பகுனின் போராட்ட வாழ்வும் அனார்க்கிச சிந்தனையும்
-ஆர். பட்டாபிராமன்
-ஆர். பட்டாபிராமன்
மிஷேல் அலெக்ஸாண்ட்ரோவிட்ச் பகுனின் மே மதம் 8 ஆம் தேதி 1814ல் ப்ரமுக்கினா Premukhino, tver என்கிற பகுதியில் பிறந்தார். இப்பகுதி மாஸ்கோ- பீட்டர்ஸ்பர்க் (தற்போது லெனின்கிராடுக்கு)
இடையில் இருக்கிறது. செல்வந்தர் குடும்பமது. அப்போதெல்லாம் எவ்வளவு அதிக எண்ணிக்கையில் அடிமைகள் ஒருவர் வைத்திருக்கிறாரோ அந்த அளவு அவர் பெரும் தனக்காரர் என அறியப்படுவார். அவர்கள் குடும்பத்திற்கு 2000 அடிமைகள் இருந்தனர். அவர்களை விற்க அவர்கள் முழு உரிமை படைத்தவராக இருந்தனர்.
பகுனின் பாட்டனார் மிஷேல் வசிலெவிச் பகுனின் ருஷ்யாவின் அரசியார்
இரண்டாம் காத்ரின் அரசவை கவுன்சிலராக இருந்தவர்.
அவருக்கு பிறந்த மூன்றாவது மகன் அலெக்சாந்தர் பகுனின். ஒன்பதாவது வயதில் அவரது உடல்நிலை
கருதி இத்தாலி பிளாரன்ஸ்க்கு அனுப்பப்படுகிறார். அங்கு ரஷ்ய தூதரக உறவுக்காரர் வீட்டில் தங்கவைக்கப்படுகிறார். மீண்டும் 25 ஆண்டுகள் கழிந்துதான் தனது 35ஆம் வயதில்தான் அவர்
ருஷ்யா திரும்பமுடிகிறது
. இத்தாலியில் படித்து அலெக்சாந்தர் பகுனின்
பதுவா பல்கலையில் தத்துவ டாகடர் பட்டம் பெற்றார். அவர்களது குடும்பம் தங்கியிருந்த
ரஷ்யாவின் ப்ரெமுகினோ பகுதியில் தன் தந்தை மறைவை ஒட்டி சர்ச் ஒன்றை அக்குடும்பம் கட்டியது.
அரசர் மகாபீட்டர் மேற்கு அய்ரோப்பிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி உயர்தட்டினருக்கு பழக்குவராக இருந்தார். பெண்கள் பொதுஇடங்களுக்கு வருதல், தாடி மழித்தல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்புதல் என்பதும் சமுகத்தில் நுழைந்த காலமது. மகாராணி இரண்டாம் காத்ரின் இலக்கிய ஆர்வம் நிறைந்தவராக இருந்தார். அவர் வால்டேர் உடன் பரிமாற்றங்களை வைத்திருந்ததாக தெரிகிறது. நாகரீக வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரிடம் பகுனின் தந்தையின் மாமா பணியாற்றிவந்தார். பகுனின் தந்தைக்கு நல்ல இலக்கிய தத்துவ பின்புலம் கிடைக்க இச்சூழல் உதவியது.
ருஷ்யா வந்த தந்தையார் அரசாங்க பணிகளை விட்டு வீட்டு சூழலில்
ஆர்வம் காட்டுகிறார். வீட்டிற்கு ஏராள நண்பர்கள் வந்து போயினர். இரகசிய கழகம் ஒன்றிற்கு
அவரை தலைவராக்கிட அவர்கள் முயற்சித்தனர். 1815-25 ஆண்டுகளில் தலைமை எடுக்காவிட்டாலும் இரகசிய கழகத்தில்
பகுனின் தந்தை பணியாற்றினார். இயற்கையை நேசிப்பது, சிந்தனையில் ஆழ்வது என்கிற இரு செயல்களில்
அவர் பெருவிருப்பம் கொண்டவராக இருந்தார். நீங்கள் ஏன் சுதந்திர வேட்கை கொள்ளக்கூடாது
என அடிமைகளிடம் திடீரென பேசுவார்.
அண்டை வீட்டில் குடிவந்த பிரபுத்துவ குடும்ப பெண் 18 வயதான
வர்வராமுரவீவ் என்பவரிடம் காதல்வயப்பட்டு 40 வயதில் அலெக்சாந்தர் பகுனின் அப்பெண்ணை
மணக்கிறார். அவர்களுக்கு முன்றாவது குழந்தையாக பகுனின் பிறக்கிறார்.. பகுனின் சேர்த்து
அவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. அவர்களது குழந்தைகள் பொதுவாக தாயிடம் ஒட்டுதலாக
இல்லை..ஆரம்பத்தில் வீட்டில் தாராள கருத்துக்கள் நிலவினாலும் சூழல் ஜாரிடம் விசுவாசமாக
இருப்பதை அவசியப்படுத்தின. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 14 வயதில் பகுனின் ஆர்ட்டில்லெரிக்கு
இராணுவ பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார். ருஷ்ய மொழி தவிர பிரஞ்சு, கொஞ்சம் ஆங்கிலம்,
ஜெர்மனி மொழிகள் பழக்கமாயின.
வீட்டிற்கு பாதிரிமார்கள் வந்துபோனாலும் மதம் குறித்த எந்த
கட்டாயமும் பகுனினுக்கு இல்லாமல் இருந்தது. அவர் நம்பிக்கையற்ற தன்மையில் வளர்வதற்கு
வீடு தடையாக இல்லை. பல நேரங்களில் அவர் உள்ளொளியிலிருந்து
பேசத்துவங்கினார். ’பிரின்சிபில்ஸ்’ என்பதெல்லாம் வைத்துக்கொள்ளாமல் இருந்தார். அநீதி
எனப் பட்டுவிட்டால் எதிர்த்து வந்தார். அதற்கு காரணகாரியங்களை தேடவில்லை. தந்தை குழந்தைகளிடத்தில்
தான் பலநாடுகளுக்கு சுற்றிய கதைகளை சாகசங்களை அவர்கள் வியந்து கேட்கும்படி சொல்வார்.
புதிய உலகங்களுக்கு பயணிக்கவேண்டும் என்ற ஆர்வம் பகுனினுக்கும் ஏற்பட்டது. வீட்டைவிட்டு
வெளியேறவேண்டும் பயணிக்கவேண்டும் என்கிற தாகம் அவரை விரட்டியது.
பகுனின் அதிகாரி ரேங்கில் ஆர்ட்டிலெரி பயிற்சியிலிருந்து
வெளியே வந்தாலும், தந்தை மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால்
அவர் சிறு கிராமத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கு என குடிசை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரின் ஒத்துழையாமையால் இராணுவ சேவையிலிருந்து
ராஜினாமா செய்திட வற்புறுத்தப்பட்டார். அவர் மாஸ்கோ வந்தார். அங்கு நண்பர்கள் குழாமுடன்
ஹெகல் தாக்கத்திற்கு உள்ளானார். இரவு முழுதும் அவரது புத்தகங்களை வரிக்குவரி படித்து
விவாதம் நடைபெறும்.
Straus ஸ்ட்ராஸ்,
பாயர்பாக் எழுத்துக்கள் பழகின. 1827ல் ஹெர்சன் என்பார் மாஸ்கோ பல்கலைகழகத்தில் இருந்தார்.
ஜாரின் ஆட்சியில் ஆசிரியர்கள் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர். சுயசிந்தனைக்கு தடை
சூழல். ஆட்சியாளர்களின் ஆணை எனும் எல்லைக்குள் நின்றுதான் சொற்பொழிவுகள் நடந்தன. வால்டேர்,
ரூசோ எல்லம் மாஸ்கோ கல்லூரிக்குள் நுழையமுடியவில்லை. ஹெர்சன் மீறி எழுதியதால் கைதானார்.
பின்னர் விடுதலை செய்யப்பட்டு பகுனின் குழாமில் சேர்ந்தார். ஜெர்மன் தத்துவஞானக்குழாமாக
பகுனின், பிரஞ்சு புரட்சிகர சிந்தனை குழாமாக ஹெர்சன் என வேறுபாடுகள் இருந்தன. ருஷ்ய
சமூகம் ஜெர்மானிய சிந்தனைகளை கொள்ளவேண்டும், பிரஞ்சு சிந்தனைகளை அல்ல என்பதை பகுனின்
வலியுறுத்திய நேரமது.
பகுனின் தீவிர கருத்தாக்கங்கள் ஹெர்சனை கவராமல் இல்லை. கடவுள்
மறுப்பில் அவரின் தீவிரம் உணரப்பட்டது. 1841ல் அவர் பெர்லின் சென்றார். அங்கு ’சிவப்பில்
அதி சிவப்பு’ என தன்னை வெளிப்படுத்தினார். 1842ல் அவர் ரூகேவின் பத்ரிக்கையில் The Reaction in Germany என்ற கட்டுரையை எழுதினார். பிரான்சில் புருதான்
மீது பகுனினுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. புருதான் சொத்து என்பது திருட்டு என்றார். தீர்க்கதரிசி
என்கிற வகையிலும் சமுகத்தை மறுகட்டுமானம் செய்வேன் என நம்பிக்கை வைத்தவர் என்கிற வகையிலும்
அவர் ஏசுவிற்கு தனது புகழை தெரிவித்தவர்.
இலக்கியவாதி துர்கனேவ் பகுனின் நண்பரானார். பெர்லினில் அவர்
ஹெகல் மறைந்தபின் புகழ்வாய்ந்த உரைகளை தந்துவந்த பேராசிரியர் வெர்டெர், ஷெல்லிங் வகுப்புகளுக்கு
சென்றார். வெர்டர் உரைகளால் அவர் ஈர்க்கப்பட்டார்.
1843ல் கம்யூனிச கருத்துக்களை பேசிவந்த வைட்லிங்குடன் ஏற்பட்ட சந்திப்பு அவரை நடைமுறை
புரட்சிகர கருத்துக்களுக்கு கொண்டுசேர்த்தது. வன்முறை மூலம் மாற்றம் என்பதை அவர் ஏற்றார்.
வைட்லிங் ஏசு குறித்து எழுதியவை பிரச்சனையாகி கைது செய்யப்படுகிறார். அவரின் குறிப்புகளில்
பகுனின் பெயர் பல இடங்களில் இருந்தது. இதை அறிந்த ருஷ்ய அரசாங்கம் 1843ல் பகுனின் தந்தைக்கு
அவர் பகுனினுக்கு எந்தவித நிதி உதவியையும் செய்யக்கூடாது, மகனை உடன் ருஷ்யாவிற்கு அழைத்துவரவேண்டும்
என்றது. தந்தை
பணிவுடன் தான் பணம் அனுப்புவது இல்லை என்றும் மகனின் நடவடிக்கைகளை ஏற்கவில்லையென்றும்
மரியாதையுடன் பதில் அனுப்பினார்.
1844 துவக்கத்தில் பகுனின் பாரீஸ் சென்றார். அங்கு ஹெர்வே, ரூகே, மார்க்ஸ் ஆகியவர்களை சந்திக்கிறார்.
மார்க்ஸ் உடன் சந்திப்பு முதல்முறையாக மார்ச் 1844ல் நடக்கிறது. பாரிசில் அவர் பிரஞ்சு,
இங்கிலீஷ் கற்கிறார். 1845ல் அவர் புருதானால் கவரப்படுகிறார். சொத்து என்பது திருட்டு.
கடவுள் இல்லையெனில் சொத்துடையோர் இருக்கமுடியாது.
அரசியல் அமைப்பு சட்டத்திற்குள் நிற்கமுடியாது போன்ற கருத்துக்கள் அப்போது புகழ்பெற்றன.
பகுனின் புருதானுக்கு ஹெகலை அறிமுகப்படுத்துகிறார். புருதான் பற்றி நல்ல மரியதையை பகுனின்
கொண்டிருந்தார். கோட்பாட்டு சோசலிஸ்ட்களைவிட
புருதான் மேலானவர் என்பார் பகுனின்.
ஹெகலின் கட்டுமானம் என்பதில் அழிவு என்பதும் பகுதிதான் என்பதை
ஏற்றவர் புருதான். சமுக அமைப்பு அரசியல் அமைப்பின் மோதல் வேறுபாடுகளை தாமஸ் பெயின்
சொன்ன வகையில் ஏற்றவர் புருதான். இவைகளை கொண்டு தனது அனார்க்கிச சாரத்தை வெளிப்படுத்தியவர். ஆரம்பத்தில் பகுனின் முழுமையாக புருதானை புரட்சிகரவாதி என
கொண்டாடினாலும் மார்க்சைபோல் பின்னாட்களில் விமர்சன பார்வையுடன் அவரை ஐடியலிஸ்ட், மெடாபிசிசியன்
என்கிற வகையில் விளக்கத் துவங்கினார். 1873ல் புருதான் குறித்த மார்க்சின் விமர்சனத்தை ஏற்பதாகவும்
தெரிவித்தார்.
பொருள்முதவாத வரலாறு மார்க்சின் உன்னத பங்களிப்பு என பகுனின்
இக்காலத்தில் பேசத்துவங்கினார். பாரிசில் மார்க்சை சந்தித்தபின் பாராட்டுக்களை தந்தார்.
மார்க்ஸ் என்னைவிட பெருமளவு முன்னேற்றகரமான சிந்தனையில் இருந்தார். அதிகம் கற்றவராக
இருந்தார். அப்போது எனக்கு அரசியல் பொருளாதாரம் என்னவென்றுகூட தெரியவில்லை. எனது சோசலிசம் உள்ளுணர்வு வசப்பட்ட ஒன்றாகவே இருந்தது. என்னைவிட
இளையவர் என்றாலும் 1847லேயே சில அடிப்படைகளை அவர் நிறுவினார். நாங்கள் அடிக்கடி சந்தித்தோம்.
அவரின் கற்கும் தீவிரம், உழைப்பு என்பது மரியாதைக்குரியது. சிலநேரம் தனிப்பட்ட கர்வம் மார்க்சிடம் தெரிந்தாலும் பாட்டாளிகளுக்காக உழைக்கிறார்
என்கிற பதிவை மனம் திறந்து பகுனின் செய்தார்.
பகுனின் போலந்து நண்பர்களுடன் சுவிட்ஜர்லாந்த் சென்றார்.
அங்கு சோசலிஸ்ட்களின் வழக்கில் சிக்கி தனது ருஷ்யா ராணுவ அதிகாரிக்குரிய அனைத்தையும்,
நோபிலிட்டி பிரபுக்குல சிறப்பு சலுகையையும்
இழந்தார். சுவிஸ் நாட்டின் பல்வேறு உட்கிராமங்களில் அலைந்து திரிந்தார். நவ 29
1847 போலந்து எழுச்சி வார்சாவில் ஏற்பட்டது. பகுனின் போலந்து ஆதரவு உரை சிறப்பாக வரவேற்கப்பட்டது.
ருஷ்யனாக இருந்தாலும் போலந்தின் விடுதலைக்காக கலகக்கார்களுடன் பகுனின் நிற்பதை ருஷ்யா
கண்ணுற்றது. ருஷ்யாவும் புரட்சியை காணும் என அவர் பேசினார். பிறகுதான் பாரிசில் மார்க்ஸ்
தொடர்பு அவருக்கு கிட்டியது..
பார்சிலிருந்து பகுனின் வெளியேற வேண்டும், அவர் தலையை கொணர்பவர்களுக்கு
10 ஆயிரம் ரூபிள் என ஜார் அறிவித்தார். வெளியேற்றப்பட்ட பகுனின் மார்க்சைப்போலவே பிரஸ்ஸல்ஸ்
சென்றார். 1848 ஜூனில் அவர் ஸ்லோவியர்- போலந்தினர் காங்கிரஸ் அமர்விற்கு சென்று அவர்களின்
திட்டம் ஒன்றை எழுதினார். ஆங்கில வியாபாரிபோல தனது தலைமுடியை மாற்றி மாறுவேடத்தில்தான்
அவர் செல்லவேண்டியிருந்தது
1847-48களில் அவர் ருஷ்யன் ஏஜண்ட் என்கிற தாக்குதலுக்கு ஒருபுறம்
உள்ளானார். மற்றொருபுறம் ஜார் அரசனை கொல்ல ஏஜெண்ட்களை ஏற்பாடு செய்து அவர்களுக்கு லஞ்சம்
கொடுத்தார் என்ற குற்றசாட்டும் எழுந்தது. பகுனின் கைது செய்யப்பட்டு அவர் எழுத்துக்களில்
ஜெர்மன், போலந்து புரட்சிகர தொடர்புகள் இருப்பதாக உறுதி செய்தனர். பிரஷ்ய அரசு அவரை
செப்டம்பர் 1848ல் வெளியேற்றியது மாறுவேடத்தில் அவர் பயணிக்கவேண்டியதானது.
Comments
Post a Comment