https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, August 1, 2017

தாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் 5 The Philosophy and Political thought of Tagore

V
தாகூர் காந்தி உறவு குறித்து பலர் பேசியுள்ளனர். நேரு  தாகூர் மறைந்த ஆகஸ்ட் 1941ல் அதைப்பற்றி குறிப்பிட்டார். ”இருவரும் உலகத்திடமிருந்து கற்றவர்கள் ஆனால் இந்திய குழந்தைகள் வாரிசுகள் என்கிற பெருமிதம் கொண்டவர்கள். அவர்களின் பண்பாட்டுத்த்னமை, அறிவை பார்க்கும்போதும் அவர்கள் எந்த அளவு இந்தியர்கள் என்பதும் விளங்கும்.  அவர்களிடம் வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் இருவருக்கும் மூல ஊற்று ஒன்றுதான்” என்றர் நேரு.
காந்திக்கு மதம் என்பது பூகோள பரப்பினுடன் நிற்பதல்ல. தேசபக்தி என்பதும் கூட மானுட விரோத தன்மையானதல்ல. மனிதநேயம் என்பதுடன் அவரின் தேசபக்தியை பிரித்து பார்க்க முடியாது. இந்தியாவிற்கு தொண்டு என்பதால் ஜெர்மனியை, இங்கிலாந்தை புண்படுத்துவது என்பதாகாது என அவர் தனது தேசபக்தி பற்றி சொல்வார். அதே போல் தாகூரின் தேசபக்தியும் பரந்து விரிந்த பார்வை கொண்டது. நமக்கான விடுதலை நம்மை கதவடைத்துக்கொள்ள அல்ல- பிற நாடுகள் மீது எஜமானத்தனமை கொள்வதற்கும் அல்ல என்றார் தாகூர். மனிதகுலத்தின் அனைத்து பெருமிதங்களும் எனக்கு வேண்டும். அனைத்து இனங்களும் இசைவுடன் வாழ்தல் என்பது தனது வேண்டுதல். இந்தியா  ஒற்றுமையில் உண்மையை காணும் என்றார்.
இருவருக்கும் மெக்கானிக்கல் மெட்டீரியலிஸ்டிக் நாகரீகம் என்பது குறித்த கவலையும் விமர்சன பார்வையும் இருந்தது. ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் கடைத்தேற்றம் என்பதை இருவரும் பேசினாலும் நேரிடையாக சோசலிசம் என்பதை தங்கள் தனி அடையாளமாக முன்வைக்கவில்லை. சோவியத் போய்வந்து தாகூர் அங்கு கண்ட சில அம்சங்களை பேசாமல் இல்லை. காந்தி தர்மகர்த்தா கொள்கையை முன்வைத்தார். இருவரும் அரசின் கட்டற்ற அதிகாரம் குறித்த அச்ச வெளிப்பாடுகளை சொல்லாமல் இல்லை.

1915 துவங்கி அவர்களிடன் நேரிடை தொடர்பு ஏற்பட்டது. சாந்திநிகேதனுக்கு காந்தி வந்தார். அவர் வந்த மார்ச் 10யை சாந்திநிகேதன் காந்தி தினம் என்று கொண்டாடியது. ஜாலியன்வாலாபாக் அடுத்து தாகூர் தனது பிரிட்டிஷ் கொடுத்த பட்டத்தை துறந்து மே 30 1919ல் வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார். காந்தி தனது ஒத்துழையாமையை 1920ல் அறிவித்தார். இருவருக்கும் அது குறித்த மாறுபட்ட  கண்ணோட்டம் இருந்தது. ரொமெயின் ரோலந்த் இது குறித்து எழுதியுள்ளார். 
காந்தி குறித்து டால்ஸ்டாய்விட கூடுதல் மதிப்பீடுகளை தாகூர் கொண்டிருந்தாலும் ஒத்துழையாமையை அவர் ஏற்கவில்லை.  1921 மாடெர்ன் ரிவ்யூவில் உண்மைக்கு வேண்டுகோள் என்கிற ஆக்கத்தை தாகூர் எழுதினார். காந்தி அதற்கு பதிலளிக்கும்விதமாக அக்டோபர் 13, 1921ல் யங் இந்தியாவில் தனது கருத்துக்களை முன்வைத்தார். காந்தியின் பதில் சற்று வலிமையாக கூட வந்தது. பசித்து புசித்து ஆனந்தமாக சுற்றும் பறவைகளை கண்ணுற்று ஆனந்தப்படுகிறார் கவி. நானோ இரைதேடும் பறவைகளின் துன்பங்களை கவனிக்கிறேன். அது வலிமையற்று பறக்கக்கூட முடியாதநிலயை கண்டு துயர் படுகிறேன் என்றார் காந்தி. வலியால் தவிக்கும் மனிதனுக்கு கபீர் பாடல் ஒன்றை தந்து ஆறுதல் சொல்ல முடியவில்லை என்றார் காந்தி. காந்தியின் வார்த்தைகளை  dark and tragic words  என்றார் ரோலந்த்.
தாகூரை காந்தி குருதேவ் என அழிப்பார். தாகூர் மகாத்மா என அழைப்பார். சர்க்கா வழிபாடு என்கிற கட்டுரையில் எந்த இடத்தில் நெய்யப்பட்ட துணியை அணிதல் என்பது பொருளாதார விஷயமே தவிர அதில் தூய்மையின்மை என நன்னெறிகளை பொய்மையாக ஏற்றுவது சரியல்ல என தாகூர் கருதினார். பொருளாதார அம்சம் ஒன்றில் நன்னெறி ஏற்றுவது என்பது தனக்கு உடன்பாடானதே என்றார் காந்தி. அதே போல் வர்ணாஷ்ரம தர்மம் என்பதில் உடன்பட்டு காந்தி பேசியது தாகூருக்கு உவப்பாக இல்லை.
1932 செப்டம்பரில் புனே உடன்படிக்கை சூழலில் யரவாடா சிறையில் தாகூர் காந்தியைப் பார்த்தார். உண்ணாநோன்பு முடியும் தருவாயில் காந்திக்கு பிடித்த  when the heart is died and parched up, come with your shower of mercy  என்பதை தாகூர் பாடினார். அடுத்துவந்த ஆண்டுகளில் வாய்ப்புள்ள தருணங்களில் இருவரும் சந்தித்தனர். பிப்ரவரி 1940ல் சாந்திநிகேதனில் நடந்தது இருவருக்குமான கடைசி சந்திப்பாக அமைந்தது. தாகூர் உடல்நிலை பாதிக்க்ப்பட்டு சாகும் தருவாயில் இருந்தபோது மகாதேவ தேசாய் காந்தியின் கடிதம் எடுத்துவந்து தாகூரிடம் தந்தார். தாகூர் ஆனந்த கண்ணீர் விடுத்தார் என கிருஷ்ணா கிருபளானி சொல்கிறார்.
அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில் நர்ஸ்களிடம் அவர்கள் கிளாக்ஸ்கோ கொடுக்கும்போதெல்லாம் நான் எத்தனைமாத குழந்தை என்றார் தாகூர். டாக்டரிடம் நான் அமைதியாக மரணிக்க அனுமதிக்ககூடாதா என்றார். நான் நன்றாக வாழ்ந்து விட்டேன் என்பார். ஆகா இந்த மரங்களை நான் பார்க்க முடியாமல் போய்விடுமே என்றார்.
விஸ்வபாரதிக்கு வாழ்நாள் ட்ர்ஸ்டியாக இருக்க காந்தியை தாகூர் வேண்டினார். விஸ்வபாரதிக்கு  நிதிஉதவி செய்திட காந்தி செயலாற்றினார். தாகூரின் 80வது பிறந்த நாள் போது 4 ஸ்கோர் போதாது என தந்தி அனுப்பினார் காந்தி. தாகூர் ஆகஸ்ட் 7 1941ல் மறைந்தார்.
உலகம் பார்த்து மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதனையும் நாம் தர முடியாவிட்டால் நம்மைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒரே காரணத்தால் ஒரு பொருளை நம்முடையதாக முற்றிலும் ஆக்கிக்கொள்ளமுடியாது என்ற உண்மையை உணரவேண்டும். மழைநீரை பெறும் ஏரியால் தான் உயிர்களை காக்கமுடியும். பாலைவனத்தால் அல்ல. ஏரிக்கு அதன் ஆழத்தில் பெறுதலும் கொடுத்தலும் ஒரே நிலையானது. யாரிடத்தில் ஏற்கனவே இருக்கிறதோ அவருக்கே மறுபடியும் கொடுக்க நம் சமூகம் பழக்கப்படுத்தப்படுகிறது என நமக்கு வாழ்வின் பெரும் அர்த்தங்களை சொன்னவர் தாகூர்.

Ref
The Philosophy of Ravindranath Tagore by Dr S.RadhaKrishnan
Political Thought of Tagore by Dr Sachin Sen
Ravindranath Tagore by Hiren Mukherjee  
Tagore on Socialism by Hira lal Seth
தாகூர் எண்ண களஞ்சியம- புலவர் த. கோவிந்தன்
அனைத்துலக மனிதனை நோக்கி- தாகூர் -தமிழில் அ.ச.ஞா
 Tagore Gandhi Nehru Krishna Krupalanai

Mahatma and Poet S Battachraya

No comments:

Post a Comment