Louis Althusser ( 1918-1990) எழுதிய For Marx , Lenin and Philosophy, Reading Capital போன்றவை மார்க்சிய அறிவு வட்டாரத்தில் அவரின் முக்கிய ஆக்கங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இதில் அல்தூசரின் ‘மார்க்சிற்காக’ எனச் சொல்லப்படும் நூல் 1960களின் ஆரம்ப ஆண்டுகளில் எழுதப்பட்டு பிரஞ்சு மொழியில் வெளியானது. இந்த கட்டுரைகளின் ஆங்கில தொகுப்பு 1969ல் வெளியானது. அதை பென் ப்ருஸ்டர் மொழி பெயர்த்தார். ஆங்கில நூல் இணையத்தில் கிடைக்கிறது.
மார்க்சிய ஆர்வலர், அமைப்பியல் ஆர்வலர்கள் சிலர் படித்திருக்கக்கூடும். இந்நூலை புகழ் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் பேரா பூர்ணசந்திரன் அவர்கள் தமிழில் தருவதில் பெரும் உழைப்பை நல்கியுள்ளார். தோழர் முத்துமோகன் பதிப்பாசிரியர் உழைப்பை நல்கியுள்ளார். சவாலான ஆக்கம். தமிழ் அறிவுலகிற்கு என் சி பி எச் கொடுத்திருக்கும் கொடையாக பாவிக்கலாம். 2021 ல் கொணர்ந்தனர்.
For Marx என்ற நூல் இப்போது மொழி பெயர்ப்பில் ‘மார்க்சுக்கு ஆதரவாக ‘ என்கிற தமிழ் நூலாக கிடைக்கிறது. இந்நூலை வாசிக்க பொறுமையும் நிதானமும் தேவைப்படலாம். உள்வாங்கிக்கொள்ள கவனம் தேவைப்படலாம். மொழிபெயர்ப்பாளர்க்கு சவாலாக இருந்திருக்கக்கூடும். பேரா பூர்ணசந்திரன் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்ற வகையில் இந்த சவாலை சிரமம் அதிகமின்றி எதிர்கொண்டிருந்திருப்பார். இளம் மார்க்ஸ், இடை மார்க்ஸ், முதிர் மார்க்ஸ் இணக்கமா, அறிவு முறிவு பாய்ச்சலா / அறிவு உடைவு என்ற மய்யமான கேள்வி இதில் விவாதமாக்கப்பட்டிருக்கும்.
மனிதாபிமான கருத்தியல் தள மார்க்சா, முதிர்ந்த அறிவியல் தள மார்க்சா என்பது பேசப்பட்டிருக்கும். இதை மனிதவியல் தளம்- சமூகத் தளம் என முத்துமோகன் பேசுகிறார்.
மொழியாக்கம் அவ்வளவு எளிமையான ஒன்றல்ல எனக் கருதத்தக்க பல பத்திகள் இதில் இருக்கின்றன.
இரண்டாவது அத்தியாயம் on the Young Marx . அதிலிருந்து சில வரிகளைத் தருகிறேன். அதற்கான பூரண சந்திரனின் மொழிபெயர்ப்பையும் தந்துள்ளேன்
“ This is the location of the discussion: the young Marx. Really at stake in it : Marxism. The terms of the discussion: whether the young Marx was already and wholly Marx”
மேற்குறித்த தமிழ் நூலில்
“ விவாதத்தின் அமைவுக்களம் இதுதான் : ‘ இளம் மார்க்ஸ்’ . உண்மையில் அதில் ஆபத்தில் இருப்பது : மார்க்சியம். விவாதத்தின் பொருள்: இளம் மார்க்ஸ் ஏற்கனவே, முழுமையான ( முதிர்ச்சி பெற்ற) மார்க்ஸாக இருந்தாரா என்பது.
ஆங்கிலத்தில் the young Marx என்பது quote க்குள் இல்லை. தமிழில் வந்துள்ளது.
“ very schematically, if they want to rescue Marx from the perils of his youth with which his opponents threaten them, they can either agree that the young Marx is not Marx; or that the young Marx is Marx. These extreme theses may be nuanced; but their inspiration extends even to their nuances”
தமிழில் பூரண சந்திரன்
“ மிகுந்த திட்டப்படியாக, அவரது எதிரிகள் அச்சுறுத்துகின்ற அவரது இளமையின் தவறுகளிலிருந்து அவர்கள் மார்க்ஸைக் காப்பாற்ற விரும்பினால், அவர்கள் இளம் மார்க்ஸ் மார்க்ஸே அல்ல என்றோ, இளம் மார்க்ஸ் மார்க்ஸ் தான் என்றோ இரண்டில் ஒன்றை ஒப்புக்கொள்ளலாம். இந்த எதிர்முனை முடிபுகள் சிக்கலானவை, பலவித அர்த்தச் சாயைகள் கொண்டவை ஆகலாம்; ஆனால் அவற்றின் அகத்தெழுச்சி, அவற்றின் நுட்பங்களுக்கும் நீள்கிறது.”
இங்கு perils என்பது தவறுகள் என்றும், nuanced சிக்கலானவை பலவித அர்த்த சாயைகள் என்றும், nuances நுட்பங்கள் என்றும் செய்யப்பட்டுள்ளன.
“ on the contrary, to think the unity of a determinate ideological unity( which presents itself explicitly or implicitly ‘lived ‘ as a whole or as an intention of ‘totalisation’) by means of the concept of it’s problematic is to allow the typical systemic structure unifying all the elements of the thought to be brought to light, and therefore to discover in this unity a determinate content which makes it possible both to conceive the meaning of the ‘ elements’ of the ideology concerned- and to relate this ideology to the problems left or posed to every thinker by the historical period in which he lives”
மொழிபெயர்ப்பாளர்
“ மாறாக, ஒரு நிர்ணயித்த கருத்தியல் ஒருமையின் ஒருமை அதன் பிரச்சினைத் தளத்தின் கருத்தாக்க வாயிலாகச் சிந்திப்பது ( அது வெளிப்படையாகத் தன்னை ஒரு முழுமையாகக் காட்டிக்கொள்கிறது, மேலும் வெளிப்படையாகவோ, உள்ளார்ந்தோ முழுமையாக்கத்தின் ஓர் உள் நோக்கமாக வாழப்படுகிறது) என்பது அதன் வகைமாதிரியான ஒழுங்கமைவுக் கட்டமைப்பை அச்சிந்தனையின் எல்லாக் கூறுகளையும் ஒருமைப்படுத்தி வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாகிறது. ஆகவே இந்த ஒருமையில் ஒரு நிர்ணயித்த உள்ளடக்கத்தைக் கண்டுபிடிப்பது, குறித்த கருத்தியலின் கூறுகளின் அர்த்தத்தைக் கருதுவதற்குச் சாத்தியமாகிறது. அதே சமயம் இந்தக் கருத்தியலை ஒரு வரலாற்றுக் கட்டத்தில் வாழும் ஒவ்வொரு சிந்தனையாளருக்கும் முன்வைக்கப்படும் அல்லது விடப்படும் பிரச்சனைகளுடன் தொடர்புறுத்தவும் சாத்தியமாகிறது”
இது போல் நூல் விரிகிறது. அன்றாட வேலை அழுத்தங்களில் இருப்பவர்களுக்கு நேரம் கிடைக்காது. மார்க்சிய தத்துவ தேடலுக்கு என்று தனித்து ஆர்வத்துடன் நேரம் ஒதுக்குபவர்களுக்கான நூலாக இதைக் கொள்ளலாம்.
மொழி பெயர்ப்பு தேர்ச்சி குறித்து அதில் தோய்ந்த அறிஞர் பெருமக்கள் கருத்து கூறமுடியும்.
அல்தூசரின் ‘மார்க்சுக்கு ஆதரவாக’ பூரணச்சந்திரன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலில் அத் 4 ‘ பிக்காலோ அரங்கு படித்துக்கொண்டிருந்தபோது, முப்பதாண்டுகளுக்கு முன்னரான நினைவுகள் ஓடின. அல்தூசர் பொருள்முதல்வாத நாடகக்குழு பற்றிய குறிப்புகள் - நாடகம் ஒன்றை விவரித்து பெர்த்தோலஜி மற்றும் பிரக்ட் குறித்து இதில் விவாதித்திருப்பார்.
பிரக்ட் பற்றி வங்கித் தலைவர் தோழர் ரகுபதி பேசியதும், திருவாரூர் தெருக்களில் அவரது நாடகத்தை நிகழ்கலையாக - நிஜ நாடகங்களாக மக்கள் கொஞ்சம் பேராவது கூடி பார்த்திருக்க நிகழ்த்தியதும் நினைவு சுழலாக நிற்கிறது. தொலைபேசித் தோழர்கள், சமீபத்தில் மறைந்த தொழிற்சங்கத் தலைவர் கார்த்தி உட்பட பலரும் ரகுவுடன் நிகழ்கலைகளை, தப்பு பறைகளை முழங்கி வலம் வந்த நினைவுகளை அல்தூசர் கிளறிவிட்டார்.
திருச்சி கூட்டம் ஒன்றில் staging Change என்கிற புத்தகம் குறித்து பேசிவிட்டு , நாடகம் முடித்த தோழர்களுடன் கீழ் இறங்கி வந்தபோது, எங்களைப் போலவே இளம் வயதில் இருந்த அன்றைய தொலைபேசி ஊழியர் - இன்றைய பேரா ராஜன் குறை அவர்கள் அப்புத்தகம் குறித்து, நிகழ்கலை குறித்து என்னுடன் பேசினார் என்று நினைவுச் சொல்கிறது.
சரி நினைவிலிருந்து விடுபட்டு , அல்தூசர் இந்த அத்தியாயத்தில் பேசும் சில வரிகளை தந்துள்ளேன். பூரண சந்திரன் நன்றாக மொழியாக்கம் செய்து உதவியுள்ளார். இனி அல்தூசர் வரிகள்.. என் வசதிக்கேற்ப..
“ ஒன்றுபடுதலில் பார்வையாளர்கள் கதாநாயகனின் விதியோடு சேர்ந்து தொங்குகிறார்கள்.. கதாநாயகன் இல்லை என்றால் ஒன்றுபடுதல் இல்லை . கதாநாயகனை ஒடுக்குதல், பிரக்டின் பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்துடன்- வெகுமக்கள் தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள், கதாநாயகர்கள் அல்ல- தொடர்புபடுத்தப்படுகிறது”
“ கதாநாயகனின் காலத்தன்மைதான் முழுமையான காலத்தன்மை. பிற எல்லாம் அதற்குக் கீழ்பட்டவை. அவனது எதிரிகளும் அவனது சமத்திற்கு ஆக்கப்படுகிறார்கள். அவனது எதிரிகளாக இருக்கவேண்டும் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். அவனது காலத்தை அவனது லயத்தை அவர்கள் வாழ்ந்தார்கள், அவனை சார்ந்திருந்தார்கள். அவர்கள் வெறும் சார்பினராகத்தான் இருந்தார்கள்.”
“ எதிரி உண்மையிலேயே அவனது எதிரிதான். மோதலில் கதாநாயகன் எதிரிக்கு சொந்தமானவன். எதிரியும் கதாநாயகனுக்கு சொந்தமானவன். எதிரி, நாயகனின் இரட்டை, அவனின் பிரதிபலிப்பு. அவனது மறுதலை, அவனது இரவு, அவனது சபலம் . அவனது சொந்த நனவிலி அவனுக்கு எதிராக திரும்பிய நிலை…”
“ பிரக்ட் நாடகங்களில் நாயகர்களை இல்லாமல் செய்துவிட்டதால் நாயகர்கள் மறைந்துவிடவில்லை. …நாடகம் அவர்களை சாத்தியமற்றவர்களாக்குகிறது. அவர்களையும் அவர்களின் பிரக்ஞையையும் அதன் போலி தர்க்கத்தையும் அழிக்கிறது…கடவுளும் இல்லை சீசரும் இல்லை…. பார்வையாளர் நாடகத்தின் உயரிய நடுவராக இருக்க முடியாது. நாடகமும் தனது சொந்தக் கதைக்குள் இறுதித் தீர்ப்பை உள்ளடக்க இயலாது “
“ நாம் முதலில் ஒரு நிறுவனத்தால், நிகழ்த்தலினால் இணைக்கப்படுகிறோம்… நமது ஒப்புதலின்றி நம்மை ஆட்சி செய்கின்ற அதே தொன்மங்கள், அதே கருப்பொருள்கள்.. இன்னும் அதே ரொட்டிகளை உண்கிறோம். அதே கோபங்கள், கலகங்கள், அதே பைத்தியக்காரத்தனம்…எந்த வரலாற்றினாலும் நகர்த்தப்படாத ஒரு காலத்தின் முன் அதே விழுந்து கும்பிடுதலும் இருக்கவே செய்கிறது.”
“ அதே தூசி நம் கண்களில், அதே மண் நம் வாய்களில். நமக்கும் அதே விடியலும் இரவும் தான்..அதே வரலாற்றைத்தான் பகிர்ந்துகொள்கிறோம். நமது நனவிலிகள்….”
இப்போது இந்தியாவில் நடக்க இருப்பது தேர்தல் - நாடகமல்ல என மனம் நம்பட்டும்
சில நேரங்களில் , ஓ இந்த புத்தகம் தமிழில் வந்துவிட்டதா என ஆசை பொங்க வாங்கி படிக்க ஆரம்பிக்கும் போது சற்று ஏமாற்றம் கிடைக்கும் அனுபவம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்பட்டிருக்கலாம்.
வலுவான சிக்கலான கோட்பாட்டு புத்தகங்களில் மட்டுமல்ல, சில எளிய புத்தக மொழிபெயர்ப்புகளிலும் கூட இந்த அனுபவங்கள் ஒருவருக்கு கிடைத்திருக்கக்கூடும்.
அட போங்கப்பா ஆங்கிலத்திலேயே மல்லுக்கு நின்றிருக்கலாம் என்ற எண்ணத்தை லூகாக்ஸ் புத்தகம் ஒன்றும் அல்தூசர் புத்தகம் ஒன்றும் எனக்கு கொடுத்தன.
அல்தூசரின் for Marx யை தொட்டும் விட்டும் நிறுத்தாமல், ஆங்கிலத்திலேயே படித்திருந்தால் கொஞ்சம் அஜீரணம் குறைவாக ஒருவேளை இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது. எனது படிப்பு குடலின் சக்தி அவ்வளவு தானோ..கஷ்டப்பட்டு அரைக்கப்பார்த்தும் கவளங்கள் அரைபடாமல் போனது.
“மார்க்சுக்கு ஆதரவாக “ - மொழி பெயர்ப்பாளர் என்ன செய்வார்..அவர் உழைப்பைத்தான் கொடுக்க முடியும். பிராக்கட்டு பாராக்களைக் கூட அட்சரம் அட்சரமாக மொழி பெயர்த்து தான் தரவியலும். எனக்கு செரிக்கனுமே.. என் படிப்பு குடலுக்கு என்ன பிரச்சனையோ..
ஒரே அஜீரணம்…
முடிஞ்சால் படிங்க , யார் கண்டா- உங்களுக்கு செரிமான சக்தி கூடுதலா இருக்கலாம்
Comments
Post a Comment