https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, May 10, 2017

லண்டனில் கார்ல் மார்க்ஸ்: பிரிட்டிஷ் சோசலிச சூழல் Marx's London Environment




லண்டனில் கார்ல் மார்க்ஸ்
பிரிட்டிஷ் சோசலிச சூழல்

                                            ஆர்.பட்டாபிராமன்

மார்க்சின் லண்டன் தொடர்பும் அவர் அங்கு வாழ்ந்த காலத்திலும் மறைந்த சில ஆண்டுகளிலும்  நிலவிவந்த சோசலிச கருத்துக்கள் மற்றும் சூழல் பற்றிய சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
1847 ஜூலை- ஆகஸ்டில் பிரிட்டனில் நாடளுமன்ற தேர்தல் வருகிறது. சார்ட்டிஸ்ட் இயக்கம் வேட்பாளர்களை நிறுத்துகிறது. ராபர்ட் ஓவன் மரில்போன் என்கிற இடத்தில் அரசியல் சீர்திருத்தம் என்கிற முழக்கத்துடன் வேட்பாளராக நிற்கிறார்.வாக்குகளை பெற்றாலும் வென்றதாக தெரியவில்லை. 1844 செப்டம்பரில் ஜெர்மன், போலந்து, இத்தாலியிலிருந்து குடியேறிய புகலிடவாசிகள் தங்களை  இங்கிலாந்து சமுகத்தினருடன் இணைத்துக்கொண்டு செல்லத்தக்க வகையில் லண்டனில் Society of Fraternal Democrats எனத் துவங்கினர். தங்கள் கூட்டங்களை ஜெர்மன் கம்யூனிஸ்ட் தொழிலாளர் கிளப்பில் (கட்சிகளுக்கு அப்போது கிளப் என பெயரிட்டனர்) நடத்தி வந்தனர். அவர்கள் சார்ட்டிஸ்ட் இயக்கத்தார்களையும் இக்கூட்டங்களுக்கு வருமாறு அழைத்தனர்.
மாஜினிக்கு நேரடியாக சார்ட்டிஸ்ட்களுடன் தொடர்பில்லை என்றாலும் தீவிரமாக இயங்கிவந்தார்.. கார்ல்ஷாபர் (Karl Schapper) என்கிற ஜெர்மன் புரட்சியாளருக்கு சார்ட்டிஸ்ட் மத்தியில் செல்வாக்கு இருந்தது. பிரடெரிக் எங்கெல்ஸ்க்கு சார்ட்டிஸ்ட் அறிவுவட்டத் தொடர்பும் , நார்த்தென் ஸ்டார் எடிட்டர்களுடன் தொடர்பும் இருந்தது. 1845ல் ஜெர்மன் விஷயங்கள் குறித்து அவர் எழுதவும் செய்தார். 1846ல் மார்க்ஸ்க்கு சார்ட்டிஸ்ட்கள் தொடர்பு இருந்ததை பார்க்கிறோம். பெல்ஜியத்தில் இருந்த ஜெர்மானிய கம்யூனிஸ்ட்கள் சார்ட்டிஸ்ட் தலைவர்களை பாராட்டி மார்க்ஸ் எங்கெல்ஸை எழுத சொல்கின்றனர். அவர்களது பாராட்டு செய்தி நார்த்தெர்ன் ஸ்டார் ஜூலை 25 1846ல் வெளியாகிறது.
 1847ல் கம்யூனிஸ்ட் அறிக்கை தொடர்பான  கூட்டத்திற்கு லண்டன் வந்த மார்க்ஸ், எங்கெல்ஸ் உள்ளிட்டவர்கள் சார்ட்டிஸ்ட் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேச வைக்கப்படுகின்றனர். பிரஸ்ஸல்ஸ் டெமாக்ரட்ஸ் இயக்கம் தன்னை அனுப்பியதாகவும் அவர்கள் சார்பில் தான் பேசுவதாகவும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். லண்டன் சார்ட்டிஸ்ட்களும் தாங்களும்தான் உண்மையான ஜனநாயகவாதிகள் என மார்க்ஸ் அக்கூட்டத்தில் பேசினார். இங்கிலாந்தின் உழைக்கும் மக்களே என விளித்து நீங்கள் உலக ரட்சகர்கள் என புகழ்பெறுவீர்கள் என்றார். அவரது உரை ஜெர்மன் மொழியில் நிகழ்த்தப்பட்டிருந்தது
லீக் ஆப் ஜஸ்ட் குறித்து சில மாறுபட்ட செய்திகளை வெவ்வெறு ஆய்வாளர்கள் தருகின்றனர். டேவிட் ரியாஸ்னாவ் அவ்வமைப்பு பாரிசில் துவங்கப்பட்டு 1839ல் பிளாங்கிஸ்ட்கள் எழுச்சி தோல்வியுடன் பலவீனமடைந்தது என்றும் அதில் பணியாற்றிய  ஷாபர், வைட்லிங் போன்றவர்கள் பின்னாட்களில் லண்டனில் புதுப்பிக்க முயற்சித்ததாகவும் குறிப்பிடுகிறார். Schapper 1840ல் லண்டன் வந்து தொழிலாளர் கல்விக்கான சொசைட்டி ஒன்றை நிறுவுகிறார். மற்றவரான வில்லியம் வைட்லிங் தையற்கலைஞர். அவர் ஸ்விட்சர்லாந்த் சென்றார். பல்வேறு பிரசுரங்கங்களை வெளியிட்டார். பாட்டாளிவர்க்கம் என தனித்த வர்க்கப்பார்வை சரியல்ல என்றார். உதிரிபாட்டாளிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள்தான்  புரட்சியாளர்கள் என்றார். ஆரம்பத்தில் மார்க்ஸ் வைட்லிங்கை பாராட்டி பேசியிருந்தாலும் அவரின் அறியாமையை கண்டு வெகுள்கிறார்.
பிரஸ்ஸல்ஸில் தங்கியிருந்த மார்க்ஸ் 1846 இறுதியில் கரஸ்பாண்டன்ஸ் கமிட்டி ஒன்றை அமைக்கிறார். பல நாடுகளின் புரட்சியாளர்களுடன் தொடர்புக்கான கமிட்டி அது. பாரிசில் எங்கெல்ஸ், பிரஸ்ஸல்ஸிலிருந்து வில்லியம் உல்ஃப், லண்டனில் ஷாப்பர் என தொடர்பு ஏற்பட்டு  பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டம் லீக் சார்பில் லண்டனில் ஏற்பாடு செய்யப்படுகிறது. முதல் அமர்விற்கு மார்க்ஸ் வரவில்லை.  கூட்டத்தில் முதலாளித்துவத்தை தூக்கி எறிதல், சுரண்டலற்ற தனியார் சொத்துரிமையற்ற பாட்டாளிவர்க்கத்தின் ஆட்சிமுறை என பிரகடனப்படுத்துகின்றனர். அமைப்பு ”டிஸ்டிரிக் பாடி” என்கிற வகையில் ஏற்கப்பட்டு மையம் லண்டன் கமிட்டியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. மையக்குழுவை கம்யூன் என்றனர். இக்கூட்டத்தில் அமைப்புவிதியாக டெமாக்ரடிக் சென்ட்ரலிசம் சொல்லப்பட்டது. இம்முறைதான் பின்னர் வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பு முறையாக கைக்கொள்ளப்பட்டது.
இரண்டாவது கூட்டம் 1847ன் இறுதியில் லண்டனில் நடந்தது. லண்டனில் இருந்து மோல் என்பவர் பிரஸ்ஸல்ஸ் வந்து லீக் கூட்டத்திற்கு மார்க்சை அழைத்தார். அதில் மார்க்ஸ் பங்கேற்றார். முன்னதாக எங்கெல்ஸ் பாரிசிலிருந்து communist catechism என குறிப்புகளை அனுப்பியிருந்தார். மார்க்ஸ் மாநாட்டிற்கு வரும்போது முழுமையான தயாரிப்புகளுடன் வந்தார். விவாதங்களில் பலவற்றை தெளிவுபடுத்தினார் என்பதையும் David Riazanov சொல்கிறார். இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கைப் பணி மார்க்சிடம் தரப்பட்டதாக டேவிட் ரியாஸ்னாவ் சொல்கிறார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் இருவரிடமும் கூட்டாக என சில ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். ஆனால் பிரஸ்ஸல்ஸ் கமிட்டியிடம் என்பதால் மார்க்சிடம் என்கிறார் ரியாஸ்னாவ். 1847 டிசம்பரில் எழுதுவதற்கு இசைவு தெரிவித்த மார்க்சிடமிருந்து அறிக்கை வராததால் லண்டன் கமிட்டி ஜனவரியில் கூடி கெடு குறித்து தீர்மானம் இயற்றி கடிதமும் எழுதியது.
இக்கடிதம் ஷாப்பர், மோல் போன்றவர்களால் கையெழுத்து இடப்பட்டு ஜனவரி 26 1848ல் அனுப்பப்பட்டது. “ The Central committee hereby directs the district Committee Brussels to notify citizen Marx that if the Manifesto of Communist party, which he consented at the last congress to draw up does not reach London  before Tuesday Feb 1 1848 further measurers will be taken against him, Incase citizen Marx does not write the Manifesto, the Central committee requests the immediate return of the documents which were turned over to him by the congress”  ஏற்றுக்கொண்டபடி சிட்டிசன் மார்க்சால் பிப்1, 1848க்குள் அறிக்கை அனுப்பப்படாவிட்டால் மேல்நடவடிக்கை என மாவட்ட கமிட்டி மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது என்றனர்.
மார்க்ஸ் நிதானமாக ஆழ ஆய்ந்து தேர்ந்த வகையில் கருத்துக்களை முன்வைக்கும் பழக்கம் கொண்டவர். ஆனாலும் கடிதம் அறிந்தவுடன் பாரிஸ் புரட்சிக்கு முன்னதாகவே தனது புகழ் வாய்ந்த கம்யூனிஸ்ட் அறிக்கை என்கிற கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை கொடுக்கிறார். இன்று உலகில் மிக அதிகமான மொழிகளில் பேசப்படும்  ஆயிரக்கணக்கான அமைப்புகளுக்கு வழிகாட்டும் அறிக்கையாக இன்றும் அங்கீகாரத்துடன் அவ்வறிக்கை திகழ்கிறது.
Moral Force is moral humbug, unless there is physical force behind it என சார்ட்டிஸ்ட்கள்  ஜனவரி 1848ல் எழுதினர். பிப்ரவரி 1848 பிரஞ்சு புரட்சி எழுந்தது. லண்டனிலும், மான்செஸ்டரிலும் பல இடங்களிலும் ஏராள கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன. வேலையில்லா இளைஞர்கள் ரொட்டி அல்லது புரட்சி என ஊர்வலம் சென்றனர். Bridgetonல் துப்பாக்கி சூடு நடந்து ஏராள உயிர்ப்பலிகள் ஆகின. o' Connor சார்ட்டிஸ்ட் தலைவர்  கோரிக்கைகளில் ஒன்றைக்கூட விட இயலாது சாகவும் தயார் என கூட்டங்களில் பேசினார். பிரான்சையும் பிரஸ்யாவையும் பாருங்கள் அங்குள்ள எழுச்சியை காணுங்கள் என அவர் தட்டி எழுப்பினார். நில சீர்திருத்தம் கோரினார். இங்கிலாந்த்து மக்களே  வேலை மற்றும் நிலம் அதற்கான பெட்டிஷனில் சேருங்கள் என்றது அவ்வியக்கம்.
விவசாய மற்றும் ஜனநாயக குடியரசு என்பதற்கான அரசியல் அமைப்பு சட்டத்தையும் அவர்கள் தயாரித்தனர். ஏப்ரல் 10, 1848ல் பெரும் ஊர்வலம் நடத்தி கோரிக்கை சாசனத்தை நாடாளுமன்றத்தில் வழங்குவது என்பது முடிவானது. Labour is the source of all wealth என்பதும்  peacefully if we may- forcibly if we must போன்றவை முழக்கமாக இருந்தன. ஆயுதங்களும் இரகசியமாக சேகரிக்கப்பட்டன. போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டனர். இங்கிலாந்து வங்கிக்கு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. மூலைக்கு மூலை போலிசார் நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட்டது. National Charter Association தலைவர்கள் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் முன்னே வருகிறார்கள்.  O' Connor, McGrath இடம் போலீஸ் கமிஷனர்  அமைதியாக கூட்டம் நடத்துங்கள் - நாடாளுமன்றத்திற்குள் ஊர்வலம் செல்ல அனுமதியில்லை என்றார்.
நாடாளுமன்ற வாயிலை தாண்டி உள்ளே உடைத்துக்கொண்டு போவோம் என்கிற உணர்ச்சி பேச்சுக்கள் எல்லாம் நிற்க வேண்டியிருந்தது. தாங்கள் 57 லட்சம் மக்களின் கையெழுத்தை ஒப்படைப்பக்க போகிறோம் என்றனர் தலைவர்கள். ஆனால் 20 லட்சம் கூட இல்லை. திரும்ப திரும்ப பெயர்கள் வந்துள்ளதென அவர்கள் கேலி பேசப்பட்டனர். O Connor தலைமையின் பலவீனம் உணரப்பட்டது. நாடாளுமன்றம் 15 மாதங்களுக்கு சார்ட்டரை எடுத்துக்கொள்ளவில்லை. ஜூலை 3, 1849ல் அதற்கு ஆதரவாக 17 பேரும் எதிர்த்து 222 உறுப்பினர்களும் வாக்களித்து பெட்டிஷன் குப்பைக்கு போனது.
1848 மே முதல் அக்டோபர்வரை  சார்ட்டிஸ்ட் தலைவர்கள் பலர் இரண்டு ஆண்டுகளுக்குமேல் சிறைத்தள்ளப்பட்டனர். Ernest Jones என்ற முக்கிய தலைவர் கிரிமினல் போல் நடத்தப்பட்டார். Harney போன்ற தலைவர்கள்  தனியாக ரெட் ரிபப்ளிக்கன், டெமாக்ரடிக் ரிவ்யூ போன்ற  பத்ரிக்கைகளை துவக்கினர். Northern Star செல்வாக்குடன் 15 ஆண்டுகள்  இருந்துவிட்டு நின்றுபோனது. 1848-50 களில் இங்கிலாந்து தொழிலாளிக்கு பிற நாடுகளான பிரஞ்சு, பிரஷ்யா, ஆஸ்திரியா, ஹங்கேரி என  அந்நாட்டு புரட்சியாளர்கள் பெயர்கள் தெரியத்துவங்கியது.
1855  Feargus O Connor இரண்டு ஆண்டுகள் மனநல காப்பகம்  ஒன்றில் இருந்து இறந்து போனார். அவரின் செல்வாக்கு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் 50000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். மார்க்சின் இறுதி சடங்குடன் ஒப்பிட்டால் மார்க்ஸ் அவர் வாழ்ந்த காலத்தில் எவ்வளவு புறக்கணிக்கப்பட்டுள்ளார் அல்லது ஒதுங்கியிருந்துள்ளார் என்பது புலனாகும். ஆனால் இன்று பெர்குஸ் கானர் என்ற அத்தலைவரை லண்டன்கூட நினைத்திருக்குமா எனத் தெரியவில்லை. உலகம் முழுதும் மார்க்ஸை நினைக்கிறது, ஆராய்கிறதுசிந்திக்கின்ற போராடுகின்ற யாராலும் மார்க்சை விடமுடியவில்லை.
ராபர்ட் ஓவனும் அடுத்த 3 ஆண்டுகளில் மறைகிறார். மதகுருமார் அவர் சாகும் தருவாயில் மத ஆறுதல் நிகழ்விற்கு அருகே வந்தபோது ஓவன் அதை மறுத்துவிடுகிறார். நான் பயனற்ற வாழ்க்கை வாழவில்லை. பல உண்மைகளை உலகிற்கு சொல்லியவன். புரிதல் இல்லாததால் அவை ஏற்கப்படாமல் போயிருக்கலாம். நான் காலத்திற்கு முந்தியவனாகத்தான் இருந்துள்ளேன் என்றார் ஓவன்.
அன்றிருந்த இங்கிலாந்தின் தொழிலாளர் நிலைப்பற்றி எங்கெல்ஸ் எழுதியிருந்தார்.  பல புகழ்வாய்ந்தவர்கள், நாவலாசிரியர்கள் கூட எழுதினர். பலருக்கு  Coleridge தாக்கம் இருந்ததாக அறிஞர் மில் குறிப்பிடுகிறார். Bentham or Coleridge என்பதாகவே மனிதாபிமான சிந்தனைகள் பேசப்பட்டன. சர்ச் மர்றும் பழமைவாதம் பேசும் உக்கிர கவிதைகளும், லிபரல் முதலாளித்து ஆதரவு குரல்களும் ஒருசேர இருந்தன. Frederick Denison Maurice  போன்றவர்கள் கிறிஸ்துவ சோசலிசம் என பேசத்துவங்கினர்.
இந்தியாவில் பின்னாட்களில் நாம் கேட்க இருந்த ராம ராஜ்யம் என்பதை போன்ற முழக்கத்தை முன்பே அங்கு அவர் Kingdom of Christ என பேசினர். Bible Manual of Statesman என்றனர். கிறிஸ்துவ சோசலிசம் கடவுளின் ஆணையாகும். அங்கு நீதி என்பது முதல் கொள்கையாகும். அங்கு மனித பகைமை இராது என்றனர். மெளரிஸ் Socialise the Christian and Christianise the socialist என்ற முழக்கத்தை வைத்தார். அவர்கள் சார்ட்டிஸ்ட்களை எதிர்த்தனர். ஓவன்வாதிகளுடன் கூட உடன்படமுடியும் என்றனர். மக்களுக்காக அரசியல் எனும் வாரப்பத்ரிக்கையை அவர்கள் கொணர்ந்தனர்.  Christian Socialist வார இதழை  1850 நவம்பரில் துவக்கினர் . சோசலிசம் இல்லாத கிறிஸ்துவமும், கிறிஸ்துவாக இல்லாத சோசலிஸ்ட்டும் பாழ் என எழுதினர். ஆனால் 5 ஆண்டுகளுக்குள் அதன் செல்வாக்கு சரிந்தது. அவர்கள் லண்டன் தொழிலாளர் கல்லூரி போன்ற சில நல்ல செயல்களையும் செய்தனர்.
பொருளாதார அறிஞர் மில் போன்றவர்கள் முதலாளி- தொழிலாளி நிரந்தர போராட்டம் கண்டு கவலையை தெரிவிக்க துவங்கினர். அவர்கள் தடுமாறியதாக சோசலிஸ்ட்கள் விமர்சனம் வைத்தனர். ஹைலேபரியில் அரசியல் பொருளாதாரத்துறைக்கு மால்தூஸ்க்கு பின்னர் ரிச்சர்ட் ஜோன்ஸ் பொறுப்பேற்றார். மில் போல அவர் அதிகம் எழுதாவிட்டாலும் முதலாளி, தொழிலாளி உறவுகள், அரசியல் பொருளாதாரத்தில் சமுக உறவுகளையும் காணவேண்டும் என்கிற கருத்தை எழுதினார்.
கம்யூனிஸ்ட் லீகில் கருத்து வேறுபாடுகள் வந்தன. சாகசமிக்க சிலரும் பணமும் இருந்தால் புரட்சி- அதற்காக அமெரிக்காவில் கடன் பெறலாம் என ஷாப்பர் குழுவினர் பேசினர். மார்க்ஸ் இதை ஏற்கவில்லை. 1852ல் கம்யூனிஸ்ட்லீக் கலைந்தது. ஆனால் அதன் சார்பில் மார்க்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை இன்றும் விவாதிக்கப்படும் வழிகாட்டிடும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது.

சார்ட்டிஸ்ட் இயக்கம் பாக்டரி சட்டம், சுரங்க சட்டம், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு சட்டம், 1847ல் 10 மணி வேலை சட்டம், Anti Corn Laws ஒழிப்பு உருவாக்கத்தை கண்டது. உழைப்பாளர் பிரச்ச்னையை இனி சமுகம் ஒதுக்கமுடியாது என்கிற கட்டத்திற்கு அது நகர்த்தியது எனலாம்.

No comments:

Post a Comment