Skip to main content

ஹெகல் வாழ்வும் சிந்தனையும் 4

IV

எதார்த்தமானது அனைத்தும் பகுத்தறிவிற்கு உகந்தது. பகுத்தறிவிற்கு உகந்தது எதார்த்தமானது - தனது வளர்ச்சி போக்கில் யதார்த்தமானது அவசியமானதென்று நிரூபித்துக்கொள்கிறது. என்கிற புகழ்வாய்ந்த கருத்தை முன்வைத்தார் ஹெகல்.
ஹெகல் படைப்பாற்றல்மிக்க மேதை மட்டுமல்ல, பல்துறைகளின் அறிவுகளஞ்சியம் அவர் என எங்கெல்ஸ் அவரை புகழ்ந்து எழுதினார். ஒவ்வொரு துறையிலும் புதிய சகாப்தத்தை திறந்துவிடும் பாத்திரம் வகித்தவர் அவர். தர்க்கவியல், இயற்கை, மனம், வரலாறு, உரிமை, சமயம் பற்றிய தத்துவஞானங்களை அவர் தந்தவர். வெவ்வேறு துறைகளின் வளர்ச்சிக்குரிய வழிகளை கண்டுபிடித்து நிரூபிக்க பாடுபட்டவர் ஹெகல்.
ஹெகல் அமைப்புமுறை ஒன்றை உருவாக்கும் கட்டாயத்தில் இருந்தார். அதை ஏதோவொரு முனைக்கு கொண்டுவந்து முடிக்க வேண்டியதாயிற்று. அவரின் அந்த பரமநிலக் கருத்தானது (absolute Idea)- எந்த அளவிற்கு அதைப்பற்றி அவரால் ஒன்றும் சொல்வதற்கு இல்லையோ அந்த அளவிற்குத்தான் பரமநிலையில் இருந்தது என எங்கெல்ஸ் கூறினார்.
தத்துவஞானத்திற்கு வகுத்தளிக்கப்படும் பணிக்கு அர்த்தம், மனிதகுலம் முழுவதும் தனது முற்போக்கு வளர்ச்சியில் சாதிக்க முடிவதை ஒரு தனி தத்துவ ஞானி சாதித்து தீரவேண்டும் என்பதுதான் என்றால் இதற்காக நாம் ஹெகலுக்குதான் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்றார் எங்கெல்ஸ்.  றியாமலேயே ஹெகல் அமைப்புமுறைகளின் குகைப்பாதைகளிலிருந்து வெளிவந்து உலகத்தைப்பற்றிய உண்மையான நேர் உறுதியான அறிவுகாணும் பாதையை நமக்கு காட்டினார் என்றார் எங்கெல்ஸ்.
ஹெகலுக்கு வளர்ச்சியின் போக்கில் முன்பு யதார்த்தமாக இருந்தது அனைத்தும் எதார்த்தமற்றதாகிவிடுகிறது. எதார்த்தமானது அனைத்தும் பகுத்தறிவிற்குரியது எனும் கூற்று நடப்பில் இருந்து வருவதனைத்தும் சாகத்தக்கதே என்கிற கூற்றாக மாறிவிடுகிறது என்றார் எங்கெல்ஸ். எந்த தத்துவ ஞானத்தையும் பொய் என அடித்து பேசுவதால் மட்டுமே அதை ஒழித்துவிடமுடியாது, ஹெகலின் வலுமிக்க, நாட்டின் அறிவுவளர்ச்சியின்மீது செல்வாக்கு செலுத்திய நூல்களை புறக்கணிப்பதன்மூலம் அவரை ஒதுக்கிவிடமுடியாது. அதன் சொந்த அர்த்தத்தில் தான் அவற்றை அகற்ற வேண்டியிருந்தது என்பார் எங்கெல்ஸ்.
ஹெகல் கருத்துப்படி தீமை என்பது வரலாற்று வளர்ச்சியின் உந்துசக்தி- தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வடிவம். மனிதன் இயற்கையாக நல்லவன் என்பதைவிட மனிதன் இயற்கையாக கெட்டவன் என்பதுதான் ஆழமானதாக இருக்கிறது என்றவர் ஹெகல். பேராசை, அதிகார வேட்டை வர்க்கப் பகைமைகள் தோன்றிய காலத்திலிருந்து, வரலாற்று வளர்ச்சிக்கு நெம்புகோல்களாக பயன்பட்டுவருகின்றன என எங்கெல்ஸ் இதை விளக்கி சொல்கிறார்.
சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு பேராசிரியர்கள் இணைந்து மேற்கு- கீழை தத்துவங்கள் குறித்த வரலாற்று நூல் ஒன்றை கொணர்ந்தனர்.. அபுல்கலாம் ஆசாத் எடுத்த முயற்சியால் இந்திய வாசகர்களுக்கு புரியவைக்கவேண்டும் என்கிற பொறுப்பில் பல்வேறு மாநில மொழிகளிலும் இப்பெரும் நூல் மொழிபெயர்க்கப்பட்டு தத்துவத்துறைக்கு மகத்தான பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரடெரிக் ஹெகல் குறித்த பகுதியை பேராசிரியர் ராஷ்பிகாரிதாஸ் என்பார் எழுதியிருக்கிறார். பேராசிரியர் ராஷ்பிகாரி தரும் ஹெகல் குறித்த விளக்கத்தை சுருக்கமாக பார்க்கலாம்.
ஹெகலைப் பொறுத்தவரை தத்துவம் விஞ்ஞானமே. டயலக்டிக்ஸ் என்கிற முரண்தர்க்கமுறை- ’இயக்கவியல்தான்’ ஆய்வுமுறையாகும். உடன்பாடான ஒன்று மறுப்பினை காணும்போது முரண்நிலை தோன்றும். மறுப்பை மறுத்தல் நடக்கும். இதனால் முதலில் இருந்த நிலை வருவதில்லை. மூன்றாவது நிலை உருவாகலாம். தனித்த நிலையில் புலப்படும் ஒன்று உள்ளார்ந்த நிலையில் முரண்பாடுகளை புலப்படுத்துகிறது. இங்கு நாம்பேசும் தொகுத்துக்காண்பது என்பது வேறுபடும் நிலையை காணாதது அன்று. ஹெகல்  Science of Logic, Philosophy of Nature, Philosophy of Spirit என தர்க்கவியல், இயற்கையின் மெய்ப்பொருளியல்,ஆன்மாவின் மெய்ப்பொருளியல் என பல நூட்கள் வழியாக பேசுகிறார்.
முதலில் உள்ளது என்கிற உடன்பாட்டு நிலையிலும், வரையறை பண்பிலாததால் இன்மையாகவும் Being- nothing என்கிற ’உளது—இன்மை’ என எதிர்மறை இணைவுகளில் ஹெகலின் அளவையியல் செல்கிறது. ஆகும்போது உள்ளநிலையிலிருந்து இன்மை நிலைக்கு செல்கிறது. Becoming என்கிற ஆகுதல் இடையறாது தோன்றும் மாறுதல் ஆகும். உளவாவது ஆகுதல், இல்லாது நீங்குதல் ஆகிய நிலைகளை இடையறாது கொள்வதே ஆதல் என்கிற விளக்கம் ஹெகலிடம் கிடைக்கிறது. உள்ளது என்கிற நிலையை அறிகிறோம். மற்றவற்றிலிருந்து ’அது’ வேறுபடுகிறது. இக்குணம் பொருளை எல்லைகுட்படுத்துகிறது. எல்லைக்கு உட்பட்ட ஒன்று மற்ற ஒன்றால் வரையறைக்கு உட்படுகிறது. இது முடிவின்றி தொடர்ந்து நடைபெறுகிறது.
ஹெகல் theory of being, theory of essence, theory of concept என்கிற இருப்பு பற்றி, சாரம் எனும் முக்கியநிலைபற்றி, கருத்தாக்க கொள்கைப்பற்றி  விளக்குகிறார். கருத்தமைவு எனும் பொதுமைக்கு ’மாறு’ தனிநிலை. பொதுப்பண்பு தனிநிலையில் விளங்குபவனற்றால் உணர்த்தல் பெறுகிறது. அறிவானும் அறிபொருளும் ஒன்றை ஒன்று எதிர்த்து என்பதுடன் இயைந்து ஒருமைப்பட்டும் விளங்குகின்றன. ஹெகல் கருத்தில் எண்ணமானது முற்றிலும் உண்மையுடையதே. முழுமையான எண்ணம் வரம்பிலாதது. முற்றிலும் தன்னையே தான் வரையறை செய்து கொள்வது. எண்ணமானது செயலுரிமை பெறுகிறபோது தன்னைத்தானே பகைத்துக்கொள்கிறது. அயலானதாக ஆகிறது. இயற்கையானது இயற்கையல்லாத ஆன்ம வடிவத்தில் மீள்கிறது என ஹெகல் விளக்கி செல்கிறார்.
ஹெகல் தூய அறிவிற்கு இயற்கையை எதிர்நிலையாக கொள்கிறார். எண்ணமானது எதிர்நிலையில் விளங்குகிறபோது இயற்கையாகும். பண்புகளும் எதிர்மறை நிலையிலேயே விளங்குகின்றன. அறிவுலகில் தூயப் பொதுப்பண்புகள் இயற்கையில் தனிநிலைப்பண்புகளாக விளங்குகின்றன. எண்ணம் புறவடிவத்தை ஏற்கிறபோது தன் இயல்போடு முரணுறுகிறது. இயற்கையில் அறிவானது உறங்கிக்கிடக்கிறது என்கிறார் ஹெகல். அறிவாற்றல், இயற்கையினுள் செயலற்று விளங்கி, பின்னர் உயிராக அல்லது ஆன்மாவாக விழித்தெழுகின்றது. இயற்கை அவருக்கு அறிவு பிறழ்ந்தநிலை போன்றது. அறிவுநிலை பிறழ்ந்து விளங்கினும் அல்லது உறங்கினும் இயற்கையினுள் அறிவாற்றல் விளங்காமல் இல்லை எனவும் அவர் விளக்குகிறார். இயற்கையானது எவ்வாறு பல்வகை நிலைகளைக்கடந்து தன்னிலை உணர்வை ஆன்மீகத்தன்மையை அடைகிறது என்பதையும் அவர் பேசுகிறார்.

ஹெகலின் கருத்துமுறைக்கு அளவையியல் அடித்தளம் எனில் அவரது ஆன்மாவின் மெய்ப்பொருளியில் philosophy of spirit முடிநிலை என்கிறார் ராஷ்பிகாரி. ஆன்மாவின் வாழ்விலே கருத்தானது நிறைவுறுவதுடன் இயற்கையும் தன் உண்மையைக் காண்கிறது. அவர் அகநிலை ஆன்மா என்பதை மானிடவியல், உளவியலில் விளக்குகிறார். ஆன்மா உணர்வு பெறுவதை phenomenology தோற்றநிகழ்வுகொள்கைத்துறை என்கிறார். செயலுரிமை அல்லது கட்டற்ற நிலையை உணர்வது என்பது செயலுரிமையை புறநிலையில் உள்ளதாக அமைத்து அறிதலேயாகும். உலகாக ஆன்மா தன்னையே அமைத்துக் கொள்கிறது. செயலுரிமை அல்லது கட்டற்றநிலை எண்ணமே இவ்வுலகாகும். இதுதான் புறநிலை ஆன்மா என்கிற விளக்கம் நமக்கு கிடைக்கிறது. இதில் உரிமை மெய்யியல், அரசியல் தத்துவம், வரலாறு மெய்ப்பொருளியல் வருவதாக ராஷ்பிகாரி சொல்கிறார். The Mind of God becomes actual only with the minds of his creatures, who serve as its vehicle. Humans’ finite infinites என எழுதினார் ஹெகல். அதாவது கடவுளின் மனம் அவர் படைப்பு மனங்களில்தான் உண்மையாகிறது என்றார்.

வரலாறு பற்றிய ஒருமைவாதத்தின் வளர்ச்சி என்கிற நூலை தோழர் பிளக்கானோவ் எழுதினார். அதில் ஜெர்மன் தத்துவம் குறித்து விவாதிக்கிறார். முரண்தர்க்கமே வாழ்க்கை அனைத்தின் தத்துவமாக இருக்கிறது. வாழ்வு மரணத்தின் விதைகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது. எந்த ஒரு நிகழ்வும் அண்மையிலோ சேய்மையிலோ தனது இருப்பிற்கு முடிவு கண்டு அதன் எதிராகவே அதை மாற்றும் அம்சங்களை தன்னிடமிருந்தே உருவாக்கிக்கொள்கிறது என ஹெகல் விளக்கியதாக தெரிவிக்கிறார். இதை மேலும் விரிவாக்கி பிளக்கானோவ் எழுதுகிறார்.

ஒவ்வொருநிகழ்வும் அதன் இருப்பை நிர்ணயிக்கும் அதே சக்திகளின் செயலினால் தவிர்க்கமுடியாதபடி அதன் சொந்த எதிர்மறையாக மாற்றப்படுகிறது. இருப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஓர் அளவை மற்றொரு அளவாக மாற்றுகிறது. அதுமட்டுமில்லாமல் பண்பு அளவாகவும், அளவு பண்பாகவும் மாறுவதையும் அது உள்ளடக்கியது- சாத்தியமான எதிர்மறை கருத்துக்கள் அனைத்தின் போராட்டத்தின் விளைவாகவே உண்மை தோன்றவும் செய்கிறது  என ஹெகலின் தர்க்கவியலை பிளக்கானோவ் எடுத்துரைக்கிறார்.

எதுவும் உலகில் நிரந்தரமாக இருப்பதில்லை. அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. உலகம் முழுமையான ஒன்று. ஒவ்வொரு துகளும் முடிவில்லாத எண்ணற்ற தொடர்புகள் உடையது- அனைத்து இயக்கங்களும், ஒவ்வொன்றும் தமக்குள்ளே முரண்பாடுகளைக் கொண்டுள்ளன  என்பதை ஹெகலிடம் மார்க்ஸ்- எங்கெல்ஸ் கண்டனர். ஆனால் ஹெகலின் இயக்கவியல் உணர்வில் துவங்குகிறது. நடப்பவை சிந்தனையின் முழுமுதல் கருத்தின் பிரதிபலிப்பு எனக் கருதினார் ஹெகல். இயற்கை, மனிதவரலாற்றை அதற்கு உட்படுத்தினார். இப்போதுள்ள அறிவு, போதனை அச்சமூகத்தின் உச்சகட்டம் என்றார். பரம்பொருள் என சொல்லி கருத்துமுதல்வாதமாக சுருங்கிவிட்டார் ஹெகல் என மார்க்ஸ் அவரை விமர்சித்தார். ஹெகலின் இயக்கவியலை தலைமேல் எழும்படி கால்களில் நிறுத்தவேண்டியுள்ளது என்றார் மார்க்ஸ்.

மார்க்ஸ் ஹெகலை கருத்தூன்றி கற்றார். ஆனால் அவரை தெய்வமாக்கவில்லை என ஹென்றி வோல்காவ் குறிப்பிட்டார். தத்துவ ஞானம் தனது பொருளாயத ஆயுதங்களை பாட்டாளி வர்க்கத்தில் காண்பதுபோல், பாட்டாளிவர்க்கம் தனது ஆன்மீக ஆயுதங்களை தத்துவ ஞானத்தில் காண்கிறது என்றார் மார்க்ஸ். மார்க்ஸ் எழுதிய ஹெகல் விமர்சன நூல் சற்று கடினமானது. அதற்கு ஹெகலிய மொழி தெரிந்திருக்கவேண்டும் என்றார் வோல்காவ்.  மார்க்சின் காபிடலை ஹெகலை விளங்கிக் கொள்ளாமல் சரியாக புரிந்துகொள்ளமுடியாது என்றார் லெனின்..
அரசர் சர்வவல்லமை படைத்தவரா- மக்களா என்கிற கேள்வியை ஹெகல் குறித்த விமர்சனத்தில் மார்க்ஸ் எழுப்பினார். பொதுநன்மை என்பதன் பின்னால் தனிகோஷ்டியின் நலன் இருக்கிறது- அது கார்ப்பரேஷன் உணர்ச்சி என்றார். இரகசிய அர்த்தம் அங்கு மறைத்துவைக்கப்படுவதாக மார்க்ஸ் விளக்கினார். பாயர்பாக் செல்வாக்கு மார்க்சிடம் ஏற்பட்டாலும் ஹெகலைவிட பாயர்பாக் தாழ்ந்தே இருக்கிறார் என்றார்.. ஹெகலிடம் எல்லா அந்நியமாதலும் கருத்தின் அந்நியமாதலாக இருந்தது. அந்நியமாதலை ஒழிப்பது, தனிசொத்துடைமையை ஒழிப்பதை பொறுத்தது என மார்க்ஸ் முன்னேறவேண்டியிருந்தது என்று சொல்கிறார் வோல்காவ்.
பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் தனது மனித சமுக சாரம் எனும் புத்தகத்தில் ஹெகல்- மார்க்ஸ் பற்றி விளக்குகிறார். மூலதனத்தில் தனது இயக்கவியல் ஹெகலிடமிருந்து எப்படி மாறுபடுகிறது என்பதை மார்க்ஸ் சொல்கிறார். ஹெகல் சிந்தனையின் இயக்கப்போக்கை கருத்து என்ற பெயரில் தனியான பிரிவாக மாற்றிவிடுகிறார். யதார்த்த உலகை கருத்திலிருந்து தோன்றும் வெளிப்புற நிகழ்வுபோக்கின் வடிவமாக காண்கிறார். மாறாக பொருளியல் உலகின் நிகழ்ச்சி போக்குகளை  மனிதமூளை பிரதிபலிப்பதே கருத்தியல் என்பதாகும். இதுதான் தனது இயக்கவியல் என மார்க்ஸ் குறிப்பிடுவதாக தாம்சன் எழுதுகிறார்.


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா