https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 25, 2024

வாழ்வு என்கிறான் ஆசை - முரண் என்கிறான் இசம்

 வாழ்வு என்கிறான் ஆசை - முரண் என்கிறான் இசம்

மனிதன் கற்கத் தகுந்தவனாக இருக்கிறான். கற்றவற்றை சோதித்துப் பார்த்து உயர விழைகிறான். அவனுக்கான ஏணிப்படிகளில் இறுதிப்படி கூட செல்கிறான். அதற்குப் பின்னால் என்ற கேள்விக்கும் உட்படுகிறான். புதிய உயரத்தை set செய்துகொள்கிறான்- ஆனால் போதவில்லை. வெறுமை என உணர்ந்து , அண்ணாந்து பார்ப்பதின் அவஸ்தையை உணர்கிறான்.
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என அவனுக்கு சொல்லித்தரப்படுகிறது. ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது எனவும் எழுதப்பட்ட ஏடு அவன் முன் வீசப்படுகிறது. வெற்றியாளன் வெளியேறமாட்டான் என்கிற போர்டை அவன் கழுத்து அணிகிறது. துறத்தல் விடுபடல் ஆசை அறுத்தல் தானே ஆகச் சிறந்தது என எதிர் பேச்சு எழுகிறது. பட்ட பாட்டிற்கு என்ன என்கிறான் பலன். விளைவைப் பார்க்காதே என்கிறான் செயல். செயலற்று இரு என்கிறான் மந்திரம்.
மூளையிலிருந்து பேசாதே இதயத்திலிருந்து பேசு என அன்பு சொல்கிறான். பகுத்தறிந்து பார் என அறிவு பேசுகிறான். என் மூளையால் என்னை சிந்திக்க விடு என எதிர்ப்பாளன் திமிறுகிறான். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்கிறான் தமிழ். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்கிறான் சமூகம். தனித்திரு விழித்திரு என்றான் கொரோனா.
அன்னதானம் அற்புதம் என்கிறான் நன்கொடை. அங்கும் உன் முகம்தான் தெரிகிறது என் முகம் எங்கே என்கிறான் பட்டினி.
கசிந்துருகு என்கிறான் இரக்கம். ஈவு காட்டாதே என்கிறான் நீதி.
நமோ மயம் என்கிறான் ஆதாயம். என் தலைவன் தான் எல்லாம் என்கிறான் கைத்தடி. மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்கிறான் குறள்.
என்னை நம்பி வா சொர்ர்க்கம் என்கிறான் ஏகாதிகாரம். சாம்ராஜ்யங்கள் சரிந்தது அறிவாய் என்கிறான் வரலாறு.
எல்லாம் அவன் செயல் என்கிறான் ஈசன். நான் பார்த்துக்கொள்கிறேன் விடு என்கிறான் நம்பிக்கையாளன்.
சம்பந்தமில்லாமல் பேசாதே பொருத்தமானதைச் சொல் என்கிறான் எதார்த்தம். பொன்னுலகம் காண்பிக்கிறேன் என்கிறான் உடோபியன். பெருங்கனவின் பூபாளம் என்கிறான் புரட்சி. புரட்சியின் வறட்சி என்கிறான் உடைமை.
உன் சைக்கிள் கதை எனக்கெதுக்கு என்றான் கார். காரும் மூப்பாகும் என்றான் உள்ளுணர்வு. வரும் போது வரட்டும் என்கிறான் இளமை.
அடுப்படியில்லா மாளிகை என்கிறாள் ஜுமோட்டா. கர்ப்பப்பை சுதந்திரம் என்கிறாள் சூல். மறுபடியும் பெண்ணா என்கிறான் ஆதிக்கம். சாதி இரண்டொழிய வேறில்லை என்றாள் பாட்டி. என் சாதி கொன்னுடுவேன் என்கிறான் ஆணவம்.
இல்லாதவனுக்கும் இசை என்கிறான் பொறம்போக்கு. சங்கீத கலாநிதி எதுக்கு என்கிறாள் கர்னாடிக்.
எல்லாம்தான் சொன்னீங்க என்ன பண்ணி கிழிச்சிங்க என்கிறான் கேள்வி. புனிதம் என எவனுமில்லை என்கிறான் குறை. நிறையை எடைபோடேன் என்கிறான் தர்மி.
அதையெல்லாம் செய்தேனே என்கிறான் நேற்று..அப்படியா அதெல்லாம் பழங்கதை என்கிறான் இன்று.
என்னைப்போல் அவனில்லை என்கிறான் சந்தேகி. அவனும் இருக்கட்டுமே என்கிறான் பன்முகம். வாழத்தெரியவில்லை என்கிறான் குழம்பி. வாழ்வா என்கிறான் மாயம்.
எல்லோரும் object என்கிறான் subject. நானே எல்லாம் என்கிறான் அரசு.

No comments:

Post a Comment