Skip to main content

மாட்டிறைச்சி பொருளாதாரம் அரசியல் Beef Economy Politics

மாட்டிறைச்சி பொருளாதாரம் அரசியல்

                        -ஆர்.பட்டாபிராமன்



மத்திய அரசாங்கம் மே 23, 2017 அன்று அரசிதழ் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு  சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டம் 1960ல்  கால்நடை வர்த்தக கட்டுப்பாடுகளை அதில் முன்மொழிந்துள்ளது. அவை 2017 விதிகள் என  பெயரிடப்பட்டுள்ளன.
இறைச்சி கூடங்களுக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கொணரப்படும் கட்டுப்பாடுகள் 13 பில்லியன் டாலர் (70ஆயிரம் கோடி) தோல்பதனிடும் தொழிலையும், 4 பில்லியன் டாலர் (22000கோடி) இறைச்சி வர்த்தகத்தையும் பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சுகாதாரமற்ற இறைச்சிக்கூடங்களை முறைப்படுத்துவது, சட்டத்திற்கு புறம்பாக மாடுகள் கடத்தப்படுவதை தடுப்பது என்பதைகூட புரிந்து கொள்ளமுடியும். சந்தைகளில் மாட்டு வியாபாரம் தடை என்பதை ஏற்கமுடியாது என்கிற கருத்து வலுப்பட்டு ஆங்காங்கே  எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன.
புதியவிதியின் ஷரத்து 2 ’கால்நடை சந்தை’ என்பதன்  வரையறுப்பை தருகிறது. இதன்படி, ஒர் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு விற்பதற்காக கொணர்வது எல்லாமே சந்தையாகிவிடும். கால்நடை என்பதில் எருது, காளை, பசு, எருமை, கன்று, ஒட்டகம் என நாம் அறியப்படுபவை அடக்கம். கன்று என்பது மூன்றுமாத வயது கொண்டவை. விதி 3ன்படி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் கால்நடை சந்தை கண்காணிப்பு குழு செயல்படும். தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் சந்தைகள் தங்களை மூன்று மாதகாலத்திற்குள் பதிவு செய்துகொள்ளவேண்டும். புதிய சந்தை எனில் விண்ணப்பிக்கவேண்டும். கண்காணிப்புக்குழுவிற்கு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. அதிகார அத்துமீறலுக்கோ, ஊழலுக்கோ அவை பிற அதிகாரங்கள் போல மாறலாம் என்பதுதான் நமது கடந்தகால அனுபவம் .
விதி 13ன்படி எதையும் லாயக்கற்ற மிருகம் என சொல்லி எவரும் சந்தையில் விற்றுவிடமுடியாது. பேறுகாலத்திலும் கால்நடையை விற்ககூடாது. விதி 22 விற்பனை சம்பந்தமான கட்டுப்பாடுகளை பட்டியலிட்டு வரையறை செய்கிறது. பெரும்பிரச்சனைகளை உருவாக்கும் விதியாக இது அமையும் என    சமுக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகள் கவலையை தெரிவித்துள்ளனர் இறைச்சிக்காக விற்கப்படவில்லை என  கால்நடையின் சொந்தக்காரர் கையெழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும் என்பதுடன் வாங்குபவரும் இறைச்சிக்காக வாங்கவில்லை என தெரிவிக்கவேண்டும் . விதி  22 இக்கட்டுப்பாட்டை விதிக்கிறது.
  மிருகவதை தடுப்பு சட்டம் 1960ன் மூலவிதி பிரிவு 11 (3) e  யை இது சாகடிக்கிறது,  செயலிழக்க செய்கிறது என்பது சட்டமறிந்தவர்கள்  எழுப்பும் மிக முக்கிய குற்றசாட்டாகும். தேவையற்ற முறையில் வலியை துன்பத்தை உருவாக்காமல் உணவிற்காக மிருகங்கள் கொல்லப்படலாம் என இவ்விதி இறைச்சி உணவு பாதுகாப்பை வழங்கியிருந்தது. தற்போது இறைச்சி மறைமுகமாக   சித்திரவதை என்கிற வரையறைக்குள் கொணரப்பட்டுள்ளது என்பதே அவ்வறிஞர்கள் சுட்டிக்காட்டும்  மிக முக்கிய அம்சம். . உணவிற்காக கொல்லப்படுவதை விதி 11 ன் துணைவிதி தடுக்கவில்லை. ஆனால் விதி 22 மூலம் நடைமுறையில் அப்பாதுகாப்பு, இறைச்சி உணவு கிடைப்பது என்பதை செயல் இழக்க செய்வதற்குரிய முயற்சியாகும்  என்கிற சந்தேகம் எழுந்துள்ளது .  இதுதான் அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தின் அடிப்படையாகவுள்ளது
இதில் பொருளாதாரம், சட்டக்காரணிகள், மனித உரிமைகள், மாநில உரிமைகள் என்பதையெல்லாம் தாண்டி இந்துத்துவ அரசியல், இஸ்லாமியர் எதிர்ப்பு மனோநிலை என்பன மேலோங்கிவருகிறது என்பதைதான் அனைவரும் கவலையுடன் பார்க்கின்றனர்.
கிராம் உத்யோக பத்ரிகா தனது 1953ஆம் ஆண்டு இதழில்  பசு பொருளாதாரம் குறித்த கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில் கிழக்கிந்திய கம்பெனிகள்  , திப்புசுல்தான் எருதுகளை ராணுவங்களில் பயன்படுத்திய குறிப்பு தரப்பட்டுள்ளது. வெல்லஸ்லி    குதிரைகளைவிட எருதுகள் சிறப்பானவையாகவுள்ளனவே என வியந்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பசு எருதிற்கும் தாய் என்கிற வகையிலும் அது கால்நடை செல்வத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. காந்தியவாதிகள் அமைதி பொருளாதாரத்தின் அடையாளமாக அதை கண்டார்கள். கோ சேவா’ - பசுபாதுகாப்பு இயக்கம் என்பதை அவர்கள் அமைதி இயக்கமாகவே பிரச்சாரம் செய்தனர்.
 1946ல் அமிர்தசரஸ்ஸில் பசுமாநாடும் நடைபெற்றது. பருத்தி ஆலைகள் தொழில் வளர்ச்சியால் மாடுகளுக்கு பருத்திக்கொட்டை கிடைப்பது பிரச்சனையாகிறது. இதனால் கால்நடை செல்வம் அழியலாம் என்பதும் அங்கு பேசப்பட்டது.  தார் சிமெண்ட் சாலைகள் அமைத்து போக்குவரத்து வசதியை அதிகமாக்கி வருவதால் அவ்வப்போது போக்குவரத்திற்கு உதவியாக இருந்த மாடுகளின் வேலை பயன்பாடு குறைகிறது என்பதும் அம்மாநாட்டில் எதிரொலித்தது. இந்தபேச்சுக்கள் எல்லாம் கிராமப்புற வாழ்க்கை பொருளாதாரம் சார்ந்தும் அதன் அழிவின் கவலையிலிருந்தும் பேசப்பட்டவையே தவிர  மதம் சார்ந்த உரையாடல்களாக இல்லை.
மனிதர்கள் ஜீவனத்திற்கு உற்பத்திசார்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். அன்றாடம் பயன்படும் கருவிகளை பூஜிப்பவராகவும் இருக்கின்றனர். அதற்கென தனி நாள் குறித்து நன்றி பாராட்டி கொண்டாடுகின்றனர். அக்கால இங்கிலாந்து குதிரைமைய பொருளாதாரமாக இருந்தால் இந்தியா பசுவை மையமாக கொண்ட பொருளாதாரமாக இருந்தது எனலாம். அருணா ஆசப் அலி ஒருமுறை காந்தியிடம் மனித பிரச்சனைகள் பல இருக்க பசு பிரச்சனையை அலட்டிக்கொள்வதேன் என கேட்டதை வைத்து காந்திய பொருளாதாரவாதி குமரப்பா அவர்கள் காந்தியின் சிந்தனையை வெளிப்படுத்தும் கட்டுரை ஒன்றை எழுதினார்.  "முப்பதுகோடி இந்தியர்களின் வலக்கரம் பசு. எருது இல்லாமல் கிராம உற்பத்தியோ, அவற்றின் நகர்வோ இராது. எண்ணெய் ஆட்டக்கூட மாடு வேண்டும். மாடுதான் கிராமத்திற்கு எந்திரம். எனவே திறமையான பலம்கூடியவைகளாக அவற்றை பராமரிக்கவேண்டும். ஜமீன்தார்கள் ட்ராக்டருக்கு போகலாம் சாதாரண விவாசாயி எங்கு போவான். மேலும் டிராக்டரால் நமது விளைச்சல் தரும் மண்வளம் வீணாகும். மாடுகளின் சாணமும் நல் உரமாகும். எனவேதான் கிராமம் நிறைந்த இந்திய பொருளாதாரத்தில் மாடு மையமாக உள்ளது” என குறிப்பிட்டிருந்தார் குமரப்பா.  அன்றிருந்த நிலையில் கிராமபொருளாதார விளக்கமாக அவரது பதில் அமைந்தது.
நம்மில் பலர் மதம் காரணமாகவோ அல்லது வேறு காரணமாகவோ சைவ உணவு எடுத்துக்கொள்பவர்கள். பால் முக்கிய உணவாக இருக்கிறது என பேசியபோது கூட ’மதம்’ என்பதன்  அர்த்தம் தூக்கி நிற்காமல் பேசினார் குமரப்பா. அன்றிருந்த கணக்குப்படி பசுவகைப்பட்ட செல்வம் ஆண்டிற்கு 1000கோடி என்றும், விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் அதை தரவில்லை என்றும் கணக்கிட்டு குமரப்பா கூறினார். எனவே அதை காப்பது அவசியம் என அவரது கட்டுரை செல்கிறது. காந்தியவாதிகள் எருதுகளைவாழும் ட்ராக்டர்’ என்றும்,  ’நடமாடும் உர ஆலைகள்’ என்றும்  விவசாயத்தில் எந்திரங்கள் நுழைந்த சூழலில் உயர்த்தி பேசினர்
இறைச்சி பொருளாதாரம்  குறித்து சில மாதங்களுக்கு முன்பு இந்துவில் தோழர் பிருந்தா காரத் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். மாட்டிறைச்சி தடைகள் தொடர்பாக எழுந்திடும் சமூக பிரச்சனைகளை அதில் அவர் விளக்குகிறார். 25லட்சம் தொழிலாளர்கள், பெரும்பாலோர் தலித் பகுதியினர் தோல்பதனிடும் தொழிலை நம்பியுள்ளனர். முஸ்லீம்களை குறிவைக்கும் சமூக பிரச்சனையாகவும் மதபிரச்னையாகவும் இப்பிரச்சனை மாற்றப்படுகிறது. விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு உதவாது என்கிற மாட்டை பராமரிக்க ஆண்டிற்கு ரூ 36000 செலவாகலாம். கால்நடை மான்யம் என அரசு தருவதில்லை. கால்நடை கணெக்கெடுக்கின்படி 53 லட்சம் கைவிடப்பட்ட  கால்நடைகள் தெருக்களை நம்பி  சுற்றுகின்றன. செத்துக்கிடக்கும் மாட்டின் தோலைத்தொடக்கூட அச்சம் ஏற்படுத்தும் சூழல்  உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை பொறுப்புடன் தோழர் சுட்டிக்காட்டியிருந்தார்.
NSSO சர்வே 11-12ன்படி கிடைக்கும் தகவலின்படி  இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பவர்கள் 5 கோடிக்கு மேல் உள்ளனர் . மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் இருக்கிறது. பலமாநிலங்கள் விவசாயத்திற்கு  பயன்படாத, கறவை நின்றுபோன மாடுகளை இறைச்சிக்கு தகுதியானவை என  சான்றளித்த பின்னரே அவை கொல்லப்படுகின்றன. அரசியல் அமைப்பு சட்ட விவாதங்களில் சமரசம் ஒன்றை உருவாக்கும் நிலையிலேயே அம்பேத்கார் ஷரத்து 48யை வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் சேர்த்தார். இதன்படி பசு, கன்று, வண்டிமாடு, கறவைமாடு ஆகியவற்றை இறைச்சிக்காக  கொல்லப்படுவதை தடுக்க அரசாங்கம் முயற்சிகள் எடுக்கும் என்பது சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இறைச்சிக்கு தகுதியானவை என்பவற்றையும் தடுக்கும் முயற்சிதான் தற்போது அரங்கேற்றப்பட்டு வருகிறது என்பது கவனத்திற்குரிய அம்சம்.
முன்னாள் திட்டக்கமிஷன் உறுப்பினர் கிரிதி பரிக் எகனாமிக் டைம்ஸில் கட்டுரை ஒன்றை  2017 ஏப்ரலில் எழுதியிருந்தார். மாடுகளில் ஆண் இனம் குறைந்து வருவதை கவலையுடன் சுட்டிக்காட்டிய அவர் கடந்த 15 ஆண்டுகளில் பசு ஒருகோடிக்குமேல் உயர்ந்துள்ளதையும் குறிப்பிடுகிறார். பசு 10 வயதைதாண்டி பால் கொடுப்பதில்லை,. ஆனால் 20-25 ஆண்டுகள் அதனால் வாழமுடியும். எருதுகளில் 10 வயது நிறைந்தவை 2 சதம்தான் உள்ளன. மாட்டிறைச்சி சட்டங்கள், தடைகள் என்பன உக்கிரமானால் அவை 50 சதமாக உயரலாம். 2012ல் 18 கோடியாக உள்ள கால்நடைகள், 2027ல் 40கோடியாக உயர்ந்துவிடும். இது பொருளாதார பிரச்சனைகளை மாடுகள் வளர்ப்பவர்க்கு உருவாக்கும் என அக்கட்டுரையில் தெரிவிக்கிறார் அவர். மாடுகள் வளர்ப்பவரில் 70 சதம் குறு சிறு விவசாயிகள்தான்.

1960 மிருகவதை தடுப்பு சட்டத்தின் பிரிவு 38ன் அடிப்படையில்  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் மாட்டு வியாபாரத்தை முறைப்படுத்தியுள்ளோம் என்கிறது அரசாங்கம். இச்சட்டம் இறைச்சிக்கு கொலை என்பதை நேரிடையாக தடை செய்யவில்லை என்றாலும் இறைச்சிக்கு மாடு கிடைப்பதை தடுப்பதாக இருக்கிறது என சுயராஜ்ய பத்ரிக்கையில் ஜெகன்னாதன் பாஜக கட்சியினருக்கு சுட்டிக்காட்டியுள்ளார். 2019 தேர்தல் காலத்தில் இப்படிப்பட்ட முட்டாள்தனம் அவசியமா என்கிற காட்டமான கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
பாஜகவை காப்பாற்றவேண்டும் என்கிற எண்ணத்தில் சில முக்கிய அறிவுரைகளை அவர் தருகிறார். முதல் அறிவுரை இந்துத்துவா  அரசியலை வன்முறைமூலம் நிலைநாட்டி வளர செய்ய முடியாது. ’பசு அரசியல்’ பொருளாதார பிரச்சனையாக இன்றுள்ள சூழலில் நிற்கமுடியாது. பசுபாதுகாப்பு ஏரியா மாநிலங்களில் பாஜக ஏற்கனெவே வலுவாகிவிட்டது, அது போகவேண்டிய  மாநிலங்களுக்கு இவ்வரசியல் மூலம் பலன் கிடைக்காது. இந்துக்கள் மதம்சார்ந்து மட்டும் பசுவை கொண்டாட துவங்கவில்லை என்கிற வரலாற்றுப் பார்வை வேண்டும். இந்துக்களில் சைவமாக இருப்பவர் பசு அரசியல் வன்முறையை ஏற்கவேண்டும் என்கிற அவசியமில்லை.  இவை பொதுவான அரசியல் அறிவுரைகளாக இருந்தாலும் பாஜக கட்சியினர் கவனித்துக் கொள்ளவேண்டியவையாகவுள்ளன.
குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது]. இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய்தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும்அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
நேரடியாக நீங்கள் பசுவை வளர்க்காவிட்டாலும், பசுவின் பாலை அருந்துவதால், பசு உங்களின் தாயாக இருக்கிறாள். அதனால் அவளைக் கொல்வதோ அவளது சதையினை மாமிசமாக உண்பதோ நிச்சயம் மகா பாவமாகும் என்கிற கருத்தை இந்துத்துவா ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். பசுவைக் கொல்வது தீவிரவாதம். எனவே பசுவை கொல்பவனின் குரல்வளை அறுக்கப்படும் என ’மிதவாதம்’ பேசிவருகின்றனர். பசு பராமரிப்பை நாம் உண்மையிலேயே நடைமுறைப்படுத்த விரும்பினால், அஃது அங்காங்கே நிறுவப்படும் கோசாலைகளின் மூலமாக நிச்சயம் சாத்தியமானதல்ல; எத்தனை எருதுகளையும் மடி வற்றிய பசுக்களையும் கோசாலைகளில் வைத்து தீனி வழங்க முடியும்? எனவே, நிலத்தை உழுது பசுக்களுடன் அன்றாடம் வாழக்கூடிய விவசாயிகளே அதற்கு முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டும் என திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் இதழில் எழுதுகிறார். 1947ல் 350 ஆக இருந்த இறைச்சி கூடங்கள் 36000 ஆகிவிட்டது. அன்று 30 கோடி மக்கள், 120 கோடி பசுக்கள் இருந்தன. ஆனால் தற்போது 120 கோடி மக்கள் 20 கோடி பசுக்கள்தான் உள்ளன என்பதும் அவர்கள் முன்வைக்கும் வாதம்.  
யசுர்வேதங்கள் பசு யாகங்கள் குறித்து பேசுகிறது,  விவேகானந்தர் மாட்டிறைச்சி உண்டார் என சொல்லி சர்ச்சை ஏற்படுத்துவது நமது நோக்கமல்ல. அது நம் மக்களின் உணவு பழக்கமாக காலம் காலமாக இருந்து வந்துள்ளது என்கிற வரலாற்றை நாம் இருட்டடிக்கக்கூடாது.  வேறு அரசாங்கம் ஒன்று வந்து மாட்டிறைச்சி தின்பதை கட்டாயம் ஆக்கி, சைவ உணவிற்கு கட்டுப்பாடுகளை கொணர்ந்தாலும் இப்போது அரசாங்கம் செய்திடும் கட்டுப்பாடுகள் சரியல்ல எனப்பேசும் ஜனநாயக சக்திகள்  அதற்கும் குரல் கொடுக்கும், போராடவும் செய்யும் என்ற புரிதலுடன்தான் இப்பிரச்சனையை போராட்டக்காரர்கள் அணுகுகிறார்கள்
USDA என்கிற அமெரிக்க விவசாய இலாகா 2012ல் அறிக்கை ஒன்றை தந்தது. அதில் மாட்டிஇறைச்சி  ஏற்றுமதில் இந்தியா உலக வர்த்தகத்தில் 25 சதம் எட்டிவிட்டது. 2009ல் இது 8 சதம்தான் என்றது அறிக்கை. மேற்கு ஆசியா இஸ்லாமிய நாடுகள்தான் முக்கிய இறக்குமதியாளர்கள் என்கிற செய்தியும் அதில் உள்ளது. எல்லைப்புற கள்ளச்சந்தை என்பது தற்போது பிரச்ச்னையாகியுள்ளது.
  2014 முதல் விவாதிக்கப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பை   ஜூலை12, 2016ல் உச்சநீதிமன்றம் வழங்கியது. மிருகவதை தடுப்பு சட்டம் 1960ல் விதி 38ன்படி கால்நடை கடத்தல், சந்தை ஒழுங்குபடுத்தல் குறித்த சட்டவரையரைகளை உருவாக்குவீர் என்பது நீதிமன்ற வழிகாட்டுதல். இதற்கென தயாரிக்கப்பட்ட நகலை அரசாங்கம் ஜனவரி 2017ல் வெளியிட்டது. எதிர்வினையாக வந்தவைகளையும் பரிசீலித்து மே 23 2017 அன்று அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டதாக அரசாங்கம் தங்கள் நிலையை விளக்கியுள்ளது. கால்நடை விற்பனையை சட்டத்திற்கு புறம்பாக நடத்தவிடாமல் தடுப்பது, கால்நடை கடத்தலை தடுப்பதுதான் நோக்கம் என்கிறது அரசாங்க தரப்பு செய்தி குறிப்பு.
நாடு முழுவதும் இதற்கு பல எதிர்வினைகள் வரத்துவங்கியுள்ளன. மாநில உரிமையில் கைவைக்காதே என்கிற முழக்கமும் எழுந்துள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள அய்யங்களை நீக்குவதும் கால்நடை வதைதடுப்பு என்கிற பெயரில் மனிதகொலைகள் நடவாமல் தடுப்பதிலும் அரசிற்கு பொறுப்பில்லையா என்பது பிரதான கேள்வியாகியுள்ளது, பசு அல்லது மாட்டின் பெயரால் மனிதகொலைகளை நடத்துவோரை அவசரமாக விசாரித்து கடும் தண்டனைகள் தந்திட  அரசாங்க நடவடிக்கைகள் அதி அவசரமாகிறது.
காந்தியின் புகழ்வாய்ந்த ’ஹிந்து சுராஜ்யம்- இந்தியன் ஹோம் ரூல் ’ நூற்றாண்டு கொண்டாட்டத்தை கண்ட முக்கிய நூல் . அதில் அவர் பசுபாதுகாப்பு என்கிற பிரச்சனையை விவாதிக்கிறார். ”பசு இந்துக்களுக்கு புனிதமான ஒன்று என்பதை இஸ்லாமிய சகோதரர்களிடம் எடுத்துரைக்கலாம். ஆனால் பசுவை கொலை செய்தார் என்பதற்காக அவரை கொலை செய்வதை ஏற்கமுடியாது. எனது பசுவை நான் மதிப்பதுபோல் சக மனிதன் அவர் எந்த மதத்தினரானவரானாலும் நான் மதித்தாகவேண்டும். பசு பயன்படுவது போலவே தான் முஸ்லிம் உட்பட எந்த மனிதனும் பயன்படுகிறார். பசுவை கொல்கிறார் என்பதால் அவருடம் மோதி அவரைகொல்வது என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல பசுவிற்கும் எதிரான ஒன்றேயாகும். பசுகுறித்து மிகை உணர்ச்சி நான் கொள்வேனாயின் அதை பாதுகாத்திட எனது  உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டுமே தவிர எனது சகோதரன் உயிரையல்ல என்பது என் நிலைப்பாடு.. என்னைப் பொறுத்தவரை என் மத நீதி அதுதான் என  புரிந்துகொள்கிறேன்” என்கிற தெளிவான விளக்கத்தை 1909லேயே  தேசப்பிதா நாட்டிற்கு தந்துள்ளார். காந்தியதேசம் என்பதன் பொருள் முற்றாக அழிக்கப்படுகிறதா என்கிற நியாயமான கேள்வி ஜனநாயக உள்ளங்கொண்டோரிடம் எழாமல் இல்லை.



.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு