https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 25, 2024

periyar

 தி இந்து குழுமம் தமிழ் திசையின் அடுத்த வெளியீடு வந்துள்ளது. பெரியார் குறித்த கட்டுரைத் தொகுப்பாக ‘ என்றும் தமிழர் தலைவர்’ எனக் கொணர்ந்துள்ளனர். ஜனவரி 2024 ல் வந்த இந்நூலில் 151 தலைப்புகளில், சிறிதும் பெரிதுமாக பெரியார் விதந்து பேசப்பட்டுள்ளார். பெரியார் குறித்த கவிதைகளும் இதில் அடக்கம்.

இதற்கு முன்னர் இம்மாதிரி தொகுப்புகளாக வந்த அண்ணா, கலைஞர், ராஜாஜி போன்றவைகளின் வடிவ உள்ளடக்க பத்திரிகையாளர் பாங்கிலான சோதனைகள் இப்பெரியார் நூலிலும் செய்யப்பட்டுள்ளன . 860 பக்கங்களுக்கான நூல். ஆசிரியர் அசோகன் உள்ளிட்ட, தமிழ் இந்து இளம் குழுவினர் நன்றாக உழைத்து இத்தொகுப்பைக் கொணர்ந்துள்ளனர். தமிழ் அரசியல் உலகிற்கு நல்ல தொண்டாக எண்ணி அவர்களை நாம் பாராட்டலாம்.
15 பெருந்தலைப்புகளில் பெரியார் குறித்த கவிதைகள், கட்டுரைகள் என 151 உபதலைப்புகளில் நூலை அடுக்கியுள்ளனர். பெரியார்பாதை, பெரியார் யார், பெரியார் இன்று, ஆய்வுலகப்பார்வை (யில்) , பெரியார் விரிவும் ஆழமும், அரசியலும் போராட்டங்களும், பெண்ணுரிமைக் குரல், சாதி மத எதிர்ப்பு, மொழி கலை ஊடகம், பெரியாரின் உலகம், உடன் நின்ற உறவுகள், பெரியாரும் ஆளுமைகளும், பெரியாரின் அடிச்சுவட்டில், சுயமரியாதைக் குடும்பங்கள், சுயமரியாதை சமதர்மம் என 15 பகுதிகளாக இந்த 151 தலைப்புகள் அடக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு பகுதியுமே தனித்த புத்தகத்திற்கான தன்மையுடையனத்தான். சில தலைப்புகளில் தனித்த புத்தகங்கள் வந்துள்ளன.
முதல் பகுதியிலேயே ஆசிரியர் வீரமணி மற்றும் தொல் திருமா அவர்களின் விரிவான , ஆழமான பேட்டி இடம் பெற்றுள்ளது. கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் எழுத்துக்களும் இடம் பெறுள்ளன. இரண்டாம் பகுதியில் தோழர் எஸ் வி ராஜதுரை, ஏ எஸ் பன்னீர்செல்வன், ப திருமாவேலன், அரசு, செந்தலை கவுதமன், கலி பூங்குன்றன் உள்ளிட்டவர் பார்வை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நான்காம் பகுதியில் சுனில் கில்நானி, கார்த்திக் ராம் மனோகரன், கோராவின் பேரன் விகாஸ், அவினாஷ் பாட்டில் போன்றவர் இடம் பெற்றுள்ளனர். எழுதியவர் அனைவரின் பெயரையும் இங்கு குறிப்பிடவில்லை. பிற பகுதிகளிலும் ஏராள ஆளுமைகள், அறிஞர் பெருமக்கள், களப்போராளிகள் என பலர் எழுதியுள்ளனர்.
சிலரின் எழுத்துக்களிலிருந்து சில வரிகளாவது தரவேண்டும் எனத்தோன்றுகிறது.
ஆசிரியர் வீரமணி அவர்கள் தன் பேட்டியில் பெரியாரை உலகமயமாக்கவேண்டும், உலகம் பெரியார்மயமாக வேண்டியதின் அவசியத்தைச் சொல்கிறார்.
பெரியாருடைய தத்துவம் ஒரு சமூக விஞ்ஞானம்
பெரியார் அடிப்படையில் ஒரு மனிதநேயர். அவருக்கு முதலிலடிப்படையானது மனிதம், மனிதத் தன்மை, மனித ஒருமைப்பாடு. அவரின் கொள்கையை உற்று நோக்கினால் அவை மனிதம், சமதர்மம் என அமையும்.
என்னை இன்னொருவர் தாழ்த்தும்போது, கேவலப்படுத்தும்போது எதிர்ப்பதற்கு பெயர்தான் சுயமரியாதை. பெரியார் எந்த இடத்திலும் பொதுவெளிப் பண்பாட்டை விட்டுக்கொடுக்கவில்லை. ஒருபோதும் வன்முறையைக் கையாண்டதில்லை.
பெரியார் ஒருவர் தான் ‘நான் சொன்னாலும் நம்பாதே ‘ என்று அறிவுக்கு சுதந்திரம் கொடுத்த தலைவர். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு ‘ என்றவர்.
சாதியை ஒழிப்பது என்பதிலே அவர் முழு வெற்றி பெறவில்லை. உடனே இடித்துவிடுவதற்கு அது கட்டிடம் அல்ல. அது மனதில் இருக்கக்கூடியது.
தொல் திருமா அவர்களின் பேட்டி
பெரியார் கடவுள் மறுப்பாளர் அல்லது பார்ப்பன எதிர்ப்பாளராக மட்டுமின்றி, சமத்துவ புரட்சியாளர் என்றே நான் நம்பினேன்.
சாதி ஒழிய வேண்டும், பெண் விடுதலை, சமூக நீதி வழியில் சமத்துவம்- இதுதான் பெரியாரின் உண்மையான நோக்கம்.
அவர் பார்ப்பனர்களை பார்ப்பனியத்தை மய்யப்படுத்தி பேசினாரே தவிர, அது சமூகத்துக்கு எதிரான துவேஷம் கிடையாது.
இந்து நம்பிக்கை வேறு. சனாதனம் வேறு. பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு நிலையானது என்பது சனாதனம்.
அம்பேத்கர் மதமாற்றத்தை ஒரு உத்தியாகக் கண்டார். பெரியார் அத்கு தேவையில்லை- உள்ளேயிருந்து சண்டை போடுவேன் என்றார். இருவருக்கும் சமத்துவம் தான் இலக்கு. இருவரையும் சமமாக பார்க்கிறேன்.
அம்பேத்கரிய இயக்கம் என்ற வகையில் விடுதலை சிறுத்தைகள்தான் பெரியாரையும் முன்னிறுத்தி பேசிவரும் ஒரே கட்சி.
எனக்கு எப்போதெல்லாம் சோர்வு வருகிறதோ அப்போதெல்லாம், பெரியாரையும் அம்பேத்கரையும் எண்ணிப்பார்ப்பேன்.
பெரியாரிடம் உள்ள சகிப்புத்தன்மை, இடைவிடாத போராட்டம், கொள்கையில் உறுதிப்பாடு எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்ப்பனர்கள் அதிகமாக ஏமாற்றி பிழைப்பது சூத்திரர்களிடம்தான் நிகழ்கிறது என்றுதான் அவர்களை பெரியார் திரட்டினார். பெரியாரை பிற்படுத்தப்பட்ட நலன்களுக்காகவே செயல்பட்டவர் என்றோ, தலித் மக்களுக்கு எதிரானவர் என்றோ முத்திரை குத்துவது முற்றிலும் தவறான பார்வை.
திராவிடம் என்ற சொல்லைக் காப்பாற்றினால்தான் ஆரிய எதிர்ப்பு என்பதையும் தக்க வைக்க முடியும். திராவிடம் இல்லை என்றாகிவிட்டால், ஆரியம் இல்லையென்றாகிவிடும். எல்லோரும் இந்து என்றாகிவிடும். இந்து என்றாகிவிட்டால் பார்ப்பனர்களுக்கு பெரிய பாதுகாப்பு.
பெரியார் சிந்தனைகள் நூறாண்டுகாலமாக தமிழ் மண்ணில் நிலைப்பெற்றிருக்கின்றன. உழைப்பு பயன் தந்திருக்கிறது.
தோழர் எஸ் வி ராஜதுரை அவர்களின் கட்டுரை இனவாதியா பெரியார்? என்பதான விவாதமாக உள்ளது.
நெல்லூர் மாநாட்டில் பார்ப்பனரை உறுப்பினராக ஆக்கமுடியாது என பெரியார் முடிவெடுத்தார்.
நமது கொள்கைக்கும் நன்மைக்கும் விரோதமில்லா பார்ப்பனர்களுடன் அரசியல் நன்மையான காரியங்களில் ஒத்துழைக்க, ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்றார் பெரியார்.
1939ல் எந்த பார்ப்பனரிடமும் தனிப்பட்ட விரோதமோ பகைமையோ கிடையாது. மனிதத் தன்மையுடன் தான் எல்லா பார்ப்பனர்களிடமும் பழகி வருகிறேன் என்றார்.
பார்ப்பனியத்தை அடியோடு ஒழிப்பது என்பது முக்கிய முதன்மையான காரியம். அரசியல் வாழ்வில் மனித தர்மம் தவிர வேறு எந்த தர்மமும் புகுத்தப்படக்கூடாது என்பதுதான் என் ஆசை எனப் பேசினார்.
1962ல் பெரியார் பேசினார் “பார்ப்பனத் தோழர்களே நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல..சமுதாயத்துறையில் பார்ப்பனர் அனுஷ்டிக்கின்ற உயர்வு, அவர்கள் அனுபவிக்கின்ற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவற்றில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. பார்ப்பனர்களிடத்தில் மட்டுமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலும் நான் வெறுப்பு கொள்கிறேன். ..மக்கள் யாவரும் ஒரு தாய் பிள்ளைகள் ,தாயின் செல்வத்திற்கு உரிமை உடையவர்கள் என்று கருதுவாராயின் சமுதாய போராட்டமும் வெறுப்பும் ஏற்படவாய்ப்பே இருக்காது.
பத்திரிகையாளர் ஏ எஸ் பன்னீர்செல்வன் பெரியார் முழுமையான தமிழ் தேசியத்தின் அடையாளம் என்பதை விவாதித்துள்ளார். அதேபோல் ப திருமாவேலன் இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் எனக் கேட்டு தன் பார்வையை சொல்லியுள்ளார்.
மேற்கூறிய சில செய்திகள் இந்நூலின் முதல் 110 பக்கங்களில் இடம் பெற்றவை. நூல் 860 பக்கங்களுக்கானது..
மேலும் வாய்ய்புள்ளபோது பார்க்கலாம்
15-4-2024

No comments:

Post a Comment