https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, May 2, 2017

எங்கே செல்கிறது அரசியல் Politics going where

எங்கே செல்கிறது அரசியல்
                           -ஆர். பட்டாபிராமன்
திருவாளர் மோடி அவர்கள் நாட்டை எங்கே அழைத்து செல்கிறார்? நேருவிய கொள்கை நீக்கம் அவசியமாக்கப்பட்டு புதியவகைப்பட்ட இந்தியாவை நிறுவி வருவதாக பாரதிய ஜனதா கட்சியினரும் மோடி அவர்களும் தெரிவித்து வருகின்றனர். நாடு தனது தாராளவாத சிந்தனை எனும் விடுதலைக்கு பின்னரான அரசியல் பாதையிலிருந்து முறித்துக் கொண்டு விட்டதா?
வியாபாரியின் பெருங்குரலாக ஒலிக்கும் முழக்கங்கள்  கோடானுகோடி ஜனங்களை வசப்படுத்தியுள்ளதா? மோடி என்கிற பிம்பத்தை ஊதி பெருக்கிட மீடியாக்கள் எடுக்கும் சிறப்பு கவனங்கள் எடுபட்டு தொடமுடியாத உயரம் எட்டப்பட்டு விட்டதா? அவரின் சாகச பன்னாட்டு பயணங்களின் கவர்ச்சி முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறதா? இந்து சக்தி- இந்து கர்வம் என்பதை உலகம் உணர்ந்து புரிந்துகொண்டு தனது ஆமோதிப்பை உலக யோகா தின அனுசரிப்புகள் மூலம் தந்துவிட்டதா? அவரின் மதசார்புள்ள தேசியம் ஏற்கப்பட்டுவிட்டதா? இந்தியா மத துருவ அரசியலை மட்டுமே இனி எப்போதும் நடத்தவேண்டுமா?  வெறுப்பு உரையாடல்களின் களமாகவும் வெப்ப தேசமாகவும் இருப்பதுதான் அதற்கு பெருமிதமா/ பகுத்தறிவாதிகளின் கொலைகள் தான் அதற்கு காப்பா? இன்னும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.
 புகழ்வாய்ந்த மேக்னாத் தேசாய் போன்றவர்கள் மோடியின்  எழுச்சியை வரவேற்பவர்களாக இருந்தபோதிலும் சில முக்கிய சந்தேகங்களையும் எழுப்புகிறார்கள். நேரு ஏற்றி வைத்துள்ள மதசார்பின்மை அரசியல் சவாலை (குறைபாடு இருந்த போதிலும்) ஆர் எஸ் எஸ் பின்புலம் கொண்டு சமாளித்துவிடமுடியுமா என்பது தேசாய் எழுப்பிடும் கேள்வி. தேசம் கட்டுமான  குறித்த உரையாடலை கவனித்தால் அது பழமையைத்தேடி பொற்காலம் ஒன்றை காட்டும். பொதுமொழி, மதம், இனம், வரலாறு என்கிற அம்சங்களின் ஊடே தொன்மையான காலம்காலமான தனது இருப்பு என்கிற உரையாடலையும் அது பின்னிக்கொள்ளும். பொற்காலம் மீட்கும் கடமையை உறுதிப்பாட்டை முன்வைக்கும்.
பிரிட்டிஷ் எதிர்ப்பு உரையாடலில் விடுதலை காலத்து முன்னோடி தலைவர்கள் திலகர், லாலாலஜ்பத், பிபின் சந்திரபால் ’இந்துமேன்மை’ குறித்து பேசியிருப்பர். காந்தி இதில் சற்று நிதான உரையாடலை மேற்கொண்டார். சாவர்க்கர் தீவிர உரையாடலை உருவாக்கினார். இந்து அரசர்களின் வரலாறுகளை சொல்லி பொற்கால யுகங்களை அடுக்கினார். அசோகர் அவருக்கு ஏற்பில்லை. இந்துத்துவா அரசியலுக்கு அஸ்திவாரமிட்டார். இந்துமகாசபா, ஆர் எஸ் எஸ், ஜனசங்கம், பாஜக என கலாச்சார மதம் சார்ந்த தேசிய அரசியல் எதிர்கட்சி அந்தஸ்து என்பதிலிருந்து ஆளும் கட்சியாக உயர்வுபெற்றது. அதிகாரம் பெற்றது. சமுகத்தின் பல்வேறு நிறுவனங்களில் ஆழக்கால் பதித்துக்கொண்டிருக்கிறது.
முன்பு விடுதலைத் தலைவர்கள் கட்டி வளர்த்த இந்திய தேசியம் என்பதில் சந்தேகங்கள் அவநம்பிக்கை ஏற்பட்டு நாடு பிரிவினை எனும் துயரை சந்தித்தது. இருதேசியம் என்பது அன்று பேசப்பட்டு பாகிஸ்தான் உருவாக்கம் நடந்தேறியது. விடுதலைகால இந்தியா நேருவிய எண்ணப்போக்கால் கட்டமைக்கப்படலாயிற்று. வலதுசாரி தலைவர்கள் சிந்தனை தலையீடே இல்லை என சொல்லமுடியாமல் இருந்தாலும் நேரு பிம்பம் உயர்ந்து தெரிந்தது. இந்திராவின் எமர்ஜென்சி அதீதங்கள் மைய அரசியல் சேர்மானத்தில் பாஜகவிற்கு இடமளித்தது.  காங்கிரசின் தாராளவாத ஜனநாயக சிந்தனைகள் வெளிறிப்போன உணர்வு ஏற்பட்டுவிட்டது. காங்கிரசின் போலி மதசார்பின்மை, முஸ்லீம்களை வாக்கு அரசியலுக்கு தாஜா செய்யும் மதசார்பின்மை என்கிற விமர்சனத்தை கடுமையாக்கியது பாஜக.
ஆங்கில கல்வி மூலம் உயர் பொறுப்புகளுக்கும் அரசாங்க வேலைகளுக்கும், அந்தஸ்திற்கும் முன்னேறிய பகுதி உலகமயமாதல் சூழலையும் நன்கு பயன்படுத்திக்கொண்டது.  அமெரிக்க, அய்ரோப்பிய வெளிநாட்டு கல்வி, வேலைவாய்ப்புகள் பெற்ற தலைமுறையாக அந்நாடுகளில் வாழத்துவங்கியது. இவர்களில் பலர் இந்து குடும்பத்தார்கள். இவர்கள் மோடி  ஆதரவாளர்கள் ஆக்கப்பட எடுக்கப்பட்ட முயற்சிகளில் தங்களுக்கு வெற்றி கிட்டிவிட்டதாக பாஜகவினர் கருதுகின்றனர். மோடியின் முழக்கங்கள் அவர்களை ஈர்த்துள்ளன என கருதுகின்றனர். ஆர் எஸ் எஸ் தலைமையும் அமைச்சர்களும், முடிந்த அளவு தங்களது கலாச்சார யுத்த முஸ்தீபுகளை முடுக்கிவிட்டு வருகின்றனர்.
’பாரதவர்ஷ என்கிற இந்தியா’ காலகாலமானது. அது இந்துக்களின் ஏகதேசம் . பிரிட்டிஷாரைப்போலவே முஸ்லீம்கள் முன்னர் படையெடுத்து வந்து ஆண்டவர்கள். ஆனால் பிரிட்டிஷார் விரட்டப்பட்டு போய்விட்டனர். முஸ்லீம்கள் தங்கிவிட்டனர். எனவே ஆயிரம் ஆண்டுகளின் கணக்கு மிச்சம் இருக்கிறது என்கிற உரையாடல் பெரும் வரலாற்று ஆய்வுகள் பெயரில், சிந்தனை வடிவில், அரசியல் அரங்குகளில், கலாச்சார பெருவிழாக்களில் நடத்தப்பட்டு வருகிறது. இவைகள் தவறானவை என முன்பு எழுதப்பட்ட ஆய்வுகளை சோசலிச , நேருவிய புனைகதைகள் என்கிற நீக்கத்திற்கான பெரும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
மக்காலே ஆங்கில வகைப்பட்ட குமாஸ்தா கல்வி முறையிலிருந்து முறித்துக்கொண்டு சுயதேசப்பற்றுடன் கூடிய கல்விக்கான பாதையை செப்பனிட வேண்டும்.1947ன் விடுதலை என்பதையும் தாண்டி செல்லவேண்டும். ஆயிரம் ஆண்டு முஸ்லீம் அடிமைத்தன அடையாளமற்ற ஒன்றாக அது இருத்தல் வேண்டும் என்கிற விழைவு தெரிவிக்கப்படுகிறது.  தற்போதுதான் இந்தியா தனது சுய அடையாளத்தை காணத்துவங்கியுள்ளது என இந்துத்துவா அரசியல் நம்பிக்கை வலுப்படுத்தப்படுகிறது. இந்த தியரி பிரிட்டிஷார், இஸ்லாமியர் அந்நியர் என்பதுடன் நிறுத்தப்படுகிறது. ஆர்யர் அந்நியர் என்பதை அவர்களின் தியரி ஏற்கவில்லை. ஆர்யர் அந்நியர் என்றால் இந்துமதம் அந்நியர் என்றாகிவிடுமே என்று மேக்நாத் தேசாய் அதை விளக்குகிறார்.
வேத அம்சங்களுக்கும் இன்றுள்ள இந்துமத நடவடிக்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிறார் தேசாய். வேதத்தில் சொல்லப்பட்ட கடவுள்களை இன்று கொண்டாடி வணங்குவதில்லை என்றும் சிவா, விஷ்ணு, காளி வழிபாட்டுமுறைகள் வேதத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான முறையாகும் என்கிறார். பஞ்சாபின் பகுதியிலிருந்து டெல்லி வட்டாரம் வழியாக உ.பி, பீகாருக்கு நுழைந்தது பிராம்மண மதம். புத்தமதத்துடன் ஆயிரம் ஆண்டுகள் போராடியது. ஆதிசங்கரர் காலத்தில் வாதாடி போராடி வெற்றித்தேடிக்கொண்டது. ஆனாலும் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாகிப்போனார்.
தேசாயைப் பொறுத்தவரை இந்துத்துவவாதிகளின் தேசியமும், நேருவிய தேசியமும் வட இந்திய கதைகளே. சாவர்க்கர் இந்துத்துவா என்பதை முழுமையாக  மதத்துடன் கட்டிப்போடவில்லை. இங்கு பிறந்தால் போதும் அவர் இந்துத்துவ அடைப்பிற்குள் வந்துவிடுவார் என்று பேசினார். ஆனாலும் அதில் உட்பிரதி என்கிற வகையில் இந்துமதம் இருந்ததாக தேசாய் சொல்கிறார். முஸ்லீம்களின் படையெடுப்பு ஆட்சி என்பதில் தென்னிந்திய அனுபவம் வேறு என்கிறார். 17 ஆம் நூற்றாண்டில்தான் அவுரங்கசேப் தெற்கு நோக்கி வருகிறார். அஸ்ஸாம் முஸ்லீம் படையெடுப்பை பார்க்கவில்லை என்கிறார். தேசியம் என்கிற உரையாடலைவிட தாங்கள் சொல்லும் தேசியத்தை அரசாங்கமே முன்நின்று பிரச்சாரமாக்குவதுதான் பிரச்சனை என்கிறார் தேசாய்.
இந்துக்கள் பேரடையாளத்தில் ஒரே கோயில்- வழிபாட்டுத்தலம்- ஒரே புனித நூல் என்பதெல்லாம் இல்லை. ராமஜென்மபூமி இயக்கம் மூலம், கீதை-கிருஷ்ணா சொசைட்டிகள் மூலம் முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. சமுக அசமத்துவம், மேல் கீழ் சாதிகட்டமைப்பு என்பதை அதன் தன்மையில் மூடிமறைக்க முடியவில்லை .அம்பேத்கார் ஆய்வுகள் இதை துலாம்பரமாக எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளில்  நடந்திட்ட 15000 எண்ணிக்கை கொண்ட மதக்கலவரங்களில் பெரிது பாதிக்கப்பட்டவர்கள், உடைமையிழந்தவர்கள் இஸ்லாமியரே என சொல்கிறார் தேசாய். 1984 சீக்கிய கலவரத்தின்போது நேரு காங்கிரசின் மதசார்பின்மை கேள்விக்குறியதாயிற்று என்பதையும் சொல்கிறார் அவர்.
தங்களால் வாக்குப்போட்டு ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆட்சி பொறுப்பேற்கும் அரசியல் கட்சியின் அரசாங்கம் , அது கட்டமைக்கும் அரசு நிறுவனங்கள் மக்கள் தங்களின் சிவில் உரிமைகளை காப்பார்கள் என்கிற நம்பிக்கையை இழக்க வைத்தால் என்ன அவர்களுக்கு மாற்று என்கிற கேள்வி எழுகிறது. அனார்க்கிசம் என்பது ஆரம்பநிலையில் கூட இந்திய அரசியலில் தென்படவில்லை.  இருக்கின்ற கட்சிகள் அமைக்கும் அரசாங்கங்கள் மக்கள் காவலர்கள் என்பதிலிருந்து முற்றிலுமாக வெளியேறி பாரபட்சம் கொண்டவர்கள் என்ற  எண்ணம் உருவாக்கப்பட்டால்  பாதிக்கப்படும் கோடானுகோடி ஜனங்களுக்கு பாதுகாப்பு யார் என்கிற அச்சவுணர்வும்  சமுக பதட்டமும் அதிகரிக்கும். வளர்ச்சி குறித்த உரையாடல்கள்  என்னவாகும்? வளர்ச்சி எந்த மட்டத்துடன் நின்றுபோகும்?
அரசியல் இயக்கம் அல்லது அரசியல் உரையாடல்கள் தனிநபரை மையப்படுத்தி, அவரை பச்சை குத்திக்கொண்டு எதிர்கால அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கிவிடுமா? திரு மோடி அவர்களை எப்படிப்பட்ட வரலாற்று புருஷ லட்சணமாக காட்ட விரும்புகிறார்கள். ஹிட்லரா, புதியவகைப்பட்ட நேருவா, தாட்சர் ரீகன் மாதிரியா? உலகமய நவீன வளர்ச்சியின் அதிபிரதிநிதியா, பண்டைய பனாரஸ் வாரணாசி காசியின் தலைமை காவலரா ? பிம்ப உருவாக்கவாதிகளுக்கு இதில் தெளிவு இருக்கிறதா என தெரியவில்லை. காலவழுவமைதியின் குழப்பம் நிழலாடுகிறது.
கல்ட்- கரிஷ்மா என்கிற தனிநபர் துதி- கவர்ச்சி அரசியலை மாநில கட்சிகள் பல செய்கின்றன. காங்கிரசும் செய்தது-செய்கிறது. ஜனரஞ்சகவாதமும் ஏக அதிகாரத்துவ குவிப்பும் என்கிற அரசியல் கலவை இதனால் உருவானது. இந்திரா இந்தியா என்கிற காவடி அரசியல் நடந்தேறியது. இந்தப்பாதைதான் மாதிரி என பாஜக கருத துவங்கியுள்ளதா.? மோடியை முன்னிறுத்தி அரசியல் என்பதில் தவறேதுமில்லை என்றும், அவர் எங்களை இந்தியாவின் மூலை முடுக்குகள் மட்டுமில்லாது உலகளாவிய அளவில் எடுத்து செல்கிறார் என்றும் பொதுவெளி உரையாடல்கள் தொண்டர்களால் நடத்தப்பட்டு வருவதை கேட்க முடிகிறது. நாடாளுமன்ற முறையில் எக்ஸ்க்யுட்டிவ் பிரசிடெண்ட் என்கிற பிம்பம் கிடைப்பதாக சுருதி கபிலா சொல்கிறார். வன்முறைகளும் கலகங்களும் அற்ற இந்தியா என சொல்வதற்கு மோடியின் கடந்தகால ரிகார்டுகள் அப்பழுக்கற்றதாக இல்லை என்கிறார் கபிலா.
விடுதலை இந்தியாவில் வளர்ச்சி சார்ந்த உரையாடல்களை அது எவ்வளவு குறைபாடுள்ளதாக இருந்தபோதிலும்  தந்தவர் நேரு. வளர்ச்சி உரையாடலில் நேருநீக்கம் என்பதும், நேருமயம் நீக்கப்பட்ட அரசாங்க எந்திரம் என்பதுமான சித்தரிப்புகள் சித்தாந்தம் சார்ந்து நடத்தப்படுகிறது. நேருவின் வளர்ச்சி உரையாடலை சமுக நீதி அம்சங்களுக்காக நீட்சிப்படுத்திட போராடியவர் அம்பேத்கார். இன்று பீம் ஆப் என்கிற வெளிப்பூச்சுக்களில் சமுகநீதி உரையாடல்களை கரைத்துவிட முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. மாநிலங்களின்  கூட்டுறவு சமஷ்டி (Cooperative Fedralism) என்பது முழக்கமாக வைக்கப்பட்டு மாநிலங்களின் பெருமித உணர்வு காக்கப்படும் என்றனர். ஆனால் நடைமுறையில் வேறு கட்சி எதுவுமில்லா மாநிலம் நோக்கி மாநிலங்களை நகர்த்துவது என்கிற ஒற்றை பரிமான சிந்தனை தொழிற்படுகிறது.
சோசலிச கட்டுமானம் என்பதில் சித்தாந்தம் சார்ந்த கட்சிகள் நடைமுறையில் அதிகார மொத்தத்துவம் – ஒருகட்சி அதிகாரம் அதிலும் ஒரு தலைவர் அதிகாரம் குறித்து உலகம் சென்ற நூற்றாண்டில் கடுமையான விமர்சனங்களை வைத்தது. இப்போது நேர் எதிர்திசையில் வலது சித்தாந்தம் மொத்தத்துவ அதிகாரம்- ஒரே கட்சி இருப்பு -அதில் ஒரே தலைவரின் ஏகபோக அதிகாரம் எனும் ஆபத்தான பயணம் நடந்து கொண்டிருக்கிறது. மீடியாக்கள் முதலில் இதை உணரவேண்டும். பின்னர் வெகுமக்களுக்கு உணர்த்தவேண்டும்.
(குறிப்பு: மேக்னாத் தேசாய் செய்திகளுக்கு ஆதாரம்: India as a Hindu Nation ,  சுருதி கபிலா செய்திகளுக்கு Conservatism and the Cult )




No comments:

Post a Comment