ஆச்சார்யா கிருபளானி (1888 - மார்ச் 19, 1982)
-ஆர். பட்டாபிராமன்
நவீன இந்தியாவின் அரசியல் விவாத களத்தில் குறிப்பிடத்தகுந்த
பங்காற்றியவர் கிருபளானி அவர்கள். ஆழமான அறிவு மற்றும் அனுபவங்களின்பாற்பட்டு கருத்துக்களை
ஒளிவு மறைவின்றி எடுத்துவைத்தவர். பல சோசலிஸ்ட் தலைவர்கள் போலவே மார்க்சியம்- காந்தியம்
குறித்த உரையாடல்களில் ஆழத்தோய்ந்தவர்.
விடுதலை இந்தியாவில் எதிர்கட்சி தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் ஆச்சார்யா கிருபளானி . காங்கிரசில் இருந்தபோதும், பிரஜா சோசலிஸ்ட் தலைமையில் ஆனாலும் கட்சியின் கொள்கைகளை அப்படியே பிசகின்றி பின்பற்றும் மனோபாவம் கொண்டவராக கிருபளானி தன் அரசியலை அமைத்துக்கொள்ளவில்லை. தவறு என்று தான் உணரும் ஒன்றுடன் சேர்ந்து உழைப்பதில்லை என்கிற காந்திய மனோபாவம் அவரிடம் இருந்தது.
ஜீவத்ராம் பகத்ராம் கிருபளானி இன்றுள்ள பாகிஸ்தானின் அய்தராபாத்தில் 1888ல் பிறந்தார். அவரது ஜாதகம் தொலைந்துபோனதால் அவரால் தனது பிறந்த மாதம் தேதியை சரியாக சொல்லமுடியவில்லை என தனது பிறந்தநாள் குறித்த கேள்விக்கு பதிலாக அவர் தந்தார். அவரைப்பற்றி எழுதக்கூடியவர்கள் அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளில்
அவர் பிறந்ததாக அறிந்து நவம்பர் 11, 1888யை குறிப்பிட்டு வருகின்றனர்.
கிருபளானி தந்தையார் தாசில்தாராக இருந்தவர். எட்டு குழந்தைகளில் ஆறாவதாக பிறந்தவர் கிருபளானி.. தந்தை வைஷ்ணவ பற்றாளர். குடும்பத்தில் இரு மகன்கள் இஸ்லாமிற்கு மாறினர். கிலாபத் இயக்கம், துருக்கியை காப்பாற்றுதல் என சென்று மறைந்தனர். பம்பாயில் மாணவர் பருவம் கடந்தது. அவரது அறை முழுவதும் ஆங்கில கவிதை நூல்களாக இருந்தது என அவரைப்பற்றி
எழுதிய பிரைட் குறிப்பிடுகிறார். வங்கப்பிரிவினையின்போது மாணவர்கள் கிளர்ச்சியில் கிருபளானி ஈடுபட்டதால் கல்லூரிகள் அவரை சேர்க்க மறுத்தன. பின்னர் புனே பெர்குசான் கல்லூரியில் 1907ல் சேர வாய்ப்பு கிடைத்தது.
சிந்து மாகாணத்தில் தனது வரலாறு, பொருளாதார முதுகலைப்படிப்பை அவர் முடித்தார். முசபர்பூர் கல்லூரியில் 1912ல் வரலாற்று பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் காந்தியுடன் நேரடி தொடர்புகொண்டவராக கிருபளானி மாறினார். பெரோஷ்மேத்தா, கோகலே, பானர்ஜி என மிதவாதிகளுக்கும் திலகர், பிபன் சந்திரபால், அரவிந்தர் போன்ற தீவிரவாதிகள் என அறியப்பட்டவர்களுக்கும் இடையேயான மோதல் களமாக காங்கிரஸ் இருந்தது. கிருபளானி இளைஞர்கள் பலரைப்போல தீவிரவாதிகள் பக்கம் ஈர்க்கப்பட்டார். காந்தி தன்னை கோகலேவின் சீடர் என அறிவித்திருந்தாலும் அவரின் மனோதைரியம் கிருபளானியை கவர்ந்தது. பேச்சில் தீவிரவாதமும் நடைமுறையில் அதை காட்டாமல் இருப்பவர்கள் மத்தியில் நடைமுறையில் காந்தியின் தைரியமான அணுகுமுறை மேலானது என கருத துவங்கினார் கிருபளானி.
பேராசிரியர் ஊதியத்தில் மிக சிக்கனமாக செலவை செய்துவிட்டு பணத்தை வங்கப் போராளிகளுக்கு அனுப்பிவந்தார் கிருபளானி. காந்தியுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் பழகி விவாதித்து பின்னர் அவரின் கருத்துக்களுடன் ஒத்துப்போகும் நிலையை கிருபளானி மேற்கொள்கிறார். காந்தியை முசாபர்பூர் அழைத்துவந்து தன்னுடன் தங்க வைக்கிறார். கல்லூரிமுதல்வரிடம் கிருபளானி குறித்து அரசாங்கம் கேட்ட விளக்கங்களுக்கு அவரை காப்பாற்றும் வகையில் பதிலை முதல்வர் தந்துகொண்டிருந்தார். காந்தி வந்துபோன 15 ஆம் நாள் கிருபளானி கல்லூரி ஆசிரியர் பதவியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.
1917 முசபர்பூர் பகுதி சார்ந்த சம்பரான் போராட்டத்தில் அரசாங்கத்தை எதிர்த்து காந்தி நின்றவிதம் அவர் பெயர் நாடுமுழுவதும் பிரபலமாக உதவியது. இந்நிகழ்வு கிருபளானியை நெகிழவைத்தது, டாக்டர் ராஜேந்திரபிரசாத்துடனும் தோழமை கிட்டியது. பெரும்பாலான நேரத்தை காந்தியுடன் செலவழிப்பதையே கிருபளானி விரும்பினார். சில மாதங்கள் பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு தனிச் செயலராக இருந்தார். 18 மாதங்கள் பனராஸ் இந்து பல்கலைகழகத்தில் ஆசிரியராக இருந்தார். பின்னர் காந்தியுடன் அவரது நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
பிரிட்டிஷாரின் ரெளலட் சட்டம், ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் காந்தியின் அகிம்சை முறைப்போராட்டங்கள் மீதான சந்தேகத்தை கிருபளானி அவர்களுக்கு தராமல் இல்லை. 1922 ஒத்துழையாமையை செளரி செளராவை காண்பித்து அவர் விலக்கிக்கொண்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அந்நேரத்தில் காந்தியின் பக்கம் கிருபளானி மிகுந்த நம்பிக்கைவைத்து நின்றார். அதேபோல் சுயராஜ்யவாதிகள் சட்டமன்றங்களுக்கு செல்லவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தபோது காந்தி அதை ஏற்கவில்லை. கிருபளானி காந்தி பக்கம் அப்போதும் நின்றார்
1920 பனாரஸில் பேராசிரியராக இருந்தபோது ’காந்தி ஆசிரம்’ என ஒன்றை அங்கு அமைத்தார் கிருபளானி. இளம் டாக்டர்கள், வக்கீல்களுடன் சேர்ந்து சத்தியாக்கிரக போராட்டத்தை தீவிரப்படுத்தினார். கைது செய்யப்பட்டார். காசி வித்யாபீடம், வல்லபாய் பட்டேல் முயற்சியால் நிறுவப்பட்ட குஜராத் வித்யா பீடம் என இரண்டிற்கும் சென்று ஏராள இளைஞர்களுக்கு தேசப்போராட்ட உத்வேகத்தை கிருபளானி ஏற்படுத்தினார். காந்திக்கு விருப்பமாக இருந்த குஜராத் வித்யா பீடத்தில்
5 ஆண்டுகள் பணி செய்துகொண்டிருந்தபோதுதான்
அவர் ஆச்சார்யா என அழைக்கப்படலானார்.
1934ல் காங்கிரசில் செயலர் பொறுப்பு அவருக்கு தரப்பட்டது. நாடு சுற்றமுடிந்தது. பக்குவமான, வறட்டுத்தனங்களுக்கு இடம் கொடுக்கவிரும்பாத, தனது சொந்த அனுபவங்கள் அடிப்படியில் அவர் வளரத்துவங்கினார். தலைமை பண்புகளுக்குரிய கட்டுமானங்கள் அமைந்த மனிதராக கிருபளானி உயரத்துவங்கினார். அவர் இயல்பிலேயே சற்று கூச்ச சுபாவம் உடையவராக இருந்தார், விளம்பரம் தேடிகொள்ளாதவராகவும், எளிமையாக இருக்கவும் கற்றார்.
அவர் கூட்டங்களில் ஏறி நின்று உஷ்ணம் கிளப்பும் பேச்சாளர் வகைப்பட்டவரல்லர். பொறுப்புடன் பாதை காண வேண்டும் என்கிற தவிப்புள்ளராக இருந்தார். சகமனிதர்களுடன் கருத்து வேறுபடும்போது தனிப்பட்ட தாக்குதல்கள் கூடாது என நினைத்தார். ஆனால் அனல் பறக்கும் விவாதங்களை அவர் நடத்தாமல் விட்டதில்லை. நாடாளுமன்ற உரைக்காக பிறந்தவர் போல் அவரது உரைகள் அமைந்ததாக பார்கவா தெரிவிக்கிறார். குறிப்புகள் எடுத்துக்கொண்டுபோனாலும் அவர் வேகமான சிந்தனை ஆற்றல் தெறிக்க பேசுவதுபோல் இருக்கும் என்கிறார் பார்கவா.
அக்சாய் குன்றுகள் சீனா கைப்பற்றியது குறித்த விவாதத்தில் அவர் நேருவை பதில் சொல்லமுடியாத அளவு கடுமையாக விமர்சித்தார். தொலைநோக்கில் கனவுலகில் கிருபளானி அவர்கள் எப்போதும் இருக்கிறார் என நேரு விமர்சித்தார். அதற்கு பதிலாக ஆம் நமது தொலைநோக்கும் கனவும் பலித்தன. இனியும் பலிக்க வேண்டுமென்றார் கிருபளானி.
1946வரை அவர் காங்கிரசின்
செயலராக இருந்தார். சுபாஷ் தலைவராக இருந்தபோது அவருடன் கிருபளானிக்கு ஒத்துப்போகவில்லை. ஜவஹர் தலைவராக இருந்தபோதும் அவ்வளவாக உடன்பட்டிருக்கவில்லை. ஆனால் அலுவலக பொறுப்பை அவர் கிருபளானியிடமிருந்து எடுத்துவிடவில்லை. 1946 இறுதியில் காங்கிரஸ் தலைவராக கிருபளானி இருக்கவேண்டும் என காந்தி விரும்பினார். எதிர்ப்பு கிளம்பியது. அனைத்தையும் மீறி காந்தி உறுதியாக இருந்ததால் அக்டோபர் 1946ல் கிருபளானி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் பதவி விலகவேண்டியிருந்தது.
1950ல் ஜவஹர்லால் மீண்டும் கிருபளானி காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என விழைந்தார். புருஷோத்தம்தாஸ் அவர்களை பட்டேல் மற்றும் வலது பிரிவினர் நிறுத்தினர். புருஷோத்தம் தாஸ் டாண்டன் 1306, கிருபளானி 1092 வாக்குகள் வாங்கினர். மூன்றாவது வாக்கு என 202 பிரிந்தது. நேரு தான் தோற்றதாகவே எடுத்துக்கொண்டார். நேரு கிருபளானிக்கு நேரிடையாக இறங்கி பணியாற்றவில்லை. ஆனால் பட்டேல் டாண்டனுக்காக பணியாற்றினார். பட்டேல் அவ்வாண்டே மறைந்தார். கிருபளானியை மத்திய கமிட்டியில் இணைக்க நேரு கோரியபோது டாண்டன் ஏற்க மறுத்தார். தனக்கு இனி காங்கிரசில் இடமில்லை, வகுப்புவாதிகளை உள்ளிருந்து போராடமுடியவில்லை என்கிற உணர்வு கிருபளானிக்கு உருவானது. அவர் 1951ல் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்பதை உருவாக்கினார்
Comments
Post a Comment