Skip to main content

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

 இந்தியாவில் சாதி உருவாக்கம் குறித்து ஏராள ஆய்வுகள், ஊகங்கள் , அபிப்பிராய முன்மொழிவுகள் இருக்கின்றன. இதுதான் மிகச்சரியான ஆய்வு என நேர்மையானவர் எவரும் உரிமை பாராட்டாமல் இருப்பதையும் காணமுடிகிறது. பல நேரங்களில் அரசியல் தேவைகளுக்கேற்ற முகாந்தர முனைப்புகளாக , இந்த சமூக ஆய்வுகள் செல்வதையும் உணரமுடிகிறது. உத்தேச மதிப்பிடல்கள், ஊக முன்மொழிவுகள்தான் என்றால் அங்கு நிதானம் தொழிற்படும்.

புகழ் வாய்ந்த தென்னிந்திய சமூகம் குறித்த ஆய்வாளர் நொபுரு கராஷிமாவும், ஆய்வாளர் எ சுப்பராயலு அவர்களும் எழுதிய 4 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, அத்துடன் இணைப்பாக கராஷிமாவின் நினைவுக் குறிப்பொன்றும் இணைக்கப்பட்ட நூல் ஒன்றை என் சி பி எச் 2017ல் வெளியிட்டனர். நூலின் பெயர் “ தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்” . சிறிய 75 பக்க நூல்தான். 2022 பதிப்பில் ஸ்டிக்கர் ஒட்டி ரூ 100 ஆக்கியுள்ளனர்.இப்போது வேறு ஸ்டிக்கர் உள்ளதா தெரியவில்லை.
இனி நூலில் இந்த ஆசிரியர்கள் முன்வைக்கும் சில கருத்தாக்கங்களை, நான் உணர்ந்த அளவில் தருகிறேன்.
கட்டுரைகள் பொது ஆண்டு 800-1500 வரைக்கான காலத்தைக் குறித்து கல்வெட்டுகளின் வழி வந்த ஆய்வை வெளிப்படுத்துபவை.
சாதி உருவாக்கத்துக்கு மனுதர்ம கோட்பாட்டை காரணியாக குறிப்பிட்டாலும், அடிப்படையில் பொருளாதாரமே முக்கிய காரணியாகும். நிலவுடைமை சமூக நிலைப்பாட்டை அதிகாரத்தை நிர்ணயித்தது.
தீண்டாச்சேரி, பறைச்சேரி என இரு வாழிடங்கள் குறிப்பிடப்படுகின்றன. தீண்டாச்சேரியில் வாழ்ந்தவர் எவர் என தெளிவு படுத்திக்கொள்ள முடியவில்லை. புலையரா பள்ளரா விளங்கிக்கொள்ளமுடியவில்லை.
பறையர்கள் என்ன தொழிலை செய்தனர் என்பதற்கு பல தகவல்கள் கிடைக்கின்றன. நிலத்தை உழுது வந்தவர் என உறுதியாகச் சொல்லமுடியவில்லை. நெசவு , கைவினைப் பறையர் எனவும் குறிப்புகள் உள்ளன.
பெரிய புராண விவரணைகளில் புலையர்களின் சொந்த ஜீவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதைக் காணமுடிகிறது. கிராமத்தின் உயர்சாதி மக்களின் எந்த ஆதாயத்திற்காக , எம்முறையில் வலுவந்தமாக அவர்கள் உழவில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதில் தெளிவு கிடைக்கவில்லை.
மராத்தி பார்ப்பனரிடமிருந்து பள்ளர் குத்தகை ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பு உள்ளது. பள்ளாடிச் சேரி, பண்ணைப் பள்ளன், பண்ணையாள் என்கிற பள்ளர் தொடர்பான குறிப்புகள் இருக்கின்றன.
சோழர் காலத்தின்போது தீண்டாதார் என்கிற பல சமூகங்கள் இருந்தபோதிலும் அவர்கள் யார் என அடையாளம் காண முடியவில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இடைக்கால சோழர் காலத்தில் , அதாவது பொ ஆ 10-13 நூற்றாண்டில் சாதி ஒரு சமூக நிறுவனம் என்கிற வகையில் முழுமையடைந்தது எனலாம்,
பறையர் புலையர் மட்டுமல்ல வெள்ளாளர் கூட அடிமையாக விற்க வாங்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய குடியிருப்புகளும் விற்கப்பட்டுள்ளன
கொடையாளிகள் நிலையில் பிராமணர், வெள்ளாளர், வணிகர் இருந்துள்ளனர். எல்லா வகையிலும் முதன்மையிடத்தை வகித்த இனங்களாக பிராமணர் வெள்ளாளர் ( 850-1300) வருகின்றனர்.
11-12 நூற்றாண்டில் வலங்கை இடங்கைப் பிரிவுகள். 13 ஆம் நூற்றாண்டில்தான் இடங்கை 98 சாதிகள் பற்றி குறிப்புகள் கிடைக்கின்றன.
ஓம்படைக் கிளவிகள் எது பாவம் தண்டனை என்ன , எது துரோகம் என்றெல்லாம் எழுதப்பட்டன.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட சாதி என்பது இக்காலப் பொருள் கொண்டதாக இல்லை. அது பட்டப்பெயரால் தெரியும் சமூக நிலை, தொழிலால் சமூகத் தகுதி, குடிவழி சமூகத் தகுதி என்பதாகத் தெரிந்தது.
உண்மையான சாதிப் படிநிலை தரப்படுத்தல் அரசர்கள் , அலுவலர், வட்டாரத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டது. சமூக ஒழுங்கைப் பேணுவதற்கு சாதிப்படிநிலையை அரசியல் அதிகாரம் முறைப்படுத்தியது.
சாதி உருவாக்கத்தின் நிகழ்வு வளர்ச்சி கலப்பு திருமணத்தால் உருவாகவில்லை. வட்டார சமூக ஒழுங்கில் அதிகாரம் பெற்ற குழுமங்கள் ஒருங்கிணைப்பு வழியாக சாதி உருவாக்கம் நடந்தது. பழைய புதிய குழுக்கள் மோதல் மறு ஒழுங்காக்கம் என காரணிகள். புதிய படிநிலையின் நிறுவல் அரசனால் முறைப்படுத்த்பப்படாமல், வட்டார மக்கள் சபைகளால் முறைப்படுத்தப்பட்டன. இந்த முறைப்படுத்தலில் பிராமண கருத்துநிலையே தொழிற்பட்டது.
எளிய நூல்தான். எவரும் படித்துவிடலாம்.
ஜெயசீலன் ஸ்டீபனின் தமிழகத்தில் சாதியை கண்டுபிடித்தல் ( 1871க்கு முன்) நூலை வாசிக்கும்போது , பார்க்கலாம் அவர் என்ன முன்மொழிவுகளைத் தருகிறார் என்று. இந்த ஆய்வுகளில் எல்லாம் இட்டு நிரப்ப வேண்டிய இடைவெளிகளே இல்லை எனச் சொல்ல முடியாது.
வட இந்தியாவில் சாதி உருவாக்கத்திற்கும் ( மேற்கு , கிழக்கு என்றும் பார்க்க வேண்டும்) தென்னிந்தியாவில் சாதி உருவாக்கத்திற்கும் காரணிகளாக தொழிற்பட்டவை எவை எனவும் பார்க்கப்பட வேண்டும். பிராமணிய கருத்து நிலை, சத்திரியர் ( அரசர்) சாதி நிறுவல்களுக்கு உதவுதல், நில ஆதிக்கம், ஏவலுக்கு உடல் உழைப்பை தந்த பிரிவினர் கீழ்சாதிகளாக கெட்டிப்பட உறைய வைத்தல் என்கிற பொதுக்காரணிகள் இருந்தாலும், ஊர் சபை மக்கள் மன்றம், ஆங்காங்கே வட்டார அதிகாரங்கள் அவற்றில் இடம் பெற்ற சாதி படிநிலைகள் என்பதெல்லாம் தனித்த விசேஷ ஆய்வுக்குரியனவாக இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா