Skip to main content

தேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் Freedom Movement and Secularism

தேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும்
                     
                                       -ஆர். பட்டாபிராமன்

காலனிய எதிர்ப்பில் எழுந்த இந்திய தேசிய விடுதலை இயக்கம் சில முக்கிய கருதுகோள்களை உட்கிரகித்துக்கொண்டே வளர்ந்தது. விடுதலை எழுச்சிக்கு மதத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் ஒற்றுமை அதன் அவசரத்தேவையாக இருந்தது. கிறிஸ்துவத்தைவிட இந்து, இஸ்லாம் மதங்கள் எவ்வகையிலும் குறைந்தவை அல்ல என்கிற உரையாடல்  இருந்திருக்கலாம். ஆனால் முழுமையான காலனிய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை கிறிஸ்துவத்திற்கு எதிரான சொல்லாடலாக தேசிய இயக்கம்  மாற்றவில்லை. தேச கட்டுமானம்,  இந்து- முஸ்லீம் ஒற்றுமை, விடுதலைக்கு பின்னர் ஜனநாயக முறையில் அரசாங்கம், வலுவான இந்திய அரசாங்கத்தை உருவாக்கி வளர்த்தல்,  மதசார்பின்மை- வழிபாட்டு சுதந்திரம், பேச்சுரிமை, கருத்துரிமை என்பதெல்லாம் அதன் நோக்கங்களாக இருந்தன. இவற்றில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களுக்கு ஒத்த  கருத்தும் இருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டதிலிருந்து கிலாபத் இயக்கம் தவிர   மற்ற காலங்களில் மத கோரிக்கைகளை விடுதலை இயக்க தலைவர்கள் பொதுவாக முன்னெடுக்கவில்லை. அதே நேரத்தில் மதத்திற்கு எதிராக பேசக்கூடியவர்களாகவோ, மக்களின் மத நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என விமர்சிப்பவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை. மதத்தின் பெயரால் நடக்கும் சாதியம் போன்ற ஒடுக்குமுறைகளை கூட அதற்கு அப்பாற்பட்டு தீர்க்க அவர்கள் விழைந்தார்கள். கிலாபத் கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் இந்து- முஸ்லீம் ஒற்றுமை அடையாளத்தையும் முன்நிறுத்தியது.   மதபிரிவினை வகுப்புவாத உரையாடல்களை அவர்கள்  பொதுவாக எதிர்ப்பவர்களாக இருந்தார்கள். அனைத்து இடது, வலது பிரிவினரின் பொதுமேடையாக காங்கிரஸ் தேசியவிடுதலை இயக்கம் இருந்தது.

 மத வகுப்புவாத அடிப்படையில் 1930களின் இறுதிப்பகுதியில்  முஸ்லீம் தேசம், இந்து தேசம் என்கிற இருதேச உரையாடல்கள் கட்டப்பட்டு பெருகத் துவங்கின. இதனால் வெறுப்பு பேச்சுக்களும், விடுதலை இயக்கத்தில் சேர்ந்து ஒத்துழைப்பதில்லை என்ற நிலைமை உருவானது. பிரிட்டிஷாருக்கு இதில் பங்கில்லாமல் இல்லை.

 நேதாஜி சுபாஷ் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் இந்துமகாசபா சார்ந்தவர்க்கோ , முஸ்லீம் லீக் தொடர்புடையவர்க்கோ  கீழ் அமைப்புகளில் உட்பட பொறுப்பு கிடையாது என்ற முடிவு எடுக்கப்பட்டது. வகுப்புவாத பிறமத துவேஷ  எதிர்ப்பு போராட்டத்தில் மதசார்பின்மை புரிதலை சித்தாந்த இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்லாத தவறையும் விடுதலை இயக்கம் செய்தது. இதனால் வகுப்புவாத அபாயம், வன்முறைகளை நாடு பிரிவினையின்போது தடுக்கமுடியாமல் போனது.

அரசாங்கம் என்பது தனது குடிமகன்/மகளை மத அடிப்படையில் வித்தியாசப்படுத்தி பார்க்காமல் நியூட்ரல் ஆக இருக்க வேண்டும் என்கிற புரிதல் தேசிய இயக்க தலைவர்களிடம் இருந்தது. மதரீதியான சலுகைகள் கூடாது என்பதும், நாத்திகனுக்கும் இடமுண்டு என்பதும் ஏற்கப்பட்ட ஒன்றாக இருந்தது. காந்தி மததுவேஷ வாதங்களை கடுமையாக எதிர்ப்பவராக இருந்தார். வகுப்புவாதத்திற்கு எதிராக இருந்ததாலேயே அவர் படுகொலைக்கும் உள்ளானார். அரசியலிருந்து மதத்தை பிரிப்பது என்பதில் அவருக்கு ஆரம்பத்தில் உடன்பாடில்லை. மதத்தை வழக்கமான இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம் என்ற பார்வையில் மட்டுமல்லாமல், தனிநபர் கடைபிடிக்கவேண்டிய தர்மம், ஒழுக்கம், நன்னெறி, அகிம்சை, சேவை, உண்மை என்பதாகவும் அவர் கட்டமைத்தார். அவருக்கு உண்மைதான் கடவுள் என்றானது. அரசியல்- மதம் என்கிற பிரச்சனையில் கூட அவர் ’இந்துமதம்  சார்ந்த அரசியல்’ என்பதை சொல்லவில்லை.


அடுத்தடுத்து ஏற்பட்ட அனுபவங்களையும் காந்தியடிகள் கணக்கில்கொள்ளத் தவறவில்லை. மதம் தனிநபர் விஷயம் என்று அழுத்தமாக சொல்லத் துவங்கினார். அது கடவுளுக்கும் தனிமனிதனுக்குமான உறவு என்றார். இடைத்தரகர்கள் தேவைப்படாத விஷயம் என விவேகானந்தர் பேசியதைபோல வெளிப்படையாக அவர் பேசவில்லை என்றாலும் தனிநபர் விஷயமென்றார். 1942ல் மனிதர்களை மதரீதியாக பிரித்து பார்ப்பது தன்னைப் பொறுத்தவரை பெரும் தவறு என்றார் காந்தி. 1946ல் தான் சர்வாதிகாரியாக இருந்தால் அரசும் மதமும் பிரிக்கப்பட்டேயிருக்கும் என்றார். ’எனது மதம் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். அது எனது தனிப்பட்ட விவகாரம் அதற்காக நான் சாககூட துணிவேன். அரசிற்கு அதில் வேலை இல்லை’ என்ற உறுதியான கருத்தை  காந்தி வெளிப்படுத்தினார் . 1947லும் அரசு என்பது கண்டிப்பாக மதசார்பின்மை கொண்டதாகவே இருக்கவேண்டும் என்றார். வகுப்புவாதத்தை கணக்கிட்டு செய்யப்படும் அனைத்துவகை எழுத்துக்களும் தடைசெய்யப்பட வேண்டியவையே என்கிற கருத்து 1930 களின் மத்தியிலேயே அவருக்கு ஏற்பட்டுவிட்டது.


ஜவஹர்லால் நேருவும் வகுப்புவாதத்தில் சமரசம் செய்து கொள்வதை ஏற்கவில்லை. சமரசம் செய்வது தேசிய விடுதலை இயக்கத்தின் நோக்கங்களுக்கு துரோகம் இழைப்பது என்றார். நம் நாடு மதசார்பின்மையில் எழட்டும் இல்லையேல் அதனுடன் வீழட்டும் என்றவர் நேரு. அவர் அவ்வப்போது நாட்டின் முக்கியமான விஷயங்கள் குறித்து முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார்.  1948 டிசம்பரில் தீங்கு எனத்தெரியும் ஒன்றுடன் சமரசம் செய்வது ஆபத்தானது. இந்திய தேசிய இயக்கம் எதற்கெல்லாம் நின்றதோ அதையெல்லாம் கண்டிப்பாக தவறு என ஆர் எஸ் எஸ் நினைக்கிறது என சுட்டிக்காட்டியிருந்தார். 1951ஜூலையில் நடந்த  காங்கிரஸ் கூட்டத்தில்  மதசார்பின்மை அரசை காத்திட சாகக்கூட துணியவேண்டும் என்கிற கருத்தில் அவர் பேசினார். அய்ரோப்பவில் பாசிச வடிவில் எழுந்த அமைப்புகள் மாதிரி ஆர் எஸ் எஸ்  இருக்கிறது என்றார் . ’நேருநீக்கம்’ என்பது ஏன் இன்றுள்ள ஆட்சியாளர்களுக்கு அதிஅவசர கடமையாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமுள்ளது.

அரசின் மதசார்பின்மை என்பதற்கு நேரு விளக்கமளித்தார். மக்களின் மதநம்பிக்கையை அரசாங்கம் ஊக்க குறைப்பு (discourage) செய்வதல்ல மதசார்பின்மை. அனைத்து மதநம்பிக்கையாளர்களுக்கும் உரிய  சுதந்திரமது. நாத்திகர்களுக்குமான சுதந்திரமும் ஆகும் என்றார். இந்த விளக்கம் சரி எனில் கல்புர்கி போன்றவர்கள் படுகொலைக்கு என்ன நீதியுள்ளது. இன்று பட்டேல் குறித்து பேசப்பட்டுவருகிறது. பேசப்படவேண்டும்   விடுதலைக்காக போராடிய எந்த தலைவரும் இருட்டடிப்புக்கு உள்ளாக்கப்படக்கூடாது. அவர்கள் கருத்துக்கள் பிற்காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் எவரையும் இல்லாதவர்களாக (unperson)  இருட்டடிப்புக்கு உள்ளாக்குவது சரியற்ற ஒன்றுதான்..


பட்டேல் ஜூன் 1947ல் இந்து அரசு என்பதை ஏற்கமுடியாது என்றார். இந்தியாவில் இருக்கும் பிற சிறுபான்மையினர் பாதுகாப்பு நமது தலையாய கடமை என்றார். அரசு என்பது சாதி, மதம், வழக்கம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு இயங்கவேண்டிய ஒன்று என பேசினார் படேல் .  1948 டிசம்பர் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இந்தியா அதன் உண்மைப்பொருளில் மதசார்பற்ற நாடாக ஆகவேண்டும் என்றார். 1950ல் கூடிநின்ற மக்கள் மத்தியில் நாம் பாகிஸ்தான் போன்ற அரசை உருவாக்கவோ அவ்வாறு நடந்து கொள்ளவோ முடியாது. நமது சார்பின்மை நடைமுறை அமுலாக்கத்தை நாம் கண்டாகவேண்டும். இங்குள்ள ஒவ்வொரு இஸ்லாமியரும் தாங்கள் இந்திய குடிமகன், தங்களுக்கு இந்தியருக்கான சம உரிமை உள்ளது என்கிற உணர்வை பெறவேண்டும். அப்படிப்பட்ட உணர்வை அவருக்கு நம்மால் தர இயலாமல் போனால் நாம் பேசிவந்த மரபிற்கும் நாட்டிற்கும் தகுதியற்றவர்களாவோம் என பட்டேல் பேசினார். பட்டேலுக்கு ஆக உயர சிலை எழுப்பும் அரசியல் இதைப் பொருட்படுத்தி புரிந்து கொள்ளவேண்டும் என வேண்டுகிறோம். காந்தியின் படுகொலைக்கு பின்னர் உள்துறை அமைச்சர் என்கிற பொறுப்பில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடை செய்யவும் அவர் தயங்கவில்லை.


விடுதலைக்கால புகழ்வாய்ந்த மற்றொரு தலைவரான நேதாஜி சுபாஷ் அவர்களும் வகுப்புவாதம் எதிர்த்து குரல் கொடுத்தவர். அவர் தனது இந்திய போராட்டங்கள் என்கிற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்தாளும் சூழ்ச்சியில் வகுப்புவாத சக்திகள் ஊக்கப்படுத்தப்படுவதையும், தேசிய விடுதலை இயக்கம் பலவீனப்படுத்தப்படுவதையும் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார். 1938ல் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் இந்து முஸ்லீம் ஒற்றுமை, கலாச்சார பன்முகத்தன்மையை விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்தல், மேலும் அதை ஒவ்வொருவருக்குமான சுதந்திரமாக விரிவுபடுத்தல் வரையிலான கனவை வெளிப்படுத்தி பேசினார். விடுதலை இயக்க ஒற்றுமை என்பதற்காக மிக உயர்ந்த பன்முகத்தன்மையான கலாச்சார அழிவை ஏற்கமுடியாது என்ற பொருளில் அவர் உரை அமைந்தது.


பகத்சிங் போன்ற புரட்சிகர இளைஞர்கள் நிறுவிய நவஜவான் பாரத் சபா தனது நோக்கவரையறுப்பில் தங்கள் உறுப்பினர்கள்  வகுப்புவாத கட்சிகள், கருத்துக்களுடன் உறவுகொள்ளவேண்டாம் என தெரிவித்திருந்தது. மத வழிபாட்டு சுதந்திரம் தனிநபர் சார்ந்தது என்கிற சகிப்புத்தன்மையை வளர்த்தெடுப்பது குறித்தும் அவர்கள் பேசினர். ககோரி வழக்கில் (1925-28) சிக்கி தியாகம் செய்த ராம்பிரசாத் பிஸ்மில் தனது சகாவான அஸ்வகுல்லா கானுடன் சேர்ந்து தங்களின் கடைசி விருப்பம் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதே என்றனர். எங்களுக்கு இந்த ஒற்றுமை ஒன்றே நினைவு சின்னமாகட்டும் என்றனர் அந்த விடுதலைத் தியாக இளைஞர்கள்.

ஜின்னா, சாவர்க்கர், மாஸ்டர் தாராசிங், மெளலான சவுகத் அலி , ஹெட்கேவர், பாய் பரமானந்த் இவர்களில் பலர் தீவிர தேசிய இயக்கத்தில் நின்றவர்கள்தான். 1930களின் இறுதியில் வகுப்புவாத சிந்தனைகளை உயரே பிடித்தவர்களாக சிலர் மாறினார்கள். இந்துவோ முஸ்லீமோ எந்தவகை சார்ந்த வகுப்புவாதமாக இருந்தாலும் அவை நாணயத்தின் இருபக்கங்களாகவே அன்றிருந்த முன்னணி தேசத்தலைவர்களால் உணரப்பட்டது. கோல்வால்கர் அவருக்கு கிடைக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் மிகத்தீவிர முன்னெடுப்புகளை நாம், நமது தேசத்துவம் நூலில் வைக்கிறார். இஸ்லாமியர் இங்குள்ள பெரும்பான்மை இந்துமதம், கலாச்சாரம் ஆகியவற்றை மதித்து மரியாதையுடன் நட்ந்துகொள்ளவேண்டும். இல்லையானாலும் இங்கு இருக்கலாம். ஆனால் உரிமை கோரல் எதுவும் இல்லாமல்- குடிமகன் என்கிற உரிமையைக்கூட கேட்காமல் இருக்கலாம் என்றார். இக்கருத்து நடைமுறையாகவேண்டும் என்கிற விழைவு மிகமிக ஆபத்தானது என்பது உணரப்படுதல்வேண்டும். இந்திய நாட்டின் விடுதலை கனவுகளுக்கு உகந்த முன்னெடுப்பாக இக்கருத்து இருக்கமுடியாது என்கிற பக்குவம் இன்று மிக அதிகமாக தேவைப்படுகிறது.


தாதாபாய் நெளரோஜி முதல் காந்தி, நேரு,பட்டேல், நேதாஜி, பகத்சிங் ஈறாக தலைவர்கள், போராளிகள் இந்தியாவின் சமுக பொருளாதார முறைகள் பற்றி வெவ்வேறு வகைப்பட்டு சிந்தித்திருக்கலாம். ஆனால் மத துவேஷ அரசியலின் ஆபத்தை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருந்தனர். மக்களின் ஒற்றுமை மத அடிப்படைவாத சிந்தனையால் சிதறிவிடகூடாது என்பதில் கவனம் செலுத்தினர். மதசார்பின்மை, மதம் என்பது தனிநபர் உரிமை என்பதில் பொதுவாக தேசிய விடுதலை இயக்க தலைமை பொதுப்பார்வை கொண்டிருந்தது. அதை இன்றுள்ள அரசியல் சூழல் பின்தள்ளி பாழாக்கிவிடகூடாது என்பதை ஜனநாயக சக்திகள் காலத்தே உணரவேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா