https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, June 8, 2017

மார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx) 3


III
பிரஸ்ஸல்ஸில் ஜெர்மன் தொழிலாளர் கல்விமையம் ஒன்றை மார்க்ஸ் நண்பர்களுடன் அமைக்கிறார். அங்கு வில்ஹெல்ம் உல்ஃப், மோசஸ் ஹெஸ் வகுப்புகள் எடுக்கின்றனர். மார்க்ஸ் பொருளாதார குறிப்புகள் பற்றி வகுப்புகள்  எடுத்து வந்தார். லண்டன் கமிட்டி உடனடியாக கம்யூனிஸ்ட் அறிக்கையை அனுப்பிடவேண்டும் என்ற தாக்கீதை மார்க்ஸிற்கு அனுப்பியது. 1848 பிப்ரவரியில் வெளியிட ஏதுவாக மார்க்ஸ் அறிக்கையை அனுப்பினார். இவ்வறிக்கை எழுதியதன்மூலம் ’காலங்களை கடந்த புரட்சிகர சக்திகளின் மாஸ்டர் ஆனார் மார்க்ஸ்’ என டேவிட் பெலிக்ஸ் பாராட்டுடன் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில் "A spectre is haunting  Europe- the spectre of communism " அய்ரோப்பாவை கம்யூனிசம் எனும் பெரும்பூதம் ஆட்டிப்படைக்கிறது என்று அவர் எழுதியதை ’boastful  lie’ வெற்றுப்பெருமை என பெலிக்ஸ் விமர்சிக்கிறார். அனைத்துவகைப்பட்ட சோசலிச சிந்தனைகளையும் கடுமையாக விமர்சித்து மார்க்ஸ் தொழிலாளி வர்க்க கம்யூனிஸ்ட் கட்சி என்பதை உயர்த்தி பிடித்தார். அதன் தீர்மானகரமான புரட்சிகரமான பாத்திரத்தை அழுத்தமாக வெளிப்படுத்தினார்.
பெல்ஜியத்தில் தாயிடமிருந்து பெற்ற 6000 பிராங்க்ஸ் பணத்தில் 2100 எடுத்து பெல்ஜியம் குழு ஒன்று ஆயுதம் வாங்கிட மார்க்ஸ் உதவினார் என்கிற போலீஸ் தகவல் சென்றது. பெல்ஜியம் டெமாக்ரடிக் அசோசியேஷன் என்பதற்கு மார்க்ஸ் துணைத்தலைவராக இருந்தார். பிப்ரவரி 27 அன்று ஆர்ப்பாட்ட அறைகூவல் விடப்பட்டது. 1848 மார்ச் 3 அன்று மாலை 24 மணிநேரத்திற்குள் மார்க்ஸ் பெல்ஜியம்விட்டு வெளியேறவேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 4 காலையில் அவர் கைது செய்யப்படுகிறார். மார்க்சும் சில வெளிநாட்டினர்களும் கூச்சலுடன் பிரஞ்சு புரட்சியை காபி கிளைப்பில் கொண்டாடிகொண்டிருந்தார்கள், அங்கு  போலிசாருடன் நடந்த வாக்குவாதத்தில் மார்க்ஸ் கைது செய்யப்பட்டார் என போலிஸ் தரப்பு கூறியது. மார்க்ஸ் வீடு புகுந்து அவர்களிடம் போலிசார் மோசமாக நடந்துகொண்டனர்  என்கிற பொதுவான பதிவை பலர் தந்துள்ளனர்.
நிதிதிரட்டி புதிய ரெயினிஷ் ஜெய்டுங் பத்ரிக்கையை மார்க்ஸ் மற்றும் தோழர்கள் கொணர்ந்தனர். மிக கவனமாக கம்யூனிஸ்ட் பத்ரிக்கை  என அறிவிக்காமல் ஜனநாயக இதழ் என அறிவித்தனர். பிரியமுடியாத ஒன்றுபட்ட ஜெர்மனிக்காக என்ற முழக்கம் தந்தனர். இன்றுள்ள நிலைபோல்தான் அன்றும்.. பல தொழிலாளர்கள் வேறுபத்ரிக்கைகளையே அதிகம் படித்து வந்தனர். ஆனாலும் மார்க்ஸ் உழைப்பால் 6000 எண்ணிக்கையில் வெளியாகி அப்பத்ரிக்கை கவனத்தை ஈர்ததது. 1848 ஏப்ரலில் கலோன் வந்தார் மார்க்ஸ்.

கலோனில்  அந்நேரத்தில் லீகை துவங்கி நடத்தியவர் டாக்டர் காட்சால்க். 1848 மார்ச்சில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். காட்சால்க் தொழிலாளர் அமைப்பில் 5000 உறுப்பினர்களை வைத்திருந்தார்,  மத்தியதர வர்க்கத்திலிருந்து தீவிரமாக இயங்கிவந்த சிலருடன் ’நகர ஜனநாயக கழகம்’ ஒன்றை மார்க்ஸ் துவங்கினார். சிறு வர்த்தகர் சிலரும் அதில் இணைந்தனர். அரசியல் நிகழ்வாக ஜெர்மன் 38 சிறுபகுதிகளிலும், பிரஷ்யாவும் சேர்ந்து பிராங்கபர்ட் நாடாளுமன்றம் அமைந்தது. அதற்கு மார்க்சின் சில நண்பர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.ஆர்னால்ட் ரூகாவும் உறுப்பினர்.
1848 ஜூலையில் மார்க்சின் ஆலோசனைப்படி மூன்று முக்கிய ஜனநாயக அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு, அதை இயக்கிட ஆறுபேர் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் போலிசார் காட்சால்க்கை கைது செய்தனர். வன்முறை மூலம் குடியரசு நிறுவ முயற்சி என்கிற வழக்கு அவர்மீது போடப்பட்டது. இச்சூழலில் மார்க்ஸ் தலைமை பாத்திரம் எடுத்து  ஜனநாயகவாதிகளின் கலோன் காங்கிரஸ் என்பதை ஆகஸ்டில் அமைத்தார். செப்டம்பரில் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி என ஒன்றை எங்கெல்ஸ், உல்ஃப் போன்றவர் அமைத்தனர். இக்கமிட்டி கலோனுக்கு 10 கிமீ தூரத்தில் உரிங்கன் எனுமிடத்தில்  10000 மக்களை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தி பிராங்கபர்ட் நாடாளுமன்ற நடவடிக்கைகளை  தாக்கியது. ஷாப்பர் தலைமையில் எங்கெல்ஸ் உட்பட உரையாற்றினர். மார்க்ஸ் பங்கேற்கவில்லை.
செப்டம்பர் 25 அன்று எங்கெல்ஸ், உல்ஃப் உள்ளிட்டவர்களை கைது செய்ய அரசாங்கம் உத்தரவிட்டது. ஷாப்பர் சிறையிலடைக்கப்பட்டார். எங்கெல்ஸ் தப்பி பெல்ஜியம் சென்றுவிட்டார். மார்க்ஸ் பத்ரிக்கையில் தொடர்ந்து அரசாங்கத்தை தாக்கி மக்கள் ஆயுதகுழுக்களை அமையுங்கள் என எழுதிவந்தார். வரிகொடா இயக்கம் மேற்கொள்வீர் என்றார். 1849 பிப்ரவரி வழக்கில் தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் கருத்துக்களை வர் முன்வைத்தார்- I assure you, gentlemen that I prefer to study the great issues of the world, I prefer to analise the historical process, rather than wrestle with provincial personages, police and court" என தனது தற்காப்பு வாதங்களை வைத்தார். If the crown cariies out counter revoultion, the people has the right to respond with revoultion என வாதாடினார் மார்க்ஸ். தனக்கு உலக நடப்புகளின், வரலாற்றின் ஆய்வுகள்தான் முக்கியமானதாக இருக்கிறதே தவிர, உள்ளூர் ஆட்சியாளர்-பிரமுகர், போலீஸ், கோர்ட் பற்றியவை அல்ல என்றார்.
NRZ பத்திரிக்கையில்தான் மார்க்ஸ்   கூலி-உழைப்பு- மூலதனம் பற்றி தொடர் எழுதிவந்தார். மே18ல் அதன் கடைசி இதழ் சிவப்பு மையிட்டு வந்தது. 20000 காப்பி சென்றது. உங்களது ஆயுதத்திற்கு விடைகொடுங்கள் என அவர் உருக்கமாக எழுதியிருந்தார் . புதிய வலுவான ஆயுதங்கள் தரித்து மீண்டும் எழுவோம் என நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.. பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து ஆகஸ்ட் 23 1849ல் அவர் லண்டன் செல்கிறார். எங்கெல்சையும் அங்கு அழைக்கிறார். 1850 மார்ச்சில் அரசாங்கத்திற்கு இணையாக தொழிலாளர் தங்களது புரட்சிகர அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளவேண்டும் என்றார் மார்க்ஸ். Your Battle cry must be Permanent Revoultion நிரந்தர புரட்சி என்று பேசினார்.
World Society of Revoultionary Communism என்பதை மார்க்ஸ், எங்கெல்ஸ், வில்லிக், பிளாங்கியின் சீடர்கள், சார்ட்டிஸ்ட் இயக்கத்தினர்  லண்டனில் நிறுவினர். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், நிரந்தர புரட்சி என்கிற கருத்தாங்கங்களை அக்குழு பேசியது. வில்லிக் , ஷாப்பர் ஆகியவர்களுடன் மார்க்சிற்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லண்டனில் அரசியல் பொருளாதார ரிவ்யூ பத்ரிக்கை மூலம் 1850 மார்ச்- மே காலத்தில் பிரான்சில் வர்க்க போராட்டங்கள் குறித்து மார்க்ஸ் எழுதினார்.  சில மாதங்களுக்கு பின்னர் 1852ல் 18வது ப்ருமர் லூயிநெப்போலியன் வெளியானது.
மிக குறைவான தோழர்களுடன் இருப்பதே நல்லது என மார்க்ஸ் இக்காலத்தில் கருதினார். பிப்ரவரி 11, 1851ல் அவர் எங்கெல்ஸ்க்கு ‘This widely known and authentic isolation in which you and I find ourselves. It is entirely appropriate to our position and our principles.." என எழுதினார். குடிபெயர்ந்தோர் சார்பில் கூட்டம் ஒன்று 1848ன் பிரஞ்சுபுரட்சி குறித்து பேசிட கூடியபோது மார்க்சின் சார்பில் சென்றோரை அக்கூட்டத்தினர் ஏற்காமல் ஒற்றர்கள் என விமர்சித்து தொந்திரவு செய்து அனுப்பிவிட்டதாக பெலிக்ஸ் குறிப்பிடுகிறார்.
1850 நவம்பரில் எங்கெல்ஸ் தந்தையின் தொழிலை கவனிக்க மான்செஸ்டர் சென்றார். 1851ல் நியுயார்க் டிரிப்யூன் எடிட்டரும், ஃபூரியரிஸ்ட் என அறியப்பட்ட சார்லஸ்  ஜெர்மன் நிகழ்வுகள் குறித்து மார்க்சை எழுத சொன்னார். எங்கெல்ஸ் உதவியுடன் கட்டுரைகளை மார்க்ஸ் எழுதினார். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மார்க்சின் ஜெர்மன் கட்டுரைகள் எங்கெல்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சென்றாலும், 1853 முதல் மார்க்சே ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார்.
மார்க்ஸ் லண்டன் வந்தபோது அவருக்கு வயது 31. பிரஷ்யா போலீஸ் உளவாளி ஒருவர் மார்க்ஸ் மிக மோசமான மலிவான வாடகைப்பகுதியில் தங்கியிருந்ததையும், வீட்டு தளவாட சாமன்கள் பழையனவாக அழுக்காக இருந்ததையும், யார் வ்ந்தாலும் ஜென்னி உபசரித்து வருவதைப்பற்றியும் செய்தி அனுப்பியிருந்தார்.  முதலில் செல்ஷ்ஸி என்கிற சற்று மேம்பட்ட பகுதியில் மார்க்ஸ் தங்கினார். வாடகை கொடுக்கமுடியவில்லை. அதன்பின்னர் தீன் தெரு  என்பதில் 6 ஆண்டுகள் இருந்தார். முதல் பெண் ஜென்னி பாரிசில் பிறந்தார். லாராவும், எட்கரும் பிரஸ்ஸல்ஸில் பிறந்தனர்.
லண்டன் வந்தவுடன் எட்மெண்ட் , பின்னர் கைடோ என்கிற குழந்தை பிறக்கிறது. 1851 மார்ச்சில் பிரான்சிஸ்கா என்ற பெண் குழந்தை பிறக்கிறது. கைடோ, பிரான்சிஸ்கோ குழந்தைகள் இறக்கின்றனர்.  பிரான்சிஸ்கோவை புதைக்கத்தான் பணமில்லாமல் போய் பிரான்சிலிருந்து குடியேறிய ஒருவரிடம் கடன்பெற்று இறுதி சடங்கு முடிகிறது. 1855 ஏப்ரலில் 7 வயதில் எட்கர் மரணிக்கிறான். 1855 ஜனவரியில் எலியனார் பெண் பிறக்கிறாள். 1857 ஜூலையில் மற்றொரு பெண் குழந்தை மரித்தே பிறந்தது. மார்க்ஸ் குடும்பத்தில் ஹோமர், சோபாக்கிள்ஸ், தாந்தே, சேக்ஸ்பியர், கதே, பால்சாக் சார்ந்த இலக்கிய பேச்சுக்கள் மிக சாதராண உரையாடல்களில் கூட மிளிரும் என்பதை நாம் அறியமுடிகிறது.

மார்க்ஸ் பெரும் நகைசுவையாளரும் கூட. கேலிபேச்சும் கிண்டலும் பெயர்வைத்து கலாய்ப்பதும் நடக்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் குழந்தையைபோல் அடம் பிடிப்பவராக மார்க்ஸ் இருந்தார் . ’Vulgar Mob’ மோசமான கும்பல் என்றால் அவர்களின் அறியாமை கண்டு அவர் கோபம் கொள்பவராகவும் இருந்தார். வறுமையை, குடும்ப சுமையை எதிர்கொண்டு சமாளிப்பவராக ஜென்னி வாழ்ந்து மறைந்தார். ஆனால் அவர்களின் இருமகள்கள் தங்கள் வாழ்க்கையை தற்கொலை செய்துகொண்டு துறந்தனர். மூத்த மகள் ஜென்னிலாங்கேகூட 39 வயதில் உடல் சுகவீனமற்றவராகவே மறைந்தார்.
எங்கெல்ஸ் மான்செஸ்டரில் தொழிலாளர் பெண்மணி மேரிபர்ன்ஸ் உடன் மணவாழ்க்கையில் இருந்தார். அவர் மறைவிற்கு பின்னர் அவரது தங்கை லிஸ்ஸி உடன் வாழ்ந்தார். ஜென்னி மார்க்ஸ் மேரிபர்னசை வரவேற்பவராக இல்லை என்கிற பதிவை பெலிக்ஸ் தருகிறார். மேரி இறந்தபோது மார்க்ஸ் எழுதிய கடிதம் கூட எங்கெல்ஸ்க்கு வருத்தமளித்தது. அக்கடிதத்தில் மார்க்ஸ் கேட்ட பண உதவியை எங்கெல்ஸ் தரவில்லை. உடனடியாக செய்ய இயலாது என எங்கெல்ஸ் பதில் எழுதினார்.. பணம் கேட்க அது சரியான நேரமா என்ற கேள்வி எங்கெல்ஸ் இடம் இருந்தது. இதையறிந்த மார்க்ஸ் தனது வருத்தத்தை உடன் தெரிவிக்கிறார். எங்கெல்ஸ் அனைத்தையும் மறந்து கம்பெனி பணத்திலிருந்து 100 பவுண்ட் அனுப்பியதை பெலிக்ஸ் குறிப்பிடுகிறார். எங்கெல்ஸ் 1851முதல் மார்க்ஸ் குடும்பத்திற்கு நிதி உதவி செய்பவராக இருந்தார். மார்க்ஸ்-எங்கெல்ஸ் மாஸ்கோ ஆய்வு நிறுவனப்படி ஏறத்தாழ மார்க்ஸிற்கு ஏங்கெல்ஸ் செய்த உதவி 7500 பவுண்ட் ஆகும். அன்றைய காலத்தில் பெரிய தொகையாகவே அதை கருதமுடியும்.
லண்டன் வந்த ஆரம்ப ஆண்டுகளில் மார்க்ஸ் குடும்பம் மிக வறுமையில் இருந்தது. மூன்று- நான்கு ஆண்டுகளில் மாத வருவாய் 150 பவுண்ட் என்ற நிலை ஏற்பட்டது.. அடித்தட்டு மத்தியதர வாழ்க்கை வாழக்கூடிய அளவு இருந்தது. 1869ல் மார்க்ஸ்  கடன்களை பெரும்பாலும் அடைத்தார். எங்கெல்ஸ் மார்க்சிற்கு ஆண்டிற்கு 350 பவுண்ட் வருவாய் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்தார். தாயார் இறப்பிற்கு பின்னர் 700 பவுண்ட், வில்லியம் உல்ஃப் உயில் மூலம் 824 பவுண்ட் என பெற்றதால் குடும்பத்தை வறுமையிலிருந்து சிறிது சிறிதாக மீட்க முடிந்தது.

மார்க்ஸ் குடும்பம் ஹாம்ப்ஸ்டெட் பகுதிக்கு சற்று விசாலமான 7 அறைகள் கொண்ட வீட்டிற்கு செல்கிறது. 1867ல் காபிடல் முடியும் தருவாயில் அவருக்கு கொப்புளங்கள் வரத்துவங்கின. கண்பார்வை பாதிப்பு, பசியின்மை, வயிற்று உபாதைகள், , லிவர் பாதிப்பு தலைவலி, மூட்டுவலிகளால் அவதிப்பட்டார். பத்ரிக்கை விமர்சனம் என்பதை தாண்டி கனமான புத்தகங்களை மார்க்ஸ் எழுதவேண்டும் என்கிற விழைவை எங்கெல்ஸ் 1850களிலேயே சொல்லி வந்தார். காபிடல் முதல்பாகம் வெளியிடுவதற்கு 16 ஆண்டுகள் மார்க்ஸ் கடுமையாக உழைத்திருந்தார்.  இளமையிலிருந்து முதுமைவரை (Adolesecence- Senescence)   மார்க்சிடம் காபிடலுக்கு ஆன கூறுகள்  வளர்ந்து கொண்டேயிருந்தது என பெலிக்ஸ் மதிப்பிடுகிறார். மார்க்ஸ்  மறைந்த பின்னர் 1885, 1894ல் அடுத்த பாகங்கள் வந்தன. மார்க்ஸின் குறிப்புகளை வைத்துக்கொண்டு அவற்றை சரிசெய்து வெளியிட்டதாக எங்கெல்ஸ் தெரிவிக்கிறார். முதல்பாகம் மார்க்சின் தலைசிறந்த படைப்பாக அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment