இடது இலக்கியங்கள் பலவற்றை ஆகார் -Aakar வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு நூல்தான் Marx for Today. Marcella Musto எடிட் செய்த தொகுப்பு. நூல் 2008 ல் வந்திருந்தாலும், ஆகார் வழி இந்திய பதிப்பு 2018ல் வந்தது.
2010ல் மார்க்சை மீள் வாசிப்பு செய்வது என்பது முதல் பகுதி. அதில் 8 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கெவின் ஆண்டர்சன், பரேஷ், லெபோவிட்ஸ், காம்னியல், மஸ்டோ, டெரல் கார்வர், விக்டர் வாலிஸ், ரிக் உல்ப் போன்ற அறிஞர் பெருமக்கள் தங்கள் ஆய்வுக்கோணத்தை தந்துள்ளனர்.
இரண்டாம் பகுதி இன்று உலகம் மார்க்சை எப்படி வரவேற்கிறது என்பதை பேசும் பகுதி. இதில் 10 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவில், பிரேசிலில், ஆங்கில மொழிப் பகுதிகளில், பிரான்சில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா, தென்கொரியா, ஜப்பானில் மார்க்சியம் எப்படியான வரவேற்பை பெறுகிறது என கட்டுரையாளர்கள் தங்கள் உள்வாங்குதலை சொல்கிறார்கள். சொப்ரினா, பொய்ட்டோ- எட்வர்டோ, பிளேக்லெட்ஜ், ஹாப், ரகோனா, ஒயிட்டினென், ஹு, ஜெயாங், உசிதா போன்றவர் எழுதியுள்ளனர்.
இந்தியர் எவரும் இப்பகுதியில் எழுதவில்லை. முதல் பகுதியில் பரேஷ் சட்டோ கட்டுரை ஒன்றே ஒன்று உள்ளது. அவரும் கனடா பல்கலையாளர். இந்தியாவில் மார்க்சிய அனுபவங்கள் குறித்து- சோவியத் வழி பெறப்பட்ட மார்க்சிய புரிதல்- அதிலிருந்து விடுபடல் குறித்து மஸ்டோ ஏன் எவரிடமிருந்தும் கட்டுரை ஒன்றை வாங்கவில்லை என எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு இந்திய மார்க்சிய அறிஞர் எவரின் கட்டுரையாவது இடம் பெற்றிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.
இதில் இடம் பெற்றுள்ள பல கட்டுரையாளர்கள் பெயர்கள் இங்குள்ள இடதுசாரிகளுக்கு அறிமுகமாக வாய்ப்பு குறைவு எனப்படுகிறது. கெவின், மஸ்டோ, டெரல்கார்வார் போன்றவர்களின் மார்க்ஸ் குறித்த எழுத்துக்கள் சிறிய அளவாவது போயிருக்கலாம்.
20 ஆம் நூற்றாண்டில் சோவியத் சோதனை அக்டோபர் புரட்சியை அடுத்து நடந்தேறியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சோவியத் கட்சி பார்வையாகவே மார்க்சியம் கடத்தப்பட்டது. அக்கட்சித் தலைமை, அறிஞர்கள் எழுத்துக்களின் மார்க்சிய புரிதல், எப்படி அவர்கள் மார்க்ஸ் பேசியதிலிருந்து மாற்றிப் பேசினார்கள் போன்ற சில அசெளகரிய அம்சங்களை இந்நூலில் கட்டுரை ஆசிரியர்கள் விவாதித்துள்ளனர்.
மஸ்டோ தனது அறிமுகத்தில் நன்றாகவே குறிப்பிடுகிறார்..
Yet there has always been a return to Marx- a new need develops to refer his work- whether the critique of political economy, the formulations on alienation, political polemics- it has continued to exercise an irresistible fascination to both followers and opponents
டெரிடா சொல்லியதை மஸ்டோ காட்டுகிறார்
It will always be a mistake not to read and reread and discuss Marx.
மார்க்ஸ் வாசிப்பு என்பதும் கூட ஒரு பழக்கம்தான். சமூக மாற்றம் என்கிற சிந்தனைக்கு, மனிதன் விழையும் நல்லெண்ண சமூகத்திற்கான , முன்கூட்டியே திட்டமிடக் கோரும் கோட்பாடு. செயலுக்கான document .
மனித வாழ்க்கையின் பாதைக்கு என எவரும் இறுதி ஆவணத்தை தரமுடியாது என்கிற limitation உடன் , மார்க்ஸ் வாசிப்புக்களை துணைக்கு வைத்துக்கொள்ள முடியும். இயற்கை- உழைப்பு - உற்பத்தி - நுகர்வில் கண்ணியமான மானுட வாழ்க்கை என்ற கனவை மனித குலத்திற்கு நெருக்கமாக்கியவர் மார்க்ஸ். இங்கு தான் மார்க்ஸ்- காந்தி என்கிற மாபுருஷர்களின் சந்திப்பு புள்ளியைக் காணமுடியும்.
மஸ்டோ தொகுப்பு நல்லதோர் முயற்சி
Comments
Post a Comment