https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, October 10, 2023

ராஜாஜி நவபாரத சிற்பி வரிசை

 

ராஜாஜி நவபாரத சிற்பி வரிசை

ராஜாஜி வாழ்க்கை குறித்து ராஜ்மோகன் காந்தி, மூர்த்தி எழுதிய ஆங்கில புத்தகங்களை படிக்க முன்னர் வாய்ப்பு கிட்டியது. பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் தமிழில் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்கிற  ஆர் கே மூர்த்தி எழுதிய ஒன்றை - 280 பக்கங்களில்- 2006 ல் கொணர்ந்தனர். நவபாரதச் சிற்பிகள் வரிசையில் வந்த புத்தகமது.

இதை முழுமையான அவரது வரலாறு என எடுத்துக்கொள்ளவேண்டாம். ஓரளவிற்கு அவரை அறிமுகப்படுத்தும் புத்தகமாக , இளம் தலைமுறையினர் எடுத்து வாசிக்கலாம். சாகசங்கள் என பெரிதாக இருக்காது. தனக்கு அவ்வப்போது சரியென உணர்ந்ததை பேசியும் சொல்லியும் வந்ததுடன் , நடந்தும் காட்டுபவராக இருந்தார். உச்சமும் சென்றார். வீழ்ச்சியும் அடைந்தார். கொண்டாடவும் பட்டார். தூற்றவும் பட்டார்.

இந்த நூலில் கடைசி பகுதியில் குடியரசு துணைத்தலைவர்  ஜெயபிரகாஷ் நாராயணன் என ஓரிடத்தில் , வி வி கிரி என்பதற்கு பதிலாக சொல்லப்பட்ட தவறை உணர்ந்தேன். அதே போல் 1920களின் நீதிக்கட்சி ஆட்சி என்பது சொல்லப்படாமல், கடந்து போயிருப்பதையும் பார்த்தேன்.

ஆர் கே மூர்த்தி 1979 ல் எழுதிய Rajaji Life and Work புத்தகத்தின் மொழியாக்கம் எனக் கருதி தான் எடுத்து படித்தேன். அப்படியில்லை என உணரமுடிந்தது. இந்த தமிழ் புத்தகத்தை எவரும் 2 அல்லது மூன்று அமர்வுகளில் படித்துவிடமுடியும். எளிய ஒன்றுதான்.

ராஜாஜி முதல்முறை சிறை அனுபவம் பெறும் காட்சி ஒன்று இதில் சுவையாக இடம் பெற்றிருக்கும். காந்தி ஒத்துழையாமை என்றால் ஒரே வருடத்தில் சுயராஜ்யம் என்கிற நம்பிக்கையை தந்த நேரம். ராஜாஜியும் இளைஞராக, ஆம் மூன்று மாதத்தில் சிறையிலிருந்து வெளிவரும்போது, காந்தி சுதந்திரம் பெற்று இருப்பார் என நம்பிக்கையை தெரிவித்து  சிறைச் செல்வார்.

டிசம்பர் 21, 1921 அன்று ராஜாஜிக்கு மூன்றுமாத தண்டனை என்றனர்.  ஆஸ்துமா நோயாளி அவர். தயாரானார் ராஜாஜி. ஒரு டப்பா பற்பொடி, கிராம்பு,  எழுத ஒரு குயர் காகிதம், பவுண்டன் பேனா, பென்சில்கள், குண்டூசிகள், இங்க் பாட்டில், கூஜா இவற்றுடன் புத்தகங்கள்.

பைபிள், ராயின் 7 பாக மகாபாரதம், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், ராபின்சன் குருசோ- படிக்க மூக்கு கண்ணாடி, படுக்க ஜமக்காளம், கொப்பளத்திற்கு களிம்பு , ஆஸ்துமாவிற்கான கலவை மருந்து என அவர் எடுத்து வைத்துக்கொண்டார்.

சிறையில் அலுமினிய வில்லை ஒன்றை கழுத்தில் மாட்டினர். அதில் படிப்பறிவில்லாதவர் என்கிற செய்தியும் இருந்தது.  அவர் மூதறிஞர் என ஜெயில் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்காது. வேலூரில் தனிச் சிறை. அங்கு தான் ஜெயில் டைரி எழுதினார். சாக்ரடிஸ் பற்றி எழுதத் துவங்கினார்.கைராட்டை ஒன்றை வாதித்துப் பெற்றார்

அவரது திருச்செங்கோடு ஆசிரம் பற்றிய செய்தி ஒன்று.  12 ஏக்கர் நிலம் கொடுத்தவர்  இரத்தின சபாபதி கவுண்டர். ஆசிரமத்தை திறந்து வைத்தவர் அன்றைய ராமசாமி நாயக்கர்- நாம் அறியும் தந்தை பெரியார். அங்கு ‘ஹரிஜன வகுப்பு’ சார்ந்த இருவரை சேர்த்தது கிராமத்தில் அதிர்ச்சியை உருவாக்கியது.  திருச்செங்கோடு செயல்களும் அனுபவமும் தமிழக அரசியல் பொதுப் புத்திக்கு கொண்டு செல்லப்படவில்லை. இன்றைய அரசியல் bias  நடந்தேறிய பல ஆரோக்கிய  நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லாமல், வெறுப்பிற்கான விதையை நடும் விஷயங்களை மட்டுமே ராஜாஜி  குறித்து சொல்லி வைத்துள்ளது.

திருப்பதியில் தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் நுழைந்துவிட்டார் என்பதை  ஆசாரம் பெயரில் சிலர் எதிர்த்து ஆட்டம் போட்டனர். போலீஸ் வழக்கு அந்த அப்பாவி மீது பதிவானது. ராஜாஜி கருப்பு அங்கியை தூரவைத்து பல மாதங்களாகிவிட்டது. ஆனாலும் நியாயம் என்கிற வேட்கை அவரை செயல்பட வைத்தது. பாதிக்கப்பட்ட மனிதருக்காக அவர் வழக்காடினார். அம்மனிதர் கடவுளைக் காண போனதில் எந்த குற்றமும் இல்லை என்கிற ராஜாஜியின் வாதம் ஏற்கப்பட்டு, அம்மனிதர் விடுவிக்கப்பட்டார்.

1937 ஜூலையில் ராஜாஜி சென்னை மாகாண முதல்வராக தன் 9 அமைச்சர்களுடன் பொறுப்பேற்றார்.  தாழ்த்தப்பட்ட பிரதிநிதி அமைச்சரவையில் என்பதும் நடந்தேறியது. சேலத்தில் சாராய விற்பனை தடை என்ற சோதனை நடந்தது. நேர்மை, பைல்கள் பார்ப்பதில் தேர்ச்சி, நேர ஒழுங்கு,  நிர்வாக ஒழுங்கு, கடன் நிவாரண சட்டம், ஜமின் ஒழிப்பு சோதனைகள் நடந்தன.

கவர்னர் ஜெனரல், கவர்னர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர் , நேருவுடன் இணக்கம்- உரசல், சுதந்திரா சோதனை, திமுகவுடன் உறவு ஆட்சிக்கு வர துணை நிற்றல்  போன்ற ஏராள அனுபவங்களை தன்வழி தந்து போனார் ராஜாஜி.

இந்தியை திணித்தார் - குலக்கல்வி கொணர்ந்தார்- சுதந்திரா எனும் பிற்போக்குசாரிகளின் சோதனையை செய்தார் என்கிற விமர்சனங்களுக்கும் அவர் உள்ளானார். அவர் இந்தி திணிப்பையும் பிற்காலத்தில் எதிர்த்தவராகவும் இருந்தார். 

தமிழகத்தில் அவருக்கு சத்தியமூர்த்தி காமராஜ் உடன் வேறுபாடுகள் இருந்தது. காந்தியுடன் கூட அவர் 1942ல் முரண்பட்டார். திரும்ப அவர் காங்கிரசில் வர பலர் எதிர்த்தையும் அவர் உணர்ந்தார். அவர் ஒதுங்கிப் போனாலும், படேல் சொன்னார்- நேரு சொன்னார்- காமராஜ் வேண்டினார் என்பதற்காக மிக உயர்ந்த பொறுப்பான கவர்னர் ஜெனரல் பொறுப்பில் இருந்துவிட்டு, கவர்னர் மத்திய  அமைச்சர் , முதல்வர் என பொறுப்பேற்று கசந்து பலமுறை வெளியே வரவேண்டிய அனுபவத்தை பெற்றார்.

அவர் இந்த பதவிகளையெல்லாம் எடுத்திருக்கக்கூடாதோ என்கிற எண்ணம் என்னிடம் strong ஆக இன்றும் இருக்கிறது.

ஏராளம் எழுதினார் அவர். இந்திய ஞானம் என அறிந்ததை அவர் எளிமையாக தன் மக்களுக்கு கொண்டு செல்ல முயன்றார். வேத உபநிடதம், இதிகாசம் குறித்து எழுதினார். தமிழ் ஆக்கங்களைக் கொணர்ந்தார். அவர் உணர்ந்த வாழ்க்கை மற்றும் அரசியல் அறம் குறித்து உரையாடினார். தான் எளிய மனிதன் என்ற உணர்வில் இருந்தார்.

ஆரம்பத்தில் பெரியாருக்கு அவர் inspiration ஆகக்கூட இருந்தார். பல்வேறு முரண்களுடன் இருவரும் நட்பு பாராட்டினர். மணியம்மை அவர்களை திருமணம் செய்யலாம் என்கிற முடிவை பெரியார் ராஜாஜியிடம் கலந்து பேசினார் என்பதை அனைவரும் அறிவோம். ராஜாஜி வேண்டாமே என்கிற அறிவுரையை தந்தார் என்ற செய்தி போயிருக்காது. தான் அரசாங்க பொறுப்பில் இருப்பதால் திருமணம் பதிவில் சாட்சியாக கையெழுத்து இடமுடியாது எனச் சொன்ன தகவலும் இப்போது சொல்லப்பட்டு வருகிறது.

காந்திக்கும் இப்படி ஒரு நெருக்கடியான நேரத்தில்  ராஜாஜி மனசாட்சியாக நின்றார். காந்தி தனது spiritual wife என தாகூரின் அக்கா மகள் சரளா தேவி செளத்ராணியை குறிப்பிட்டிருந்தார். ராஜாஜி இங்கு காந்தியிடம் தனது எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்தவே செய்தார்.

நேருவை கேட்க ஆளில்லாமல் போகின்ற ஜனநாயக விபத்தை ராஜாஜி எச்சரித்து வந்தார்.  பொதுவுடைமை குறித்து எழுதியும், பி சி ஜோஷி, பிலிப் ஸ்பராட் போன்றவர்களுடன் அன்பாக இருந்த அவர் கம்யூனிச எதிர்ப்பாளராகவும் இருந்தார். அவரால் மினு மசானி போன்ற ஆரம்ப சோசலிஸ்ட்களை ஈர்க்கவும் முடிந்தது.

தமிழக அரசியல் வெளி  ராஜாஜியை bias இல்லாமல் - அவரது நிறை குறைகளை scan செய்ய தவறிவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.

No comments:

Post a Comment