III
தாகூர் முழுநேர அரசியல் பணியாளர் அல்லர். ஆனால் அரசியல் பேசாதவர் அல்லர். 1905 வங்கப்பிரிவினை, 1919 ஜாலியன்வாலாபாக் பற்றி அழுத்தமாக கருத்துக்களை வெளியிட்டவர். சாதி, மத, இன, மொழி கடந்து அனைத்து இந்தியர்களின் சமமதிப்பு குறித்து
பேசியவர். சமயம் பற்றி குறுகிய பார்வையை மறுத்து பரந்த நோக்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.
பிரிட்டிஷார் இருந்த நேரத்தில் நம் உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நிறைய பேசினார் தாகூர். நம்முடைய பண்பாட்டின் மூலம் அவர்களுடைய மனிதப் பண்பாட்டைத் தட்டி எழுப்பவேண்டும் எனக் கருதினார். குவிந்த கையோடும் குனிந்த தலையோடும் செல்வது அவர்களிடமுள்ள தாழ்மையான அற்பத்தனத்தை தூண்டிவிடும் என்றார். கோபத்தை காட்டும்போது அவர்களின் தீயப் பண்புகளை வெளிக்கொணர நேரிடும் என்றார். தியாகம், பணி இரண்டும் நம் சக்தியின் அடிப்படைகள். நம் சக்தி முழுமையும் செலவழித்து இந்தியாவை நமதாக்கி கொள்ளும்போது ஆங்கிலேயர் நாம் சொல்கின்றபடி நடப்பர் என்றார். கிழக்கு மேற்கின் ஒன்றல் சந்திப்பின் சாத்தியம் குறித்து அவர் பேசினார். நாட்டுடன் நாடு, இனத்துடன் இனமும், அறிவுடன் அறிவும், முயற்சியுடன் முயற்சி ஒன்று கலக்க முடியும்.
தன்னைதானே அழித்துக்கொண்டு அதன் மூலம் விரிவடைகின்ற கொள்கையை எந்த மனிதனுடைய மனமும் பெரியதாக ஏற்றுக்கொள்வதில்லை. எவ்வளவு சிறிய பொருளும் தனக்குரிய தனித் தன்மையை உணர்ந்தவுடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முயலுகின்றது. இதுதான் வாழ்க்கைச் சட்டம். உண்மையை கூறுமிடத்தில், விரிந்த தன்மையில் சாவதைவிடச் சுருங்கிய தன்மையில் வாழவே உயிர்கள் விரும்புகின்றன என ஹிந்து பலகலைக் கழகம் என்கிற கட்டுரையில் எழுதினார் தாகூர். தனிப்பட்டவர் ஒவ்வொருவரும்
உயர்நிலையை அடையும்போதுதான் மக்களுக்குள் ஒற்றுமை என்பது உண்மையில் நடைபெறுகிறது. வறுமையில்,
அடிமைத்தனத்தில், கட்டுப்படுத்தலில் ஒற்றுமை என்பதெல்லாம் அந்தந்த நேரத்திற்கான ஒற்றுமையாகவே
அமையும் என்றார் அவர்.
இந்து- முஸ்லீம் ஒற்றுமை முழுமையாக ஏற்படாத காரணத்தை அவர்
உணர்ந்த அளவிற்கு விளக்கினார். அவர்களை உண்மையான கூட்டாளிகளாக கருதாமல் தேவைக்காக ஏற்றுக்கொள்ளும்
கருவியாக கருதுவதை சரியான அணுகுமுறையல்ல என விமர்சித்தவர் தாகூர். தேவையால் ஏற்படும்
கூட்டில் வெற்றிக்கு பின்னர் கிடைத்தவற்றை பகிர்வதில் ஏமாற்ற முற்படுகிறோம். சந்தேகப்படுகிறோம்.
இந்துவாக இருப்பதன் பெருமையை இந்து உணரவேண்டும் என்றால் முஸ்லீமாக
இருப்பதன் பெருமையை முஸ்லீம் உணர்தல் என்பதும் வருகிறது. பிரச்சனை வேறுபாடுகளை அழித்து
அதன் மூலம் ஒற்றுமை என்பதல்ல. வேற்றுமைகளை அறிந்து வைத்துக்கொண்டு எவ்வாறு ஒற்றுமை
பெறுவது என்பதுதான். முஸ்லீம்கள் கல்வி கெளரவம் பெருமை ஆகியவற்றில் இந்துக்களோடு சமமாக
ஆவதனால் இந்துக்களுக்கே நன்மை ஏற்படும் என்றார் அவர். உண்மையான விட்டுக்கொடுப்புகளால்தான்
இதை சாதிக்கமுடியும் என்றார் தாகூர்.
தனிப்பட்ட ஒருவன் எல்லை மீறி வளர்ந்து, பேய் வடிவம் எடுப்பதற்குரிய
இடம் தரும் முறியில், எந்த மூலையிலும் இடம்
காலியாக இல்லை என்கிற அம்சத்தை அவர் புரிந்து கொள்ள வற்புறுத்தினார். ஜெர்மனியில் படிக்கின்ற
மாணவன் இந்து, இஸ்லாமிய சமயங்கள் பற்றிப் படிக்கும் வாய்ப்பைக்கூட நாம் பெறவில்லை.
நாம் கிளிப்பிள்ளை போல் மேனாட்டு மொழியை பேசிக்கொண்டிருக்கிறோம். நமது மொழியை பேச வேண்டும்
என உலகம் எதிர்பார்க்கிறது. பண்டைய சடங்குகளை தேடி அதை தேசியப் பண்பாடு என்று கூறிக்
கற்பனையான நற்பண்புகளை ஏற்றுகிறோம். காலமென்னும் குப்பை மேட்டைக் கிண்டித் தங்களுடைய
இனம் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம். சதுப்பு நிலத்தில் தோன்றுகின்ற கொள்ளிவாய்ப்
பிசாசை, சூரியனை, சந்திரனை விட மிகப் பழமையானதென்று போற்றும் மக்களாக இருக்கிறோம் என
விமர்சித்தார்.
நாம் தனிப்பட்ட இனம் என்ற எண்ணம் தன்னைதானே ஏமாற்றிக்கொள்தலே
எனவும் அவர் எடுத்துரைத்தார். இந்து பஞ்சாங்கங்களில் மாதக்கடைசியில் செய்ய வேண்டிய சடங்குகள்தான் இந்து நாகரீகம் என
நினைத்தல் கஷ்டம்தான் என்றார். மகாபாரதம் உட்பட பண்டைய ஏடுகளை பார்த்தால் சமுக மாறுபாடுகள்,
பழக்கங்கள் இரும்பில் செய்யப்பட்டவை அல்ல என புரியும். எப்போதும் விழித்திருக்கின்ற
மனத்தால் தூண்டப் பெற்ற புதிய வழிகளை கண்டறிதல், பிழைகள் நேர்ந்தாலும் உண்மையை நோக்கி
செல்தல், முயற்சிகள் மூலம் காரிய வெற்றி என அச்சமுகம் சென்றது என சொல்கிறார் தாகூர்.
கல்வி பற்றி அவர் 1892 ல் எழுதிய கட்டுரை ஒன்றில்
உருப்போடும் பாடம் தவிர வேறு புத்தக அனுமதியில்லாமல் மாணவன் வளர்ச்சியை நாம் புறக்கணிக்கிறோம் என்றார். தாய்மொழி கல்வியின் அவசியத்தையும் ஆங்கில வழி அவஸ்தையும் அவர் விளக்கினார். சிந்திக்காமல் கற்பிக்கப்படும் முறையை அவர் விமர்சித்தார். வாழ்க்கையின் 20 ஆண்டுகள் ஆங்கிலத்திலிருந்து கருத்துக்களை பொறுக்கிக்கொண்டு, உள்ளத்தில் ஒட்டாமலே கற்று வருகிறோம். கல்வியும் வாழ்க்கையும் ஒன்றாக இராமல் வாழ்வுடன் பொருந்திக்கொள்ளாமல்
போய்விடுகின்றன . நாம் பெறும் கல்வி நம் வேருக்கு அப்பால் வெகுதூரத்தில் பெய்யும் மழை
போன்று உள்ளது என்கிற கவலையை வெளிப்படுத்தினார். கல்வியையும் வாழ்க்கையையும் எப்படி ஒன்றுபடுத்துவது என்பதுதான்
தலையாய பிரச்சனை என தெரிவித்தார்.
சமுதாயமும் அரசாங்கமும் என்ற கட்டுரை ஒன்றை தாகூர் எழுதினார்.
ஆங்கிலேயரின் துரைத்தனந்தான் அரசாங்கம். நமது பழைய அரசர் ஆட்சியில் சமுக நலப்பணிகள்
பல அரசாங்கத்திடம் இல்லை. குடும்பம், கிராமம் பார்த்துக்கொண்டது. அரசன் அவ்வூரின் செல்வந்தர்
செய்த அளவிற்கு மேல் பொதுவாக செய்யவில்லை. இந்தியாவில் அரசன் சுதந்திரமாக இருந்தான். சமுதாயம் கடமைகள்
நிரம்பியதாக இருந்தது. இங்கிலாந்தில் இது வேறுபட்டிருந்தது. இதனால் தர்மம், தன்னடக்கம்
என்பது இந்தியாவில் இருந்தன. அங்கு அரசியல் முக்கியமானதாக இருந்தது. இங்கு சமாஜம் இருந்தது.
இன்று பிரிட்டிஷ் அரசாங்கம் நமது சமுதாய அமைப்பில் எந்த இடத்தையும் பெறமுடியாது.
சமுதாயத்தின் கடமைகளை ஒவ்வொன்றாக நாம் அரசாங்கத்திடம் ஒப்படைக்க
தயாராகிவிட்டோம். எல்லாம் ஆங்கிலேயர்களின் வளையாத சட்டப்பிடிக்குள் என்றாகி வருகிறது.
பிரிட்டிஷாரிடம் நமது ஆன்மாவை ஒப்படைத்து அடிமை சீட்டும் எழுதிவிட்டோம். ஆங்கில முறைப்படி
கூட்டம் என்பதற்கு பதில் இந்தியவகைப்பட்ட விழாக்கள் மக்களை கவர்ந்திழுக்கும் என்றார்
தாகூர். இந்து
முஸ்லீம் இருவரும் விழாக்களில் கூடி புத்தாக்கம் பெறவேண்டும். பொருளற்ற அரசியல் வாதம்
தவிர்த்து தேவைகள் பற்றி பேசுதல் வேண்டும். மனித உறவு மேம்பாடுதான் நமது நோக்கம். கிராமங்களில்
சாதி சூழலையும் கடந்து கூட உறவுமுறை ஏற்பட்டது. தேசிய காங்கிரஸ் கூட்டங்களில் கூட அதன்
உபசரிப்பு நேரம்தான் உறவுகளை காட்டுகிறது. மனித இதயம் வெளிப்படுகிறது. விரும்பித்தரக்கூடிய
சகாயநிதிதான் கோயில்களை காத்துவருகிறது. அதேபோல் சமுதாயத்தை காக்கவேண்டும்.
ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஆகிய நாம் பல நூற்றாண்டுகளாக இதே தாய்நாட்டால் ஊட்டி வளர்க்கப்பட்டும் வேறுபாடு இருந்துவருகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் தூண்ட முயற்சிக்கிறது என சொல்லிவிட்டு நாம் ஒருவரை ஒருவர் தூண்டிவிடாமல் இருப்போம். இல்லையேல் அந்த அரசாங்கம் தீயணைக்க படையனுப்பும். சிலநேரம் புதிய கட்சி தோன்றிவிடுகிறது. அதுவும் அவசரப்படுகிறது என விளக்கும் தாகூர் இரண்டும் வேறுபட்டாலும் இழுத்துப்பிடித்து தோள் கொடுக்க பழக்கவேண்டும் என்றார்.
இந்தியாவில் எப்போதுமே ஒர் ஒற்றுமைப்படுத்தும் சக்தி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அதனால்தான் அது உயிர்ப்புடன் இருக்கிறது என்றார் தாகூர். ஒற்றுமை கணத்தில் அனைத்தும்
ஒருமுகப்படுகின்றன. இதுதான் புத்தர் கால நிகழ்ச்சி என்றார். அதேபோல் முஸ்லீம்கள் ஆட்சிக்காலத்தில் பிரிக்கும் கோட்டை
மறைய செய்திட கபீர், நானக், பின் வைணைவர் என பொது இயல்பை காண முயற்சி நடைபெற்றது. இன்று
இந்து, புத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் எனும் நான்கு பெரும் மதங்களின் சோதனைகூடமாக இந்தியா
ஆகியுள்ளது. பேரச்சம் நம்மை சிறுக செய்துவிட்டது. குறுகிப்போயுள்ளோம். ஒவ்வொரு தேசமும் முக்கிய
வினாக்களுக்கு பதில் தரவேண்டும். மனிதனுக்கு கொடுப்பதற்கு என்று என்ன வைத்திருக்கிறாய்-
மகிழ்ச்சி பெருக என்ன புதிய வழிகளை கண்டுபிடித்தாய் என்பன அக்கேள்விகள். அனைத்துலக
மனிதனின் பக்கவாத உறுப்பாக பாரமாக தேசம் ஆகிவிடக்கூடாது. பிரிட்டிஷாரை காப்பியடித்து மாறுவேடத்தை புனைந்துகொள்வது
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேயாகும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் தாகூர்.
சமயம் பற்றி நாம் கொண்டுள்ள பிடிவாதம் அடைமைத்தனத்தை தவிர
வேறு ஒன்றுக்கும் தகுதி இல்லாமல் செய்துவிட்டது. ஒரு மனிதனிடத்தில், காட்டப்படும்
அவமரியாதை, காட்டுகின்றவனுக்கு எவ்வித நன்மையும் புரியாமல், காட்டப்படுபவனுக்கும் எவ்வித
நன்மையையும் புரிவதில்லை. மற்ற மனிதனை எவ்வளவு
கொடுமையாக நடத்தவேண்டும் இல்லையெனில் சமய பிரஷ்டம் என சமய சடங்குகள் பேசுகின்றன. பிராமணன்
தகுதி இல்லாவிட்டாலும் மரியாதைக்கு உரியவன் என போலி சடங்குகள் பேசுகின்றன. உண்மையில்
விடுதலை நோக்கி உண்மை சமயம் அழைத்துச் சென்றால் போலி சமயம் அடிமைத்தனம் நோக்கி அழைத்து
செல்கிறது என கடும் தாக்குத்லை தாகூர் தந்தார்.
துரோணருக்கு ஏகலைவனின் கட்டைவிரல் தியாகத்தை விமர்சன பார்வையுடன்
அணுகினார் தாகூர். பயனற்ற முட்டாள்தன பக்தியை ஆண்டவன் ஏற்பதில்லை என்றார். ஆண்டவன் அளித்த அரிய சக்தியை மனிதன் அவமானப்படுத்துவது
போன்ற செயல்தான் இவை என்றார். நம்மிடமுள்ள குருமார்கள், பூசாரிகள், தாயத்துகள், மந்திரங்கள்
பழமொழிகள் அனைத்தும் நம்மை பக்தியுடன் கீழ்படிதலையே எதிர்பார்க்கின்றன.
தாகூரின் கல்வி சிந்தனை இன்றைக்கும் பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. விடுதிப் பள்ளிக்கூடங்கள் திருப்தியளிக்காத இனம் சேர்ந்தவை. அவை போர்வீரர் தங்கும் பாடி வீடுகளையும், பைத்தியக்காரர் மருத்துவமனைகளையும், சிறைச்சாலைகளையும் ஒத்துள்ளன. வலுவான சுவர்களுக்கு இடையே கதவுகளை வைத்து அதற்கு காவல்காரனை போட்டுவைத்து குழந்தைகளை அனுப்பி என்ன வழியில் கல்வி போதிக்கிறோம்? கேடி போலீஸ் ஸ்டேஷன் தினம் சென்று ஆஜர் சொல்வது போல் என கடுமையாக நமது கல்வி
முறையை அவர் விமர்சித்தார்.
பிரம்மசரியம் என்பதை அவர் ஏற்கிறார். இயற்கை சூழலில் பண்பாடு சார்ந்த கல்வி என்கிறார். அமைதியான சூழல் நிறைந்த மரம், வயல் வெளிகளில் பள்ளிக்கூடம் என்றார். பள்ளிக்கென்று விவசாயம் நடைபெற துண்டு நிலம் என்றார். தோட்ட பராமரிப்பும் பாடமாகட்டும் . இசையும், கதைகளும் பள்ளி சூழலில் தழைக்கட்டும் என்றார். மாணவனுக்கு தண்டனை என்றில்லாது பிராயசித்தம் என்கிற முறை வரட்டும் . இயற்கையான தன்மையும் எளிமையும் நாகரிகத்தின் சின்னங்கள். ஆடம்பர மிகுதி காட்டுமிராண்டித்தனம் என்றார் தாகூர். ஆசிரியரை வியாபாரியாக்கிவிட்டோம். அவர் கல்வி சரக்கை விற்றுவிட்டு சம்பளம் பெறுவதுடன் அவர் வேலை முடிந்துவிடுகிறது. அன்பு, விருப்பம், மரியாதை, கடமையுணர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது.
நாட்டில் ஐரோப்பியர் போல வாழத் தலைப்படுகிறோம். சொந்த வங்கமொழியைவிடுத்து சந்தைக்கடை ஹிந்திமொழி பேசவும் கற்றுத்தருகிறோம். என தாய்மொழி புறக்கணிப்பு மனப்பாங்கை சாடுகிறார். இணக்கம்
ஒதுக்கம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து அவற்றில் ஓர் ஒன்றல் தன்மையைக் கண்டால் ஒழிய அவை நம்மை முடிவான விடுதலைக்கு கொண்டு செலுத்துதல் இல்லை. தளை, விடுதலை என்ற இரண்டின் இடையே காணப்படும் ஒன்றல் தன்மைதான்
ஆக்கத்தின் தாண்டவம்- dance of creation. சமுதாயம் என்பது மனிதன் விரும்புகின்ற
முடிவான பயன் அன்று . பல்வேறு உறுப்பினர்களும் சேர்ந்து செய்கின்ற பெருமுயற்சிதான்
விடுதலைக்கு வழியாகும்.
வாழ்க்கையைப்பற்றி தேவைப்படுகின்ற புரிதலை அவர் சொல்கிறார். ஒருவர் பல்வேறு தலைமுறைகளின் பிரதிநிதியாக வாழ்க்கைக்கு வருகிறோம். அவர்கள் பெருக்கி வைத்த ஞான அனுபவங்களுக்கு ஒருவரால் முடிந்த அளவு அவர் உதவுகிறார். அதே நேரத்தில் தனிப்பட்ட மனிதன் என்ற வகையில் எல்லைக்குட்பட்ட காலத்தில் குறிக்கோளை முழுத்தன்மையை அடைய முயற்சிக்கிறோம். எல்லாப் பொருள்களின் உள்ளேயும் முடிவிலாத ஒரு வளர்ச்சி அமைந்து கிடப்பதால், அங்கு நிறைவும் இருக்க வேண்டும். அதுவே இயக்கத்தின் பொருளாகும். எனவேதான்
பணி/ செயல்/ வேலை என்பதை வாழ்க்கையின் இடையே தோன்றுவதாகவும், விடுதலை
வாழ்க்கையின் முடிவில் கிடைப்பதாகவும் நாம் அமைத்துக்கொண்டுள்ளோம்.
தனிப்பட்ட உடம்பிலிருந்து சமுதாயத்திற்கு, சமுதாயத்திலிருந்து உலகத்திற்கு உலகத்திலிருந்து பூரணத்துவத்திற்கு என்ற முறையில்தான் சாதாரண ஆன்ம யாத்திரை அமைந்து கிடக்கிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஓர் இயல்பான முடிவு உண்டு, அந்த முடிவு சிறப்பாக இருப்பதில்தான் நம்முடைய குறிக்கோள் பூர்த்தியாகின்றது; அந்தப் பூர்த்தியான பூரணத்தைத் தவிர மற்றவை அனைத்தும் வெறும் ஆடம்பரம் என்றார் தாகூர்.
காங்கிரஸ் தேசிய மாநாட்டில் அவர் தலைமை உரை ஆற்ற வாய்ப்பு கிடைத்தது. தகுதியற்ற ஒருவரை மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு தள்ளுதல் அவரை அவமரியாதை செய்வதற்கு மற்றொரு வழியாகும். நமது பணியில் முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். விழித்தெழும் வாழ்க்கை தன்னை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்திக்கொள்ளும். விருப்பமில்லாதவைகளை எதிரானவற்றை அழிக்க முயலக்கூடாது. சாதி அடிப்படையில் ஆங்காங்கு கழகங்களை அமைத்தால் காங்கிரஸ் அதன் உண்மைத்தன்மையை இழக்கும்.
தீவிரவாதக் கொள்கையைத் துவங்கிவிடுவது எளிது. ஆனால் அதை தடை செய்தல் மிகக்கடினம். அரசாங்கம் என்பது தெய்வீகத்தன்மை வாய்ந்ததன்று. அதிகாரத்திலிருப்பவரும் சாதரண மக்களே. அதிகார வெறி என்பதுதான் பிரச்சனை. பொறுப்பற்றத்தனம் பிரச்சனை. ஒரு இயக்கத்தை தூண்டுவதற்குரிய காரணம் இருந்து வருகின்ற வரையில் அதுவும் இருந்து வரும். அடக்கினால் மற்ற வகையில் வெளிப்படும். பிறர் அறியாத உண்மையை முதல் முதலில் எடுத்துச் சொல்லும்போது,
மிக மென்மையாக சொல்லமுடியாது. புயல் காற்றைப்போலத்தான் வெளிப்படும். பொருத்தமில்லாதவை
மோதும்போது உண்மை பளீர் எனத்தோன்றும் என சொற்பெருக்காற்றினார்.
எந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதற்காக மனிதனுடைய மதிப்பைக் குறைத்து விடுகின்ற எந்த முயற்சியையும் சமுதாயம் பொறுக்கமுடியாது. கிராமத்தார்கள் பலரும் ஒன்று சேர்ந்து தங்கள் கிராம சூழ்நிலையிலேயே அவர்களால் பயன்படுத்தக்கூடிய எந்திரங்களை நிறுவினால் பலன் கிடைக்கும் என பெருந்தொழில், கிராம மக்கள் நகரப்புறம் பெயர்தல் விளவுகளை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்
Comments
Post a Comment