Skip to main content

ராஜாஜியை வாசிக்கலாம்..

 ராஜாஜியை வாசிக்கலாம்..

வரலாற்று மாணவர் என்ற வகையில் ஒருவருக்கு எப்போதும் வாசிப்பு நேர்மை தேவைப்படும். தனக்கு உவப்பான விஷயங்களை கொண்டாடுவது- உவப்பில்லாத அம்சத்தை கண்ணை மூடிக்கொண்டு காணாததுபோல் நகர்ந்துவிடுவது அல்லது அதை மறைத்துவிடுவது என்பது வரலாற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியவர் செய்யத்தகாத செயலாகும். வரலாற்றில் இடம் பிடித்த ஒருவர் குறித்த பல பக்கங்களை பார்க்கும்போதுதான் சற்று balanced மதிப்பீட்டிற்கு ஒருவரால் விருப்பு- வெறுப்பை குறைத்துக்கொண்டு வரமுடியும். எழுதுவது என்பது வெறும் Hagiography புனிதர்களின் திருச்செயல்களாக மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்பது முக்கியமானது. அதேபோல அவர்களின் தவறுகள் குறித்த வெறும் குற்றப்பத்திரிகைகளாகவும் அவை சுருக்கப்படக்கூடாது. critical appraisal- appreciation என்கிற பழக்கம் பொதுப்பழக்கமானால் சமூகம் நின்று நிதானமாக செயல்பட அப்போக்கு உதவிசெய்யும். ராஜாஜி குறித்த வாசிப்பும் அப்படித்தான் இருக்கவேண்டும்.
ராஜாஜி குறித்து அவரது பேரன் ராஜ்மோகன்காந்தி உடபட பலர் எழுதியுள்ளனர். ஆயினும் காந்தி, நேரு, அம்பேத்கர்,பெரியார் போல ராஜாஜியின் அரசியல் பொருளாதார சமூக சிந்தனைகள் ஏன் தொகுக்கப்பட்டு விவாத வெளியை போதுமான அளவு எடுத்துக்கொள்ளவில்லை என்கிற கேள்வி கூட ஏன் எழவில்லை? சிந்தித்தால் கிடைக்கும் பதில் அவருக்கான தனித்த தொண்டர்படை- பக்திகுழாம்- அமைப்பு இந்தியாவில், தமிழகத்தில் இல்லை என்பதாக அமையலாம்.
ராஜாஜி என்றால் மூதறிஞர் என்ற அடைமொழி- அரசியல் வித்தகர் என்ற பார்வை இருக்கலாம். அவரின் இராமாயணம்- மகாபாரதம் ஓரளவிற்கு வாசிக்கப்பட்டிருக்கலாம். அவர் அறிவை- சிந்தனைப்போக்கை- அரசியலை எப்படி எக்கருத்துக்களால் புரிந்துகொள்ளலாம் என்கிற விவாதம் இந்திய தமிழ் சூழலில் இல்லாதது போலவே இருக்கிறது.
தமிழகத்தில் ராஜாஜி என்றால் இந்தி திணிப்பை செய்து எதிர்ப்பை சம்பாதித்தவர்- குலக்கல்வி திட்டம் கொணர்ந்து கடும் விமர்சனங்களை பெற்றவர், சத்தியமூர்த்தி- காமராஜர்க்கு எதிராக கோஷ்டி கட்டியவர் என்பதே பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும். பெரியார் அவரை வாழ்நாள் முழுதும் எதிர்த்தாலும் முக்கிய தருணங்களில் அவரது ஆலோசனையை பெற்றார்அண்ணாவின் திமுக ஆட்சிக்கு வர முக்கிய காரணியாக இருந்தவர் என்பது கூட பெரும்பேசுபொருளாக இருந்திருக்காது.
தேசிய அளவில் காந்தியின் சீடர்- சம்பந்தி- அவரின் மனசாட்சி, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகி, 1942 போராட்டத்திற்கு எதிராக இருந்தவர், பாகிஸ்தான் உருவாவதை ஆதரித்தவர், கவர்னர் ஜெனரல், நேருவை- காங்கிரசை எதிர்த்து படுபிற்போக்கான சுதந்திரா எனும் பணக்காரர்களின் கட்சியை துவங்கியவர் என்கிற செய்திகளில் அவர் நிறைந்துவிடுவார்.
ராஜாஜி விஞ்ஞானத்தை நேசித்தவர்- சிந்தித்தவர்- எழுதியவர் என்பது கூட இங்கு செய்தியாகவே இருக்கும். அவர் அறநூல்கள் குறித்து பொழிப்புரை தந்தவர். திருக்குறள், பஜகோவிந்தம் ,கீதை, உபநிடதங்களின் சாரம் என்பவற்றையும் எழுதியவர். இந்து வாழ்க்கைமுறை எனும் புத்தகம் எழுதியவர். கம்பனின் இராமாயணம் குறித்து வானொலியில் ஆங்கில உரை தந்தவர்.
புனே கம்யூனல் அவார்ட் உடன்பாட்டின்போது அம்பேத்கரும் ராஜாஜியும்தான் பேனாவை மாற்றிக்கொண்டார்கள் . அம்பேத்கர் எழுதிய What Congress and Gandhi have Done to the Untouchables என்பது பெரிதாக பேசப்பட்டுள்ளதுபோல ராஜாஜி அதற்கு பதிலாக Ambdkar Refuted என சிறு வெளியீட்டை எழுதியுள்ளார் (சந்தானம் அவர்களும் ஒன்று எழுதியுள்ளார்) என்பது கூட பொதுவெளியில் சேர்ந்து சொல்லப்படாத அறிவுச்சூழல் இருப்பதைப் பார்க்கிறோம்.
சத்யமேவ ஜெயதே என்கிற ஆங்கில தொகுப்பு - இரண்டு 1956-61வரையிலான அவரது சுயராஜ்ய இதழ் கட்டுரைகளைக் கொண்ட விரிவான 1200 பக்க அளவிலானவை. Dear Reader 1961-1972 காலத்தில் அவர் எழுதியவை- 350 பக்கங்களை கொண்டிருக்கும். Rajaji Reader 250 பக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் அவரின் அரசியல் பொருளாதார தத்துவ சிந்தனைகள் இருப்பதைக் காணமுடியும். தமிழில் சிறு வெளியீடுகளாக அவரின் மணிவாசகம், ஆத்ம சிந்தனை, ராஜாஜி கட்டுரைகள், அச்சமில்லை, கெமிஸ்ட்ரி குறித்து திண்ணை ரசாயனம், தாவரங்களின் இல்லறம் போன்றவை இருப்பதைக் காணமுடியும்.
ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்ட நெறிகள், அரசியல் நடைமுறைகள், அரசு அதன் தன்மை, தேசிய பொருளாதாரம்- திட்டமிடுதல் மற்றும் அதன் பிரச்னைகள், கைத்தொழில்- கூட்டுறவு- ஆலைத்தொழில், மீன்பிடித்தொழில் என பல்வேறு தொழில்கள் குறித்து, வெளிநாட்டு உறவுகள், வகுப்புவாதம் எனும் நோய், நிலப்பிரச்னை, மொழி பிரச்னை , கம்யூனிசம், காந்தியும் கம்யூனிசமும், கட்சிகளும் நன்கொடைகளும், கட்சிக்குள் சுதந்திரம் என்பதாவது, சுதந்திரத்தின் சாரம், காந்தி வழியிலா காங்கிரஸ், சொத்தும் சுதந்திரமும், மய்யப்படுத்தல், யார் பிற்போக்காளர், நேருவின் மரபு, இந்திய தத்துவமும் நவீன உலகும், சமயம்- அறிவியல்- தத்துவம், பத்திரிகைகளின் பொறுப்பு, சைவம்- வைஷ்ணவம், தமிழ் எழுத்துக்கள் - கலைச்சொற்கள், தமிழ் இசை, உணவு போன்ற பல்வேறு அம்சங்களை அவர் விரிவாக விவாதித்திருக்கிறார். வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்ததென்ன என்கிற சிறு கட்டுரையைக்கூட அவர் எழுதியுள்ளார். Indian Communism என்கிற சிறு வெளியீட்டில் அவர் இந்திய கம்யூனிஸ்ட்களுடன் கடும் விமர்சன உரையாடலை நடத்தியுள்ளார். லெனினை மதுவிலக்கில் அவரது ஆணைகளை மேற்கோள் காட்டி உரையாடுகிறார்.
ராஜாஜி வாசிப்பு அவரின் 70 ஆண்டுகால பொதுவாழ்க்கை மட்டுமல்ல. அவை விடுதலை இந்தியாவின் கட்டுமான விவாதமும் கூட.



அபேதவாதம் பற்றி ராஜாஜி சிறைக்கைதிகளிடம் பேசியதை தமிழில் 1935ல் புத்தகமாக கொணர்ந்தார்கள். முந்திய ஆண்டில்தான் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை ஜெயபிரகாஷ், நரேந்திரதேவா, சம்பூர்ணானந்த் போன்றவர்கள் துவங்கியிருந்த சூழல். அவர்களை காந்தி வரவேற்றிருந்தாலும் அவர்களது வேலைத்திட்டம் குறித்து காந்தி தன் விமர்சனப் பார்வையை தந்திருந்தார். அதை கணக்கில் கொண்டு ராஜாஜி உரையாற்றியது போல் உரையை படிக்கும்போது உணரமுடிகிறது. ராஜாஜியின் அபேதவாதம் புத்தகத்தை சுதந்திர சங்கு வெளியிட்டுள்ளது. தி ஜ ர அவர்கள் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.

அபேதவாதம் அல்லது பொதுவுடைமை வாழ்க்கை..ராஜாஜி எழுதியதிலிருந்து சில வரிகள்
பொதுவுடைமை என்பது சமத்துவத் தொழில் பிரிவினை- தனி மனிதர்களுக்குச் சொத்துரிமை கிடையாது..உலகத்தில் நடைபெறவேண்டிய சகல உழைப்பையும் உலக மனிதர்கள் யாவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுவார்கள். எல்லா மனிதர்களும் தங்கள் தேவைக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக்கொண்டு தன் சக்திக்கியன்ற வேலையைச் செய்வார்கள். பொதுவுடைமை ராஜ்யத்தில் இது என் வீடு, என் பணம், என் மகன்/மகள்/பேரனுக்குப் போய்ச் சேரும் என்றெல்லாம் சொல்லக்கூடிய சாமான்கள் இருக்கமாட்டா. ..தனி மனிதனுக்கு சொத்தே இல்லாத உலகத்தை உருவகம் செய்து பார்க்க இயலாமற் நமக்குப் போகிறது..
தண்ணீர் விஷயத்தில் நதியும் ஏரியும் யாவருக்கும் உபயோகமாகின்றன- பொதுவாக நிர்வகிக்கப்படுகின்றன. தபால் போக்குவரத்து ஊழியம் சமூகம் பூராவுக்கும் பொதுவாய் நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதனிடமும் கடிதம் போய்ச் சேருகிறது. இவ்வேலையை ஜனசமூகம் சேர்ந்து செய்யவில்லையா. இதே மாதிரியே சகலமான செளந்தரியக் காட்சிகளையும் எல்லோரும் ஐக்கியமாய் அனுபவித்து இன்புறும் வண்ணம் பொதுவில் நிர்வகிக்க முடியும்- அது சாத்தியமேயாகும்.
பொதுவுடைமை ராஜ்யத்தில் ஒவ்வொருவனும் தன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் சொத்தை தேசத்தின் தர்மகர்த்தாபோல் பரிபாலனம் செய்வான். தன் சொத்தென்று நினைத்து நடத்த மாட்டான்..
சகல சொத்தையும் தேசம் முழுவதற்கும் சொந்தமாக அதாவது பொதுவுடைமையாகச் செய்து விடுவதால் சொத்து அழிவடைந்து நாசமாய்ப் போய்விடாது.
பலாத்காரம் என்பது பொதுவுடைமைத் தத்துவத்தில் ஒரு முக்கிய அம்சமல்ல. ருஷ்யாவில் பலாத்காரத்தை உபயோகித்தார்கள்; அது ஒரு வழி. ஜனங்களில் மிகப்பெரும்பான்மையானவர் நம் கட்சியில் இருப்பார்களானால் நாம் பலாத்காரத்தை உபயோகிக்க வேண்டிய அவசியம் நேராது. சொத்து விஷயத்தில் மகாத்மா காந்திக்கும் பொதுவுடைமைவாதியைப் போலவே அபிப்பிராயங்கள்். ஆனால் பலாத்காரம் உபயோகிப்பதை அவர் வெறுக்கிறார்.
பொதுவுடைமைத் தத்துவம் ஈஸ்வரனின் கருணையில் நம்பிக்கை கொண்டது..தனிமனிதர்களுக்கு சொத்துரிமை இருந்தால்தான் உலகம் நடக்கும் என்றும் பொதுவுடைமை சரிப்பட்டு வராது என்றும் சொல்லுபவன் கடவுளிடமே நம்பிக்கையில்லாதவன்..எல்லாரும் சுகமாய் வாழ்வதற்கு இந்த உலகம் போதாது என்றும் சிலரே இதில் சந்தோஷமாய் வாழமுடியும் என்றும் நினைப்பவன் அவன். அது நாஸ்திகம்.
பொதுவுடைமை ராஜ்யத்தை உடனே ஸ்தாபித்துவிட முடியாது; சிறுக சிறுகத்தான் ஸ்தாபிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு தொழிலையும் பொதுவுக்கு மாற்றி வந்தால் கடைசியில் சகல தொழிலுமே பொதுநிர்வாகத்தின் கீழ் வந்துவிடும்.
எந்தக் காரியம் அவசியமாகவும் கஷ்டமானதாயுமிருக்கிறதோ அந்தக் காரியமெல்லாம் எந்தக் காலத்திலும் கெளரவிக்கப்படும். தற்போது அசாத்தியமாய் இருப்பவை பொதுவுடைமை ராஜ்யத்தில் சாத்தியமாகிவிடும். இந்த வேலையை இந்த பிறப்பினர் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள். பிளஷவுட் கக்கூஸ் ஓர் ஏழையின் வீட்டில்கூட ஏற்பட்டுவிடும்.
பொதுவுடைமை வரும்வரை நீங்கள் காத்திருக்கவேண்டியதில்லை. தற்போதைய வாழ்க்கை முறைையில் கூட தோட்டிகள் இல்லை- தத்தம் வேலையை நீங்களே செய்துகொள்ளவேண்டியதாய்த்தான் நேரப்போகிறது..அதற்கென்று தனி ஜாதி இருக்கப்போவதில்லை. பொதுவுடைமை வாழ்க்கைக்கு முதற்படி மனிதன் வாழ்க்கையிலே மிக அவசியமான தோட்டி வேலைதான். இதை நீங்கள் கவனிக்காவிட்டால் ஒரு ராஜங்கத்தை உங்களால் நடத்த முடியாது.
பொதுவுடைமை ராஜ்யத்தில் உடல்நோய் மாத்திரமல்ல, மனநோய்களைப் பற்றியும் கவனிக்கப்படும். சிடுமூஞ்சித்தனம், எப்ப பார்த்தாலும் குறை சொல்வது, அடிப்பதில் ஆசை கொண்டவன் போன்ற துர்க்குணங்கள் படைத்த மனிதர்களுக்கு இல்வாழ்க்கை தகுதியில்லை என்றே முடிவு செய்யப்படும்.
போல்ஷ்விசமும் பொதுவுடைமையும் ஒரே விஷயம் போல இவ்விஷயங்களை நான் சொல்லியுள்ளேன். நான் சொன்னது பலாத்காரத்தின் மூலம் ஸ்தாபிக்கும் பொதுவுடைமை ராஜ்யத்தைப் பற்றியல்ல. கல்வி, அமைதியான சீர்திருத்தம் மூலம் ஸ்தாபிக்கும் பொதுவுடைமை ராஜ்யத்தைப் பற்றியே..பலாத்காரத்தை உபயோகித்தால் லட்சியம் தள்ளிப்போய்த் தாமதமே ஏற்படும் என்று தான் தோன்றுகிறது”
May be an image of 1 person and eyeglasses
All reactions:
Saravanan Subramanian, Arjunan Arjunan and 11 others

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா