசிருடன் பழக்கம் இருக்கிறதே. நிலைமையை சொன்னால் உதவுவார் என்கிறார்.
கேள்வி பெனாசிரிடம் போகிறது. உன் பெற்றோருக்கு கூடப்பிறந்தவர் தவிர குழந்தை யார் பெயர் என்ன.. பெனாசிர் எளிய கேள்விதான். அது நான் தான். பெனாசிர் என்கிறார். விடை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் கேபினட் செயலர் வழியாக நவாஸ் அவர்களிடம் பதில் போகிறது. அவருக்குத்தான் விடை தெரியுமே அந்தப் பிள்ளை அத்வானி என்று. பதிலோ பெனாசிர் என்று வருகிறதே..தப்பு என சொல்லி ஒருவருக்கும் தெரியவில்லை என நவாஸ் விசனப்படுகிறார் என ஜோக்கை பிரபா சொல்ல பெனாசிர் வெடி சிரிப்பை வெளிப்படுத்திவிட்டு இதன் பிரிண்ட் அவுட் தா பிரபா என்கிறார்…
இதை
ஜோக்காக எடுத்துக்கொள்ளலாம் அரசியல் எள்ளலாகவும் பார்க்கலாம்..வாழ்க்கை இப்படி மற்றவர் பற்றி
ஏதோ ஒன்றை ஏதோ ஒருவகையில்
கற்பித்துக்கொண்டே செல்கிறது
10
இந்துத்துவா என்பதுதான் அனைவருக்குமான கலாச்சார தேசியம் எனமுன்வைக்கும்போது அதை ஏற்க இயலாது எனச்சொல்பவர்கள் மாற்றை வைப்பார்கள்தானே.. கலாச்சாரத்தில் இந்து என்ற தேசியத்தை வைக்கும்போது தாங்கள் சில நூற்றாண்டுகளாகவாவது மாறி வளர்ந்த முஸ்லிம் குடும்ப அல்லது கிறிஸ்து பார்சி குடும்ப வேறு ஒரு கலாச்சார பின்புலத்தை அவர்கள் பேசக்கூடாதா என்ற கேள்வி எழும்பத்தானே செய்யும். இந்துக்களே பல்வேறு கலாசார பின்னணிகளை கொண்டவர்களாக இருப்பதில்லையா..
கலாச்சாரம் நாகரீகம் என்பது எப்போதும் மாறாத ஒன்றா அது ஓர்படித்தானதாகவே இருக்கவேண்டுமா. முஸ்லிம்த்துவா என்ற ஒன்றின் கலாச்சார அம்சத்தை பழக்கத்தை அக்குடும்பங்களில் பிறந்தவர்கள் வாழ்க்கை முறையாகத்தானே கொள்வார்கள்.
எந்த மதத்திலும் அந்த மத சம்பிரதாயங்கள் சட்டங்கள் மூலம் அம்மதத்தின் சக மனிதருக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை இந்திய அரசாங்கம் என்ற வகையில் அரசியல் அமைப்பு சட்ட நெறியில் நின்று தீர்க்க வழிப்படுத்துவது என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்படித்தான் தீண்டாமை, தலாக் பிரச்னை பொதுவாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
கம்ப இராமாயணத்தை பாரதத்தை தேம்பாவணியை சீறாப்புராணத்தை , சிலப்பதிகாரம் மணிமேகலையை தமிழ் மாணவர் எம்மதத்திலிருந்து வந்தவராயினும் கற்கும் கலாச்சாரம் தானே உருவாகவேண்டிய ஒன்று.
இந்திய வரலாற்றின் பல பக்கங்கள் அனைத்துமே முழு ஆதாரங்களைக்கொண்டு கைமாற்றித்தரப்படவில்லை. வரலாற்றை எழுதுதலில் சில விடுபடல்கள், wanton closures இருந்திருக்கலாம். வேறு ஆதாரங்கள், வேறு நியாயங்களை முன் நிறுத்தலாம். ஆனால் மத்தியகால வரலாறு என்ற ஒன்றே இருக்கமுடியாது அதை முற்றிலுமாக மூடுவோம் இல்லயெனில் முழுமையாக மாற்றி எழுதுவோம் என்பதை வரலாற்று நியாய உணர்வாளர்களால் ஏற்க முடியுமா..
மத்தியகால சில அத்துமீறல்கள், அழித்தொழிப்புகள் வரலாற்றில் மூடப்பட்டுள்ளன..அதையும் சரிசெய்து சொல்வோம் என்றால்கூட புரிந்துகொள்ளலாம்…ஆனால் அப்படி ஒரு ஆயிரம் ஆண்டுகளை Islamic Imperialism (அத்வானி இந்த புத்தகத்தில் அப்படி சொல்லவில்லை..வலது அறிஞர் ராம்கோயல் போன்றவர் சொல்வது) எனச்சொல்லி அதை மூடுவது இல்லாமல் நீக்குவது என்பது எப்படி சரியாகும்.
Indianness இந்தியத்துவா என்பதில் இந்துத்துவா, முஸ்லீம்த்துவா, கிறிஸ்துவத்துவா, சைவத்துவா, வைஷ்ணத்துவா, சிறு தெய்வத்துவா, புத்த ஜைனத்துவா, ஆஜீவகத்துவா என பல நதிகள் சங்கமிக்கட்டுமே.
உலகெலாம் பரம்பொருள் என்றால் என் தெய்வம், என் சிந்தனை பிரிட்டிஷ் வகுத்துக்கொடுத்துப்போன, படேலும் நேருவும் சேர்த்து வகுத்துக்கொண்ட இந்தியா எனும் மேப்பிற்குள் மட்டுமே நிற்கவேண்டுமா…இந்தியனாக உலகின் பெருவெளியில் எங்கும் நீக்கமற நிறைந்ததாக சொல்லப்படும் என் இறை எங்கிருந்து வந்தால் என்ன..அது இந்திய தேசப்பற்றுக்கு எதிராக போகாமல் இருந்தால் என்ற சுயக்கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தால் போதாதா…
டிசம்பர்
2022
Comments
Post a Comment