திராவிட இயக்கமும் அதன் மரபும்
பல்வேறு தரப்புகளை அறிந்து தெளிதல் ( many ness of reality) என்பது பகுத்தறிவிற்குரிய தன்மைதான் என்றால் ஏ என் சட்டநாதன் அவர்கள் ஆற்றிய மதராஸ் பல்கலைக் கழக 1981 உரைகளை எவரும் தள்ளாமல் பொருட்படுத்தி வாசிக்கவே செய்வர்.
சட்டநாதன் உரைகளை 1982ல் மதராஸ் பல்கலை , The Dravidian Movement in TamilNadu and it’s Legacies எனக்கொணர்ந்தது. அளந்த வார்த்தைகளுடன், மிகவும் objective ஆக பேசப்பட்ட கன கச்சிதமான ஆய்வுரையாக அதைக்கொள்ளலாம். சட்டநாதன் அவர்கள் ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்பும், அதன் முக்கியத்துவம் கருதி 1984ல் மதராஸ் பல்கலைக் கழகத்தால் கொணரப்பட்டது. பெரியார் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு மேற்கொள்ளப்பட்டது.
திராவிட இயக்கம் அரசியல் சக்தியாக வளர்ந்ததின் பின்னணி, அதன் பல்வேறு அரசியல் கட்டங்கள், அரசியலில் சாதியம் செலுத்தும் தாக்கம் என்கிற மூன்று உரைகளின் தொகுப்புதான் அளவில் சிறிய ஆனால் அடர்த்தி நிறைந்த இந்த புத்தகம்.
மகராஷ்ட் ராவில் ஏற்பட்ட பிராமண எதிர்ப்பு பின்புலம், தமிழகத்தின் பின்புலம் பற்றி சட்டநாதன் பேசுகிறார். முதல் தலைப்பே இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்- இயக்கத்தின் தொடக்கம் திராவிடத்திலிருந்தா? அவர் பதிலில்..
பார்ப்பனர்களுக்கு எதிரான, பார்ப்பனர் அல்லாத பிற சாதியினரின் இயக்கம் என்றால், ஆரியர் குடியேறிய நாள் முதலே ஏதாவது வடிவில் இருந்திருக்கலாம். பெளத்தமும் சமணமும் கூட பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கங்கள் என கூறப்படலாம். ஆனால் இவை எவ்வகையிலும் திராவிட இயக்கங்கள் அல்ல.
வடபுலத்து ஆரியப் பார்ப்பனர் முழுமையான சாதிய அமைப்புடன் ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவில் குடியேறவில்லை. மாறாக, வருணாசிரம அமைப்பை, சாதியப் பண்பாட்டினை மறைமுகமாக அறிமுகப்படுத்தினர்…இந்த பண்பாட்டு தழுவலை எதிர்த்து முற்கால தமிழர்கள் போராட்டமோ புரட்சியோ மேற்கொண்டதற்கு எச்சான்றும் இல்லை.
திராவிட இயக்கம் என்னும் பெயரில் அமைந்த பார்ப்பன எதிர்ப்பு / பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் ஆங்கிலேயர் ஆட்சியில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தலையெடுத்த ஒரு புது அற்புதமாகும்…புது நெறியாகும்.
ருடால்ப் அவர்களின் ஆய்வை மேற்கோள்காட்டி, சட்டநாதன் தென்னிந்தியாவில் தோன்றிய திராவிட இயக்கம் வட இந்தியாவில் தோன்றாதது குறித்து விளக்குகிறார். அங்கு சத்திரியர், வைஸ்யர் போன்றவர்களும் இரு பிறப்பாளராக கருதிக்கொண்டனர். அங்கு உடை, பேச்சு என்பதில் பிராமணர் என தனி மாற்றம் இல்லாமல் இருந்தது.
பார்ப்பனியம் ஆழமாக இருந்த கேரளத்தில் எதிராக திராவிட இயக்கம் எழவில்லை. டாக்டர் நாயரும் சொந்த அனுபவத்தில் தமிழகப் பகுதியில் இயக்கத்தை தீவிரப்படுத்தினார். நீதிக்கட்சியின் பிறப்பு அதன் பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை , இங்கு ‘சூத்திரர்’ ஆட்சிக்கு அடிப்படையை அமைத்துக்கொடுத்தது.
அவ்வியக்கத்தின் முக்கிய மூன்று படிநிலைகள்- 1916-26 நீதிக்கட்சி காலம், 1926-49 பெரியார் தலைமையில் திராவிட சார்பு எழுந்த காலம், 1949 அண்ணா பிரிந்து திமுக உருவாக்கி ஆட்சிக்கு வந்த காலம். பார்ப்பனர் எதிர்ப்பு அல்லது திராவிட இயக்கம் சமூக அரசியல் எதிர்ப்பு இயக்கம் என்ற நிலை 1949ஆம் ஆண்டில் மங்கலாயிற்று.
நீதிக்கட்சி ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களால் வழிநடத்தப்படும் தன்னாட்சி என்று கோரினர். இயக்கமும் தென்னிந்தியர் விடுதலை கழகம் என்றே பெயரிடப்பட்டது. திராவிடர் விடுதலை எனப்பெயர் இடப்படவில்லை. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முக்கியமாக பேசப்பட்டது. சவுத்பரோ குழு, மெஸ்டன் அவார்ட் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பம்பாயில் பிராமணர் அல்லாத இயக்க அனுபவங்களைக்கொண்ட கவர்னர் வெலிங்டன் மதராஸ் வந்து உதவிகரமாக நடந்துகொண்டார்..
1920, 23,26 தேர்தல்களில் 51,61,56 பெரும்பான்மை இடங்களை பிராமணர் அல்லாதார் நீதிக்கட்சி சார்பில் பெற்றனர்.
பெரியாரின் நுழைவு பிராமணர் அல்லாதார் இயக்கத்தை திராவிடர் இயக்கமாக அடையாளமாக்கியது. திராவிடர் நாடு கோரிக்கை உருவாக்கப்பட்டது. கிரிப்ஸ் தூதுக்குழுவிடமும் திராவிட நாடு வைக்கப்பட்டது. ஜின்னாவின் two nation theory யை பெரியார் three nation theory ஆக மாற்றினார் எனச் சொல்லலாம். பிராமணர் அல்லாதார் என்பதைவிட ‘திராவிடர்’ என்பது இனப்பற்று மொழிப்பற்றை தூக்கிக்காட்டியது.
பெரியாரின் சமூக குறிக்கோளே அண்ணாவின் திமுகவிடமும் இருந்தாலும் , அரசியலில் தேர்தல் பங்கேற்பு என முடிவெடுத்து முன்னேறியது. ஆட்சி பிடித்து அண்ணா முதல்வரும் ஆனார். இந்த மாற்றம் சூத்திரர்களில் தாழ்ந்த வகுப்பாரிடமும், தாழ்த்தப்பட்ட வகுப்பாரிடமும் எவ்வளவு விரைவாக செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சட்டநாதன் அவர்களின் அடுத்த முக்கிய உரை தமிழக அரசியலில் சில முக்கிய சாதிகளின் செல்வாக்கு பற்றியதாக இருக்கிறது. பெரிய சிறிய சாதிகள் எப்படி பங்கிட்டுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை விரிவாக சட்டநாதன் பேசுகிறார். 40 ஆண்டுகளுக்கு முந்திய ஆய்வாக இருந்தாலும், இன்றும் அவர் சொல்லிய நிலைதான் எதார்த்தமாக இருக்கிறது. வன்னியர், கொங்கு வேளாளர், கள்ளர்- மறவர்- அகமுடையார், நாடார், யாதவர் கம்மாளர் உள்ளிட்ட சாதி தொகுப்புகள் செல்வாக்கு எப்படி உள்ளது எனப் பேசுகிறார்.
அரசியலில் செல்வாக்கு மிக்க குழுவாக தீவிரமாக செயல்படுவது ஆதிக்கச் சாதியினருக்கு எளிதாயிருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் செல்வாக்கை நடைமுறையில் செயல்படுத்தி வருகின்றனர். சமமற்ற நலம் பெறுவோர் என்பது எதார்த்தமாகியுள்ளது. பிற்பட்டோரில் சில சாதியினர் மட்டுமே கல்வி, அரசுப்பணிகளில் 60 விழுக்காட்டிற்கு மேல் பெற்றுள்ளனர். சில பிற்பட்ட சாதிகள் பின் தங்கியுள்ளன. மேல் தட்டில் உள்ளவர்களை நீக்குதல் என்பது வரவில்லை.
இப்படித்தான் சட்டநாதன் தன் உரையை முடித்துள்ளார்
தாழ்த்தப்பட்டோர் இயக்கம் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்திலிருந்து தன்மானக் கருத்துக்களையும், தொழிலாளர் இயக்கத்திலிருந்து அரசியல் சமூக உரிமைகளை எல்லோரும் சமமாக பெறவேண்டும் என்பதையும் எடுத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் நீண்ட நாட்களுக்கு பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அரசியல் சமுதாய கட்டமைப்பு காக்கப்பட, மய்ய மாநில அரசுகள் , இந்து சமூகம் - தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உரிய இடத்தை அளித்துப் போற்ற வேண்டும்
சமூக நீதி அப்பக்கம் பயணிக்குமா?
Comments
Post a Comment