sep 17, 2023
சஞ்சீவ்
சன்யால் ஏழு நதிகளின் நாடு
சஞ்சீவ் சன்யால் புரட்சிகர குடும்ப
பின்னணி கொண்டவர். இந்திய பொருளாதார அறிஞர். இந்திய வலதுசாரி சிந்தனையை முன்னெடுப்பவர்.
இந்திய புவி இயல் குறித்தும் , அதன் வரலாற்றில் ஓர் ஒருமையை - கலாச்சாரத்தை காட்ட முடியுமா
என ஆய்வு செய்து வருபவர். பிரதமர் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றவர்.
எஸ் என் சன்யால் என்கிற பழம் பெரும்
விடுதலை போராளி அந்தமான் சிறையில் அவதிப்பட்டவர், அனுசீலன் சமிதி சார்ந்தவர், ஹிந்துஸ்தான்
புரட்சிகர அமைப்பிற்கு மானிபெஸ்டோ எழுதி ஆசாத், பகத்சிங் போன்றவர்களுக்கு முன்னோடியாக
இருந்தவர். அந்த குடும்பம் சேர்ந்தவர்தான் இன்றைய இளம் சஞ்சீவ் சன்யால்.
சஞ்சீவ் சன்யால் எழுதிய Land
of Seven Rivers என்கிற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை சந்தியா பதிப்பகம்
2016 ல் கொணர்ந்தனர். இதை தமிழகம் அறிந்த மொழிபெயர்ப்பாளர் தோழர் அக்களூர்
இரவி எனக்கு 2016 மே மாதமே வாங்கி, அன்புடன் தந்திருந்தார். சன்யாலின் பேட்டி, உரைகளை
கேட்டுவந்த எனக்கு சஞ்சீவின் வலது சாயலை புரிந்துகொள்ள முடிந்ததால் அவரின் indian
Renaissance , Land of seven Rivers படிப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன்.
வலதில் சில இளம் எழுத்தாளர்கள்
இன்று பரவலாக போய்க்கொண்டிருக்கின்றனர். அவர்கள் விரிவான வாசிப்பை கொண்டவர்களாகவும்
இருக்கின்றனர். விக்ரம் சம்பத், சாய் தீபக்,
அரவிந்தன் நீலகண்டன், மீனாட்சி ஜெயின், சஞ்சீவ் சன்யால் , ராகேஷ் சின்ஹா, ஹர்ஷ் மதுசூதன்
போன்றவர்களை படித்து அவர்களின் ஆக்ரோஷத்தை
இன்றைய அரசியலின் போக்குடன் புரிந்துகொள்ளவேண்டியிருந்தது. இந்த முயற்சி தோழர் இரவி கொடுத்த ‘ஏழு நதிகளின் நாடு’ எடுத்து படிக்க வைத்தது.
இந்த புத்தகம் தெற்கு பகுதியையும்
குறிப்பாக தமிழகத்தையும் தொடாமல், இந்திய வரலாற்றை புவியியலை வடக்கின் ஒன்றாக சுருக்கக்கூடாது
என்கிற புரிதலை கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.
சோழர்களின் பராக்கிரமம் பேசப்படுகிறது. இந்த புத்தகம் இந்தியர்களுக்கு பண்டைய
காலத்திலேயே வரலாற்றுணர்வு இருந்துள்ளது என்பதைச் சொல்ல விழைகிறது. அவர்கள் கொண்டாடும்
தொடர்ச்சியை காட்ட விழைகிறது.
வால்மீகி இராமயண ஸர்கம் ஒன்றை
பாலகாண்டத்தில் வாசித்தபோது ஒரு செய்தியை அது தந்தது. வருண பிரிவினைகள் நிலவியதை அது
உறுதிபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் , தசரதன் குழந்தைகள் வேண்டி வசிஸ்ட்டர் மேற்பார்வையில்
அஸ்வமேத யாகம் நடத்தியபோது இரு செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. அனைத்து வர்ணங்களை சார்ந்தவர்களையும்
எவருக்கும் மரியாதை குறையாமல், வசதிகள் செய்துகொடுத்து யாகத்திற்கு அழைத்து உபசரிக்கவேண்டும்.
மற்றொரு செய்தி, யாகத்திற்கு சரயு நதிக்கரைக்கு தென்னாட்டு அரசர்களையும் அழைக்கவேண்டும்.
வர்ண எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் குறித்த செய்தியில்லை.
சஞ்சீவின் இந்த புத்தகம் இந்திய
புவியல் இயற்கையால் எவ்வித கட்டுமானங்களை பல்வேறு சீற்றங்களை எதிர்கொண்டு பெற்றது என்கிற
வரலாற்றை தொட்டுக்காட்டுகிறது. இயற்கையின் இழுப்பில், மக்கள் எவ்வித வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள்
என சில ஊகிப்புகளுடன் தன்னை இந்த புத்தகம் நகர்த்திக்கொள்கிறது.
ஏன் பாரதமானது- புத்தர் சாரநாத்தின்
முக்கியத்துவம் - அசோகர், முகலாயர் காலம் என
நகர்ந்து பிரிட்டிஷ் காலம் வரை செல்கிறது. சரஸ்வதி நதி, வணிக கப்பல்களின் பெருமிதம்,
ஹரப்பாவின் எச்சமான இன்றும் உள்ள சாயல் என
இப்புத்தகம் சொல்ல முன்வருகிறது.
இந்திய வரலாறு வெறும் லீனியர்
தன்மைகொண்டதல்ல - பல திருகல்கள் கொண்டது என்ற எண்ணத்தை உருவாக்க விழைகிறார் சஞ்சீவ்.
ரிக் வேத காயத்ரி பல காலம் கடந்தும் இன்றும் பிராமண குடும்பங்களில் சொல்லப்படுகிறது. ஓ ஒளிமிக்க சூரியனே சுவர்க்கத்தையும், பூமியையும்
ஒளிமயமாக்கும் நீ எனது மனதுக்கு ஆன்மாவுக்கும் ஒளியைக்கொடு என்று தானே அது இறைஞ்சுகிறது
என தன் பார்வையைக் கொடுக்கிறார் சஞ்சீவ்.
158 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
இந்தியா ஆப்ரிக்காவிலிருந்து பிரிந்திருக்கலாம் என்பதை சஞ்சீவ் ஏற்கிறார். குஜராத்
பகுதியில் டைனோசர் எச்சங்கள் காணப்பட்டதை சொல்கிறார். இந்திய நிலப்பரப்பு ஆசியா நோக்கிய
நகர்வில் - எரிமலை குமுறல்களால்தான் தக்காண பீடபூமி உருவானதை சொல்கிறார்.
50 மில்லியன் ஆண்டுக்கு முன்னர்தான்
இமயமலை திபேத் பீடபூமிகள் உருவாகியிருக்கலாம் என்பதும் சொல்லப்படுகிறது. இதனால்தான்
வடக்கின் பெருமையாக, இந்தியாவின் பெருமையாக காட்டப்படும் கங்கை சமவெளி உருவாக்கமும்
நிகழ்ந்தது. ஆசிய யானைகள் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம். புலி மூதாதையர்
20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாவில் இருந்திருக்கலாம். வங்காள புலி அறியப்பட்டு
12 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம்.
ஆப்ரிக்க மனிதன் இரண்டு லட்சம்
ஆண்டிற்கு முன் தோன்றினானாம். தென்மேற்கு ஆசியாவில் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித
நடமாட்டம் இருந்திருக்கவேண்டும். ஆப்ரிக்காவிலிருந்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
மனித கூட்டம் அரபிய பகுதிகளுக்கு வந்திருக்கலாம். சுமத்ரா பகுதியில் எரிமலையால் 70
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஹோமோனிட் அழிந்து போயிருக்கக்கூடும்.
ஆஸ்திரேலியாவிற்கு மனிதர்கள் நுழைந்து
40 ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம். இந்திய பழங்குடியினருக்கும் இவர்களுக்கும் மரபுவழித்தொடர்புகள்
இருக்கிறதாம். மத்திய இந்தியாவில் பீம்பேத்கா எனும் இடத்தில் ஆதிகால மனித எச்சங்கள்
கிடைத்துள்ளதாம்.
இந்தியாவில் ஆரியர் கிமு 1500
ல் வந்து , சிந்துவெளி திராவிட நாகரீகத்தை அழித்ததாக சொல்லப்பட்டுவருகிறது. மிகப்பெரிய
ஆக்ரமிப்பு படையெடுப்பு என்பதை அகழ்வாராய்ச்சி உறுதி செய்யவில்லை என சன்யால் கருதுகிறார்.
ஹரப்பா திடிரென உருவாகவும் இல்லை - திடிரென அழியவும் இல்லை. முக்கிய நதியின் வறட்சிதான்
மெதுவாக ஹரப்பா அழிய , மக்கள் வெளியேற காரணம் என சன்யால் ஊகிக்கிறார்.
இந்தியாவில் தூய இனங்கள் என்று
எதுவும் இல்லை. இன்று இந்தியாவில் காணப்படும் இனமரபுகளும் சாதிகளும் பலவித ஜீன்களின் கலப்பே என்கிற முடிவிற்கு சஞ்சிவ் வருகிறார்.
genetic distribution pattern பரந்து இருக்கிறதாம். வட இந்திய ஜீன்களில் 70 சதம் காஷ்மீர்பண்டிட்,
சிந்தி மக்களிடம் என்றால் 40 சதம் தென்னிந்திய
மக்களிடம் காணப்படுகிறதாம். எனவேதான் தூய வட இந்திய அல்லது தென் இந்திய இன மக்கள் என்பதில்லை
என சொல்லவேண்டியுள்ளது என்கிறார் சன்யால்.
திராவிடர்களின் அரசன் தான் மனு என்பதை சன்யால் ஏற்கிறார். இந்தியர் கலப்பினம் கூட்டம்.
அனைத்துவித வடிவ அளவு வேறுபாடுகள் கொண்டவர்கள் என்பதை மரபியல் நிருபித்து வருகிறதாம்..
R1 a 1, R 1 b என்கிற ஜீன் வகையில் முன் சொல்லப்பட்டது தான் பெரும்பான்மை இந்தியர்களுக்கானதாம்..பின்
சொல்லப்பட்ட ஜீன் மரபு மிகக் குறைவாம்.
மொழியை அடிப்படையாகக் கொண்டு சரித்திரச்
சிக்கல்களுக்கு தீர்வு காண்பதை சன்யால் ஏற்கவில்லை. அகழ்வாய்வு, மரபியல் வழி புரிதல்
வேண்டும் என்கிறார்.
வாய்ப்புள்ளவர் படித்துப்பார்க்கலாம்.
தமிழில் தர சிவ முருகேசன் உழைத்துள்ளார். ஆங்கில
நூலை நான் படிக்காததால் மொழி பெயர்ப்பின் சிறப்பை சொல்லமுடியவில்லை. தமிழில் வேகமாக
போகக்கூடிய மொழி இருக்கிறது..
Comments
Post a Comment