https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, October 24, 2023

பாவாணர் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாறு

 

திரு தேவநேயப் பாவாணர் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாறு முற்றிலும் புதிய கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டு நமக்கு கிடைக்கும்  நூல். இதற்கான முன்னுரையை பாவாணர் தந்து 50 ஆண்டுகள் முடியப்போகிறது. (30-11-1973ல் எழுதியுள்ளார்) . நூலுக்கான உழைப்பை அவர் முன்னரே செய்திருக்கவேண்டும். அவரை நன்கு அறிந்தவர்கள் சரியாகச் சொல்லவியலும்.



பூம்புகார் பதிப்பகம் 2006 முதல் இதன் பதிப்புகளைக் கொண்டு வந்துள்ளனர்.  448 பக்கங்களைக்கொண்ட விரிவான , ஆழமான ஆய்வு உள்ளடக்கத்தைக்கொண்ட நூல். பாவாணர் வந்தடைந்த இடங்கள் பொதுபுத்திக்கு தமிழ் நாட்டில் அதிகம் எடுத்துச் செல்லப்படவில்லை என்ற எண்ணமே , அந்நூலை வாசிக்கும்போது ஏற்பட்டது. வாழ்நாட் செலவை தமிழ் வேர்ச்சொல் தேடலுக்காகவே செலவிட்ட பேரறிஞர் பாவாணர்.  அவர் கண்டடைந்த சில புள்ளிகளை இங்கு தருகிறேன்.

இலெமூரியாவினின்றும் அதன் மக்களின்றுமே மாந்தனின் இற்றை வகுப்பினங்கள் தோன்றியுள்ளன

தோராயமாக கிமு 50,000 தமிழன் பிறந்தகம் குமரிநாடே. திராவிட சொற்கட்கெல்லாம் பெரும்பாலும் மூலமும் முந்திய வடிவும் தமிழிலேயே உள்ளன

உணர்ச்சி ஒலிகள், விளியொலிகள், குறிப்பொலிகள், வாய்வினை ஒலிகள்,  குழவி வளர்ப்பொலிகள், சுட்டொலிகள் போன்றவையால் இயற்கைமொழியும்- முழைத்தல் மொழி ( inarticulate speech) வளர்ச்சியடைந்த பின்னர், பண்பட்ட மொழி ( cultivated language)- இழைத்தல் மொழி ( articulate language) தோன்றிற்று

குறிஞ்சி மக்கள் குறவர் வேட்டுவர், முல்லையில் ஆயர், இடையர், பொதுவர், தொழுவர், தொறுவர், கோவர், கோவலர்- மருதத்தில் உழவர், வெள்ளாளர், காராளர் இவர்களுக்கு துணையாக ஊரில், நெயவர், குயவர், தச்சர், வண்ணார், செக்கார் போன்ற 18 தொழிலாளரும் தோன்றினர். நெய்தலில் பரவர், முக்குவர் என்பாரும், பாலையில் கள்ளர், மறவர், எயினர், வேட்டுவர் என வகுப்பார்களும் தோன்றினர்.

நிலவாணிகர் சாத்துவர், நீர்வாணிகர் நாவிகர் ( நாய்கர்) எனப்பெயர் பெற்றனர்.

வேளாளரில் சிலர் ஓய்வு நேரங்களில் கல்வியை வளர்த்தனர். மதவியற் கல்வியும் உருவானது. இல்லற சார்ந்த கற்றோர் நூல்களைப் பார்ப்பார் என்பதால் அவர்கள் பார்ப்பனர் என்றும், துறவறம் பூண்ட கற்றோர் அருள் பூண்டமையால் அந்தணர் என்றும் இருதிறத்தாராயினர். ( வேளாளரில் கற்றோர் பார்ப்பனர், அந்தணர் என பாவாணர் சொல்வதைக் காண்கிறோம் ..இச்சிந்தனை பொதுபுத்தியில் இல்லை).

பார்ப்பனர் என்பது பிராமணன் என்னும் வடசொல்லின் திரிபு என்பது பிதற்றல். குமரிநாட்டுத் தமிழ்க்காலம் ஆரியர் இனக்கருவே தோன்றாக்காலம்.

செய்யும் தொழில் பற்றியே ஒருவன் குலம் அமைந்தது. பெரும்பாலும் பெற்றோர் தொழிலையே மக்கள் வழிவழி செய்து வருவாராயினர். பெரும்பாலும் உறவினர்க்குள்ளேயே கொள்வனையுங் கொடுப்பனையுஞ் செய்து வந்தனர். அரசர்க்கு விலக்கு தடை இருந்ததில்லை.

எக்குலத்தாராயினும், துப்புரவும் ஒழுக்கமும் உண்டாட்டுறவிற்குக் கவனிக்கப்பட்டன. கல்வி, தவம், அதிகாரம், செல்வம், ஈகை, மறம்,

ஆற்றல் என்பவற்றாலன்றிப் பிறப்பாற் சிறப்பில்லை.

ஏறத்தாழ எல்லாரும் தமிழில் எழுதப் படிக்கக் தெரிந்தவராயிருந்தனர். பாட்டாளியுட்படப் பல தொழிலாரும் பாவலராகவுமிருந்தனர்.

எல்லாத் திருக்கோவில்களிலும் தமிழ் ஒன்றே வழிபாட்டு மொழியாயிருந்தது.. உவச்சர்,குருக்கள், திருக்கள், புலவர், பண்டாரியர், நம்பிமார், போற்றிமார், சாத்துவார் முதலிய தமிழ்ப் பூசாரியரே- சிவன், திருமால், காளி முத்தெய்வக் கோவில்களிலும் வழிபாடு நடத்தி வந்தனர்.

இடுகாடு பொதுவாயிருந்தது. பிணத்தை சுடுவது தமிழர் வழக்கமன்று.

உலகில் முதன்முதல் உணவை நாகரிமாய்ச் சமைத்துண்டவன் தமிழனே. உண்ணல் தின்னல் நக்கல் பருகுதல் என்கிற நால்வகை ஊண் வினையும் ஒருங்கே சேர்ந்தது சாப்பிடுதல்.

உடலுழைப்பிற்கும் மனவுழைப்பிற்கும் உயர் பதவிக்கும் தாழ் பதவிக்கும் ஏற்றவாறு குணங்களும் திறமைகளும் பிறப்பிலேயே அமைந்துவிடுகின்றன. ஆதலால் பெரியோரை புகழ்தலும் சிறியோரை இகழ்தலும் தக்கதன்று

மந்திரம் என்பது தூய தென்சொல்லே.

தமிழ் வளர்ச்சியடைந்த பின் அவர் பரவிச் சென்றது வடக்கு நோக்கியே. வங்க காளிகோட்டம் தென்சொற் பெயரே.

கிரேக்கத்திற்கு இனமான மொழி பேசிய கூட்டத்தார் பாரசீக வழியாக இந்தியா புகுந்தனர். வட இந்திய பிராகிருத இனத்தோடு கலந்தனர். அப்படி கலந்து போனாலும், ஆரிய பூசாரியார் பிரிந்து நின்று வேதம் , வேள்விகள் வழியாக ஆரியப் பழக்கவழக்கங்களை அவியாது காத்து வருகின்றனர். சிலர் தென்னாடு வந்து தமிழர் தொடர்பில் இலக்கியம் கற்று, தமிழை வேதமொழியுடன் கலந்து சமற்கிருதம் தோற்றுவித்தனர். தமிழ் நூல்களை சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து பின்னர் மூலநூல்களை அழித்துவிட்டனர். மொழிபெயர்ப்பு நூல்களை முதனூல்களாக காட்டி ஆரியர் நாகரிகம் மேலானது என நம்பவைத்தனர்.

பாண்டவ கெளரவர் பிறந்த திங்கட்குலம் பாண்டியர் குடிக்கிளை- இரகுராமன் பிறந்த கதிரவக் குலம் சோழர் குடி.

வடநாட்டிற் சிவ, திருமாலைப் பரப்பியது அங்கு குடியேறிய தமிழரே..

அருணகிரிநாதர்- வில்லிபுத்தூரார் மோதல் கதை -தோற்றவர் காது அறுத்தல் என்கிற தண்டனையுடன் கூடிய புலமைப் போட்டி பற்றி பாவாணர் சொல்லிவிட்டு , அப்போட்டியில் வில்லிபுத்தூராரை அதிர வைத்த அருணகிரிநாதரின் பாட்டைத் தந்துள்ளார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்த தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீதொத்ததே

மேற்கண்ட பாடலை டி எம் எஸ் செளந்தரராஜன் சினிமாவில் பாடியுள்ளார்.

 

2

பாவாணர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு குறித்து முன்பு ஒரு இடுகை செய்திருந்தேன். 450 அளவிலான இந்நூலின் இறுதிப்பகுதிஎதிர்காலம்என்கிற தலைப்பில் அவர் முன்வைத்துள்ள கருத்து தொகுப்புப் பகுதியாக இருக்கும். அவரின் ஆய்வுக் கண்ணோட்டத்தில் வந்தடைந்த புள்ளிகள் எனலாம். அதில் சில இங்கு வரிசையாக்கப்பட்டுள்ளன. ஒருவர் ஏற்கலாம். மறுக்கவும் செய்யலாம். இனி பாவாணரின் பார்வையில்..

தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. ஆங்கில ஆட்சி நீக்கம் நடந்தாலும், தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை

சி , திரு வி முதலிய தமிழறிஞரும், தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமைகளை அறிந்தவர் அல்லர்.

ஆங்கிலேயர் இல்லாமல், இந்தியர் இருப்புப்பாதை அமைத்திருப்பின், தொடர்வண்டி வகுப்புக்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என ஐவகுப்பாக இருந்திருக்கும். 1வது, 2வது, 3வது என இருந்திருக்காது.

ஆங்கிலம் தமிழனுக்கு மீட்பனாய் வந்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. அவனாட்சியால் பிராமணியம் ஓரளவே நீங்கிற்று. அவன் நீங்கின பின்னும் பிராமணியம் பேரளாவியிருப்பதுடன், இந்தி மணியம் என்னும் புத்தடிமைத்தனத்திற்கு இடந்தந்துள்ளது.

வரலாற்றையும் தமிழ நாகரிகப் பண்பாட்டையும் நோக்கின், பிராமணியத்தையும், இந்தி மணியத்தையும் எதிர்ப்பாரே உண்மையான நாட்டுப்பற்றாளர். நயன்மைக் கட்சியாரே ( நீதிக்கட்சி) நாட்டுப்பற்றாளரும் உரிமையுணர்ச்சியரும் விடுதலை மறவருமாவர்.

தமிழ் நாட்டுப் பிராமணர் இன்று தமிழ் நாட்டாரும் தமிழ் பேசுவோருமாயிருக்கின்றனரேயன்றித் தமிழராயில்லை.  பிராமணர்க்குந் தமிழர்க்கும் ஊமைப்போர் வரவர வலுத்து வருகிறது. பிராமணர் பழைய செருக்கை விட்டுவிட்டுத் தமிழரோடு உடன்பிறந்தார் போல் ஒன்றி வாழ்வதே தக்கது.

தமிழர் வழிகாட்டியருள் திருவள்ளுவர்க்கு அடுத்தவர் மறைமலையடிகளே- சுப்பிரமணியபாரதியாரல்லர்.

இந்து மதம் என்பது தனி மதமன்று. சிவனியம், மாலியம் இரண்டும் தூய தமிழ் மதங்கள். தமிழர் மதம் இரண்டும் ஆரியர் படைத்துக்கொண்ட பிரம வணக்கமுங் கலந்த கலவையே இந்து மதம்.

இருமொழி திட்டத்தையே கடைப்பிடிக்க வேண்டும். நேரு உறுதிமொழி, இந்தி திணிப்புப் பிந்தி நிகழும் என்பதேயன்றி நீக்கப்படும் என்பதன்று. இருமொழி திட்டம் எதிர்ப்பவரைத் தமிழ்ப் பகைவராகக் கொண்டு, நாட்டிரண்டகக் குற்றத்திற்குரிய தண்டனையிடல் வேண்டும்.

தமிழும் தமிழரும் முன்னேற தமிழர் ஒற்றுமை இன்றியமையாதலால், தி   திமுக  அதிமுக ஆகிய முக்கட்சியும் ஒன்றாதல் வேண்டும்.

கடவுள் இல்லையென்பதற்குப் போன்றே, உண்டு என்பதற்கும் பகுத்தறிவே துணை செய்கின்றது. நடுநிலையாக நோக்கி, இருசாராரும் ஒருவரையொருவர் இகழாதுங் குறைகூறாதும் இருப்பதே பகுத்தறிவிற்கழகாம்.

பகுத்தறிவியக்கம் தமிழரெல்லாருக்கும் பொதுவாயினும், பெரியாரைப் பின்பற்றியவர் அல்லது பகுத்தறிவாளர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர், தாமே முன்பு பகுத்தறிவொழுக்கம் பூண்டு பிறர்க்கு வழிகாட்டல் வேண்டும்..

No comments:

Post a Comment