Skip to main content

இந்திய ஜனநாயகம்

 

sep 3, 2023

இந்திய ஜனநாயகம்

இந்திய ஜனநாயகம் ஏராள சிராய்ப்புகளுடன் விழுந்து எழுந்து சமாளித்து போய் வருகிறது. விடுதலைப் போராட்டக் கனவுகள், அரசியல் அமைப்புச் சட்ட விழுமியங்கள், குடியரசாதல், 1952 முதல் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்கிற பெரும் பாய்ச்சல் புரட்சி வழியாக இந்திய ஜனநாயகம் தவழ ஆரம்பித்தது.

சாதி நாயகம், மத நாயகம், நில புல ஜமின் சொத்து நாயகம் என்று வாழ்ந்த இந்திய சமூகம் தன்னை ஓரளவிற்கு நவீனப்படுத்திக்கொண்டு, நாட்டுப் பிரிவினை - பதட்டம் கடந்து வயது வந்தோர் வாக்குரிமை- அரசியல் அமைப்பு சட்டப்படியான சட்ட அவைகள், நிறைவேற்றும் அமைச்சரவைகள், நீதி அவைகள், பத்திரிகைகள் என தனது ஜனநாயக இயக்கத்தை சாதிக்க ஆரம்பித்தது. இந்தியா தேறுமா எனக் கேட்டவர்கள் வியந்து அதன் ஜனநாயகத்தை, மக்கள் தரும் தீர்ப்பைப் பார்த்தனர்.

இந்தியா தனது ஜனநாயகப் பாதையில் சீராக செல்லமுடியாத சங்கடங்களை அனுபவிக்க ஆரம்பித்தது. எல்லாவற்றிலும் பெரும்பான்மை அடிப்படையா- அல்லது அன்றாட அனுசரிப்புகளில் பல்வேறு தரப்புகளையும் உடன் அழைத்துச் செல்வதா என்கிற தடுமாற்றத்தை அது காணத்தொடங்கியது. வலுவான ஒரே கட்சி- அதில் வலுவான ஒரே தலைவர்- அவர் மீது நாயக காவிய கடவுட் தன்மை ஏற்றி - ஏக அதிகார திசைகளை அது காணத்துவங்கியது. அந்த ஒரே தலைவர்தான் இந்தியா என சுருக்கிப் போற்றும் அகவல்கள் எழுதப்படலாயின. ஜனநாயகம் தனக்கான சாமன்ய தன்மையை இழந்து, சாகச நாயகர்களை தேடத்தொடங்கியது. நல்லாட்சி தருவதற்கு ஒரே ஒரு தேவதூதர் - அவர் யார் எனத் தேடலானது. அவரை பாட்டுடைத் தலைவராக்கிட பல்லாக்குகள் செய்யப்படலாயின.

வாக்காளர்க்கு ஒரே தகுதி  குறைந்த பட்ச வயது - முன்பு 21- இப்போது 18 என்பதை மட்டுமே  பார்க்கவேண்டிய - அதிலே தான் பெரும்பான்மை என ஆரம்பித்த ஜனநாயகம், தனது பழைய பண்டைய மூட்டை முடிச்சுகளையெல்லாம் அதன் மீது ஏற்றிக்கொண்டுவிட்டது. இப்போது வேட்பாளர்க்கும் சாதி உண்டு- வாக்காளர்க்கும் சாதி உண்டு- மதம் உண்டு- இனம் , மொழி உண்டு. இந்த பண்டைய பெருமிதங்களை ஏற்றிக்கொண்ட சவாரியாக  நவீன ஜனநாயகம் தனது தொடக்க ஆன்மாவை infect ஆக்கிக்கொண்டுள்ளது.  இன்று அதற்கு ‘பண நாயக’ என்கிற கொடும் வியாதியும் சேர்ந்துள்ளது. பணமுள்ளவன் பாராளாலாம் என்பது எழுதா கிளவி.

பெரும்பான்மை என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தீர்மானிக்கப்படவேண்டிய ஒன்று. அது எந்த fixation க்கும் அடங்காது என்ற நிலை திரிந்துவிட்டது. இப்போது மதம் எதிர் இருமைகளாக  இந்து- முஸ்லிம்  என்கிற முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வழியாக ஜனநாயகம் செலுத்தப்படலாகிறது. எத்தொகுதியில் எச்சாதி பெரும்பான்மை என்ற  முன்கூட்டிய பெரும்பான்மை வழியில் அது பயணிக்க வேண்டியதாயுள்ளது.

வயது வந்தோர் வாக்குரிமைப் படியிலான தீர்மானிக்கப்படவேண்டிய ஜனநாயகம், முன்பே தீர்மானிக்கப்பட்ட பெரும்பான்மை மத சாதி வழி சமூக வழியில் தீர்மானிக்கப்படும் நிலை முழுமையாகி வருகிறது.

இந்துத்துவா என்கிற பெரும்பான்மையை அதன் வழி விழையும் அரசியலும், இஸ்லாம் அல்லது வேறு மதவழிப்பட்ட அரசியலும் பரவலான space யை எடுத்துக்கொண்டுள்ளன. அது போலவே சாதியும் பெருமளவு இடத்தை எடுத்துள்ளது. நாங்கள் இந்து இல்லையா என அனைத்துக் கட்சிக்காரர்களையும் அந்த மத அரசியல் பேச வைத்துவிட்டது.

இந்தியர் என்ற அடையாளம் நோஞ்சானாக்கப்பட்டு, தேவையான நேரங்களில் எடுத்துக்கொண்டால் போதும்- அது பிரதான அடையாளமல்ல  என regionalisation of Politics செய்துள்ளது. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தேசிய கட்சிகள்  ஏக இந்திய அடையாளத்தை அதன் புரிதலில் முன் வைக்கும். எதிர் கட்சியாக இருந்தால் அதே தேசிய கட்சி , மாநிலங்களுக்கான குடம் கண்ணீர் வடிப்பதைக் கண்டு வருகிறோம்.

இப்போது ‘சாதி சென்சஸ்’ என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஒருவேளை அது வந்தால் , எந்த சாதி எவ்விடத்தில் என்ன சதத்தில் எவற்றையெல்லாம் பெற்றுள்ளது. அந்த ‘ நம்ம சாதிக்காரர்’ அடைய வேண்டிய தூரம் என்ன என்பது  கணக்காக மாறும். எக்கட்சியில், எவ்வமைப்பில் எந்த அளவு பொறுப்புகளில் எந்த சாதிக்காரர்கள் என்கிற கணக்கும் பார்க்கப்படும். இப்போதும் அது உள்ளார்ந்து இல்லாமல் இல்லை. ஏற்கனவே உள்ளார்ந்து federation of castes ஆக இருக்கும் இந்தியா அதை வெளிப்படையாக செலாவணியாக்கலாம். 

மத சாதிய அடையாளங்களின் இடமாக வீடு, பள்ளி, சந்தைகள், நிறுவனங்கள், போலீஸ்துறை என அனைத்தும் மாறும் சமூகத்தில் ஜனநாயகம் அதன் இந்தியத்தன்மையை பெற்றுவிட்டதாக அறிஞர்கள் ஆய்வுத்தாள்களை தரலாம்.

விஸ்வ குரு என்ற பெயரில் இந்திய மாடல் மத சாதி மொழிவாரி ஜனநாயகம் உலக பல்கலை ஆய்வுகளில் , பெரும் கார்ப்பரேட் நிதி உதவிகளுடன் ஆய்வுக் கூடங்களை- chair களைப் பெறலாம். பன்முக இந்தியா என்பதற்கான விளக்கங்களும், வளர்ச்சிக்கு  ஒரே நாடு  முழக்கங்களும் தொடர்ந்து மோதல் காணும் ..

இந்தியா சந்திர சூரியனை ஆய்வும் செய்யும்- நவகிரக ஆராதனையும் செய்யும் என்கிற பெருமிதங்களும் கூடவே நகர்ந்து கொண்டிருக்கும்….

இந்திய ஜனநாயகத்தின் சுற்று வட்ட பாதை புதிராகவும் இருக்கவே செய்கிறது..

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...