https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, June 29, 2017

ஆச்சார்யா கிருபளானி 2

II
காந்தி கிருபளானியை ’Professor’ என்றுதான் அன்புடன் அழைத்துவந்தார். விடுதலைக்காலநேரு சர்க்கார்’  தான் காங்கிரஸ் பொறுப்பில் இருந்தபோது கொள்கை அமுலாக்கம் குறித்து தன்னுடன் கலந்து பேசவில்லை என்கிற வருத்தம் கிருபளானிக்கு இருந்தது. நாடுபிரிவினை குறித்த சிம்லா மாநாட்டிற்கு ஜின்னா எதிர்க்கிறார் என்கிற பெயரில் காங்கிரஸ் தலைவராக இருந்த கிருபளானி அழைக்கப்படவில்லை. நேருவை ஒப்பிடுகையில் கிருபளானி பட்டேலிடம் தள்ளியே இருந்தார். மதசார்பின்மை பிரச்சனையில் நேரு போல அவ்வளவு உறுதிப்பாட்டுடன் பட்டேல் இல்லை என்பது தலைமைபண்புக்குரிய அழகல்ல என்கிற கருத்து பட்டேல் பற்றி அவருக்கு இருந்தது.

அப்போதுதான் நாடு விடுதலை அடைந்துள்ளது என்பதாலும் நேரு மீதான கவர்ச்சி உச்ச அளவில் இருந்ததாலும் கிருபளானியின் கே எம் பி பி போன்ற எதிர்கட்சிகள் மக்களிடம் போய் சேரமுடியவில்லை. 1952 பொதுத்தேர்தலை அக்கட்சி பிறந்தவுடனேயே சந்திக்க நேர்ந்தது. கிருபளானி உட்பட கட்சியினர் தோற்றனர். காங்கிரசிற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் இணைவதை- சோசலிஸ்ட்களுடன் இணைவதை அவர் விரும்பினார். ஆனால் சோசலிசம் என்பதை வறட்டு கோட்பாடாக பேசுவதை ஏற்கமுடியாது என்றார். சமுக நீதி என்பதே இப்போது சரியான முழக்கம் என்றார். சோசலிசமா சமுகநீதியா என்கிற கட்டுரை ஒன்றைக்கூட அவரது தொண்டர்கள் விளக்கத்திற்காக எழுதினார்.
1954 PSP பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் நாக்பூர் மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தார். அங்கு கோஷ்டி சண்டைகளும் தனிநபர் தகராறுகளும் இருப்பதை கண்ணுற்று தான் ஏமாற்றம் அடைந்ததாக கருதினார். இடைத்தேர்தல் ஒன்றில் காங்கிரஸ் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை, கிருபளானி நாடாளுமன்றம் சென்றார். 1957லும் அவர் வெற்றி பெற்றார். ஆனால் 1962ல் அவர் கிருஷ்ணமேனனிடம் தோற்றார். பிறகு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது துணவியார் சுசேதா கிருபளானி உத்தரபிரதேசத்தில் காங்கிரசை வழிநடத்திக்கொண்டிருந்தார். துணைவியாரின் அரசியலை முன்வைத்து கிருபளானி மீது சில விமர்சனங்கள் எழுந்தன. சுசேதா தான் காங்கிரஸ் தலைவர் என்பதால் தன் கணவரின் காந்திய கொள்கைகளை ஏற்காத நபரல்ல என்கிற விளக்கம் தரநேர்ந்தது.

1920களில் சுசேதா (Sucheta) இளம்பெண்ணாக கிருபளானி உறவினர் வீட்டில் தங்கி தனது எம் மேல்கலையை டெல்லியில் படித்துக்கொண்டிருந்தார்.. நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பீகார் நிலநடுக்கத்தின்போது களப்பணியாற்றினர். சுசேதா பனாரஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணியில் சேர்ந்தார். காந்திஜி சிறையில் இருந்ததால் அவர் ஒப்புதலை பெற்று மணமுடிக்கலாம் என இருவரும் மூன்று ஆண்டுகள் காத்திருந்தனர். காந்திக்கு திறமையான கிருபளானியை இழந்துவிடக்கூடாதே என்கிற தயக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் காங்கிரசில் பணிபுரிவோம் என சுசேதா உறுதியளித்தார். ஆனால் காந்தி வேறு ஒருவரை பார்த்து மணந்துகொள் என்றே அறிவுறுத்தினார். சுசேதா காந்தியுடன் விவாதம் செய்து பிடிவாதமாக கிருபளானியைத்தான் மணப்பேன் என்றார்.. காந்தியும் தனது ஏற்பை நல்கினார். கிருபளானி பொதுவாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவராக இருப்பார். காந்தி இறந்தபோது கூட அவர் அழவில்லை. அப்படியே உள் உறைந்துபோனார்.
கால இடைவெளிகளில் அரசாங்கங்களை மாற்றுவதுதான் ஜனநாயகம். எவ்வளவு சிறந்த அரசாங்கமாக இருந்தாலும் அதை தொடர்ந்து நீடிக்கவிட்டால் அது மக்களிடம் பாராமுகம் கொள்ளும். லஞ்ச ஊழலுக்கு உள்ளாகும் என்பதை அழுத்தமாக பேசிவந்தார் கிருபளானி. அரசாங்கம் தன்னை அமைத்துக்கொள்வதில் அன்றாட நடவடிகைகளில் சிக்கனமாக இருக்கவேண்டும் என விரும்பினார். அவசியமற்ற செலவுகளை ஆடம்பரங்களை தவிர்க்காவேண்டும் என்கிற விமர்சனப்பார்வையை வெளியிட்டுவந்தார். நிர்வாக நேர்மை இல்லையெனில் எதையும் சாதிக்கமுடியாது. மாநிலத்திலும், மத்தியிலும் மிருகபலம் இருக்கிறது என்பதாலேயே ஆரோக்கியமான விமர்சனங்களைக்கூட ஆட்சியில் உள்ளோர் பொருட்படுத்தாவிட்டால் ஜனநாயகத்திற்கு ஆபத்து  நேரும் என்றார்.
கலாச்சாரம் என்பதை மொழியுடன் சமப்படுத்தி பார்க்ககூடாது என்பது அவரது கருத்து. பலமொழி இருந்தாலும் நமக்கு அடிப்படையான கலாச்சாரம் இருக்கிறது. வேதம், உபநிடதம் ராமாயணம், மகாபாரதம் என மொழியைத்தாண்டி பொதுவாக புரிந்து கொண்டுள்ளோம். கீதை என்பதை குஜராத் கீதை, தமிழ் கீதை என்றெல்லாம் பிரித்து பேசமுடியுமா என அவர் வினவினார். புத்தரையும், மகாவீரரையும் பிரதேச கடவுளாக்கிவிடமுடியுமா என்றார்.. இஸ்லாம் மற்றும் அய்ரோப்பியர் கொடைகளையும் நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்றார். குருநானக், கபீர், துக்காராம் போன்றவர்களையும், ராஜாரம்மோகன்ராய், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், திலகர், காந்தி உள்ளிட்டவர்களை இந்தியாவின் மகத்தான மனிதர்களாகவேவட்டாரங்களுக்கு’ அப்பாற்பட்டு புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.
Hindu Genius is against any type of extreme revivalism. I don't see any possibility of Hindu Revivalists seizing power and lording it over Muslims and Sikhs – இந்து மேதைமை என்பதற்கு தீவிர மறுமலர்ச்சி என்பதை ஏற்காது  என்கிற  கணிப்பு 50 ஆண்டுகளுக்கு முன்னர் அவரிடம் இருந்தது. ஆனால் அக்கணிப்பு இன்று பொய்த்துபோய்விட்டதே என்கிற கவலையை ஜனநாயக சக்திகள் கொள்ளாமல் இருக்கமுடியாது
இன்றுள்ள சூழலில் விவசாயம் மட்டுமே நாட்டை முன்னேற்றிவிடாது. தொழில்வளர்ச்சி தேவைதான். முதலாளித்துவ முறையிலான தொழில்வளர்ச்சி, கம்யூனிஸ்ட் நாடுகளில் உள்ள அரசு முதலாளித்துவ வளர்ச்சி என்கிற இரு அனுபவம் இருக்கிறது. இரண்டிலும் மக்கள் பாதிக்கப்பட்டே உள்ளனர். காந்தி பேசிய கிராம வளர்ச்சி, தன்னிறைவு கிராமங்கள் என்பது வெறும் விவசாயம் சார்ந்தது மட்டுமல்ல. அங்குள்ள தொழில் சார்ந்ததும்கூட என்றார் கிருபளானி. மையப்படுத்தப்பட்ட முறையில்தான் தொழில் வளர்ச்சி என்கிற மேற்கு கருத்து நம்மிடம் வலுவாக அமர்ந்துவிட்டதால், decentralised industrial growth என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம் என்றார்...

காந்தியின் கழிப்பறையை சுத்தம் செய்யும் தொண்டர் வேலைத்துவங்கி காங்கிரசின் உயர்வேலைகள்வரை 1917-47 ஏறக்குறைய 30 ஆண்டுகள் காந்தியுடனேயே இருந்து பார்த்தவர் கிருபளானி. மீரத் காங்கிரஸ் அமர்வில் (1946) அவர் அதன் தலைவராக இருந்து மிக முக்கிய உறை ஒன்றை தந்தார்  . இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு அழுத்தம் கொடுத்தார் காந்தியிடமிருந்து நாடு பெற்றுக்கொண்ட அகிம்சையால் நாடு தன்னை உயர்த்திக்கொள்ளும் என்றார். எவர் வாளை நேசிப்பாரோ அவர் அதனாலேயே மடிவார் .காந்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு வழிமுறையின் தூய்மை என்பதாகவே உள்ளது என்றார். குறிகிய வழிகளால் உயர்நோக்கத்தை அடையமுடியாது என்கிற காந்தியம் உலகிற்கு புதியது. உலகம் என்று அதை ஏற்குமோ தெரியாது என்றார்.
அவ்வமர்வில் அரசியல் அமைப்பு சட்ட அசெம்பிளிக்கு ஜின்னா வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அகிம்சையும் சர்வாதிகாரமும் முரண்படுபவை . நமது அரசியல் ஜனநாயகம் எந்த ஒரு வர்க்கத்தின் , சாதியின் ஆட்சியாக இருக்காது என்றார். அது மக்களால் மக்களுக்கானதாக  அமையவேண்டும் . Even a political democracy can be a dictatorship if there are no spheres of free activity left to the individual என்கிற எச்சரிக்கையை அவர் தந்தார்.

 இஸ்லாமியர் இந்த நாட்டிற்கு வருபோது இங்குள்ள லட்சக்கணக்கான இந்துக்களைப்பார்த்து அஞ்சவில்லை. ஆனால் நாடு விடுதலைப்பெற்று ஒரே நாடாக இருவரும் வாழலாம் என்றால் ஏன் அச்சப்படவேண்டும் என்கிற வினாவை அவர் தனது தலைமை உரையில் எழுப்பினார். இன்றுள்ள பிரதேச மாநிலங்கள்படி 7 மாநிலங்களில் இந்துக்கள் பெரும்பான்மை என்றால், 5 மாநில பிரதேசங்களில் இஸ்லாமியர்தான் பெரும்பான்மை. இதில் அரசியல் சிறுபான்மை என்கிற எண்ணம் தேவையில்லையே என்றார். இஸ்லாமியர்களை அந்நியர் என பார்க்கும் இந்துமனம் தனது சொந்த மதத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சேர்த்தே கேடு விளவிக்கிறது என்றார். மதத்தின் பெயர் சொல்லி நடக்கும் அரசியல் தவறுகளை அவர் சுட்டிக்காட்ட விமர்சிக்க தயங்கவில்லை.

No comments:

Post a Comment