https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, June 13, 2017

லாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை

லாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை

                             -ஆர்.பட்டாபிராமன்

லாலா லஜ்பத்ராய் 1865 ஜனவரி 28ல் பெரோஷ்பூர் மாவட்டத்தில் துடிகே என்கிற பகுதியில் பிறந்தார். தாய் குலாப்தேவி. தந்தையார் பள்ளி ஆசிரியர். குடும்பம் பெரியது. தந்தைக்கு உருது, பெர்ஷியன் புலமை இருந்தது. லஜ்பத்ராய்க்கு 12வது வயதில் திருமணம் முடிக்கப்பட்டாலும் கல்விக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பள்ளிப்படிப்பு லூதியானாவிலும், கல்லூரி  படிப்பை லாகூரிலும் முடித்தார். . பின்னர் சட்டத்தேர்வு எழுதி வக்கீல் தொழிலில் இறங்கினார்
லாகூரில் பிரம்ம சமாஜ், ஆரிய சமாஜ் தொடர்பு அவருக்கு கிட்டியது. பண்டிட் குருதத் வித்யார்த்தி, லாலா ஹன்ஸ்ராஜ் ஆகியோர் ஆரம்ப வழிகாட்டிகளாக இருந்தனர்.. முதலில் அவருக்கு பெர்ஷியன் உருது மொழிகள்தான் பயிற்சியானது. கல்லூரியிலும் அவர் பெர்ஷியன் - அரபி தான் படித்தார். இந்தியை அவர் அறியவில்லை. ஆனால் அரசியல் சூழல் அவரை இந்தியின் பெரும் ஆதரவாளனாக மாற்றிவிட்டதாக  தெரிவிக்கிறார். உருதுவை எதிர்த்து பொதுக்கூட்டங்களில் பேசத்துவங்கினார்.
பண்டிட் குருதத்  லஜ்பத்ராய் சமஸ்கிருதம் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். அம்மொழியை அவர் அதிகம் கற்க முடியாவிட்டாலும் இந்து என்கிற அழுத்தமான உணர்வு ஏற்பட அது வழிகோலியது. பஞ்சாபி என்கிற பத்ரிக்கையை லஜ்பத் உட்பட பலர் ரூ1000 கொடுத்து துவங்கினர். சர் வில்லியம் வெட்டெர்பர்ன் அவர்களின் தொடர்பு 1904ல் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் நோக்கி லஜ்பத்ராயை அழைத்து சென்றது. 1905 பிப்ரவரியில் கோகலே தொடர்பு ஏற்படுகிறது. லாலா கங்கா பிரசாத் என்கிற உதவி கலெக்டருடன் லஜ்பத் சிலோன் செல்கிறார். கங்காவும் ஆர்யசமாஜியாக இருந்தார்.
இப்பயணம் மங்களூர், கோழிக்கோடு, கண்ணனூர், மாஹே வழியாக சென்றது. ஒருவார கப்பல் பயணத்தில் உணவு பிரச்சனையானது. முதல்முறையாக ஹோட்டலில் தங்கி அய்ரோப்பிய உணவை எடுத்துக்கொள்ளும் அனுபவமும் ஏற்பட்டது. சிலோனில் அவர் சீதையை இராவணன் சிறைவத்த இடம் என சொல்லப்பட்ட இடத்தையும், அசோகரின் மகன் மரம் நட்ட இடத்தையும் பார்த்ததாக பதிவு செய்துள்ளார். திரும்ப வருகையில் மதுரை, ராமேஸ்வரம் கோயில்கள் பார்த்துவிட்டு மதராஸில் திரு கி சுப்பிரமணியன் வீட்டில் தங்கி தென்னிந்திய உணவுகளை பெற்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார்
லஜ்பத்ராய் லாகூருக்கு தனது 31ஆம் வயதில் குடியேறினார். அவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடர்ந்தார். . சமாஜில் ஹன்ஸ்ராஜ், முன்ஷிராம் ஆகியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. லஜ்பத்  ஹன்ஸ்ராஜ் பக்கம் நிற்கிறார். செப்டம்பர் 1893ல் அனார்கலி ஆர்யசமாஜ் கோயில் ஒன்றை எழுப்பிட பெருமுயற்சிகளை லஜ்பத் எடுத்தார். தயானந்தர் ஆங்கில வேத பள்ளி என்பதை ஹன்ஸ்ராஜ், லஜ்பத்ராய் நிறுவி ஆசிரியர்களாகவும் பணிபுரிகின்றனர். அந்நிறுவனம் 1892ல் கல்லூரி அளவிற்கு உயர்கிறது. அதன் செயலராக இருந்து அப்பணியை திறம்பட லாலாஜி கையாள்கிறார்.
1896-97ல் மத்தியப்பகுதி மாநிலங்களில் பஞ்சம் ஏற்பட்டது. வறுமையிலிருந்து தப்பிக்க பலர் கிறிஸ்துவ மதம் மாறினர். ஆர்ய சமாஜியின் தொண்டர் என்கிற வகையில் லாலாஜிக்கு இந்நிகழ்வு வருத்தத்தை ஏற்படுத்தியது. பிலாஸ்பூர், ஜபல்பூர், பெடுல் போன்ற மாவட்டங்களில் கைவிடப்பட்ட 250 குழந்தைகளை காப்பாற்ற லாலாஜி நிதி திரட்டினார். அமிர்தசரஸ், பெரோஷாபூர், லாகூர் போன்ற இடங்களில் ஆர்ய சாமாஜ் நடத்திவந்த அநாதை இல்லங்களில் அக்குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவினார். ஆர்ய சமாஜின் பஞ்சாப் நிவாரண கமிட்டியின் பொதுச்செயலராக லாலாஜி பொறுப்பேற்று பாராட்டினைப் பெற்றார்
கர்சான் பிரபுவின் கொள்கைகளை லாலாஜி தாக்கத்துவங்கினார். 30 கோடி மக்களுக்கு மேலாக தன்னை நினைத்துக்கொண்டு ஆளும் அந்நிய ஆட்சி சொந்த நாட்டில் அதன் மக்களை இரண்டாம்தர மக்களாக நடத்துவதை சகிக்க முடியவில்லை என்று பேசலானார் . இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதை அவர் சொல்லத்துவங்கினார். மதராஸ், பம்பாயில் இதற்கான ஆர்வம் தெரிகிறது. ஆனால் வட இந்தியாவில் ஒற்றுமை உணர்வு வரவேண்டும் என்றார். இந்துக்கள் ஒற்றுமைக்காக நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் கல்வி பெறவேண்டியதன் அவசியம் உணரப்பட வற்புறுத்தினார். வங்கத்திலிருந்து உயர்கல்விக்கு லண்டன் சென்றவர்கள் 10 பேரில் இருவர் முகமதியாராக இருப்பதை அவர் வரவேற்றார்.
சுதேசி இயக்கத்தில் உள்ளவர்கள், வர்த்தக பெருமக்கள் அடுத்த 5 ஆண்டிற்கு நமக்கு தேவையான தொழில் வளர்ச்சி எவ்வாறு அமையவேண்டும் என்பதை திட்டமிட்டு சொல்லவேண்டும் என்றார் லஜ்பத். 1907 சூரத் காங்கிரசில் திலகர் உட்பட லஜ்பத் காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என கருதினர். ஆனால் கோகலே தனக்கு லஜ்பத்ராய் மீது மரியாதை இருந்தபோதிலும், தற்போதைய சூழலில் நிதானமான கருத்துடைய மிதவாதிகளிலிருந்து ஒருவர் வரவேண்டும் என கருதினார். ராஷ் பிகாரி கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாட்டில் கருத்துவேறுபாடுகளை குறைப்பதற்கு முயற்சித்தவ்ர்களில் லஜ்பத்ராயும் ஒருவர். அவர் ஆரம்பத்தில் மிதவாதிகள் பக்கமே நின்றார். லண்டன் சென்ற லஜ்பத்ராய் தாயகத்திற்கு மார்ச் 1909ல் திரும்புகிறார். ஆனால் பஞ்சாபி இதழில் காங்கிரஸ் இயக்க முரண்பாடுகள் எழுதப்பட்டு வந்தன. காங்கிரஸ் அமர்வை லாகூரில் நடத்துவது என்பது உசிதமல்ல என்பது இந்துக்கள் கருத்து என தெரிவித்தார் லஜ்பத். காங்கிரசில் பல முசல்மான்கள் இணைந்து பணியாற்றவில்லை என்பதை கணக்கில் கொள்ளவேண்டும் என்றார்.
பெரோஷாமேத்தா, கோகலே மீது மரியாதை இருந்தாலும் அவர்களைப் போன்றவர்கள் காங்கிரசை சில படித்த இந்துக்களின் கட்சியாக மாற்றுகிறார்கள் என்கிற விமர்சனம் லஜ்பத்ராயிடம் இருந்தது. கோகலேவின் தேசபக்தி அபாரமானது என்றாலும் 1907 உடைவிலிருந்து அவர் பின்பற்றிவரும் நடைமுறைகளை லஜ்பத் கேள்விக்கு உட்படுத்தினார். திலகர் மீதும் தவறு இருக்கிறது. அவர் முன்நின்று இயக்கத்தை தலைமை தாங்க முன்வராமல் சில மூர்க்கத்தனமானவர்கள் பின் நிற்க துவங்கிவிட்டார் என லஜ்பத் கருத்தை வெளியிட்டார்.
மிதவாதிகள்பெரும்பான்மை என நினைப்பதால் அவர்கள் காங்கிரஸ் அமைப்பிற்கான , நிர்வாக பொறுப்பை வைத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில்  சிறுபான்மை தீவிரவாதிகள் உள்ளே வந்து கொள்கைகளில் தங்கள் தாக்கத்தை உருவாக்குவதுதான் சுதேசி இயக்கத்திற்கு நல்லது  என  சூரத் வேறுபாடுகளுக்கு பின்னர்  லஜ்பத் கூறினார். திலகரை நாடு கடத்துவதற்கு கோகலேவே காரணம் என பேசுவது முட்டாள்தனமானது. புத்தியுள்ள எவரும் இப்படிப்பட்ட குற்ற சாட்டுக்களை நம்பப்போவதில்லை என்றார் லஜ்பத். பெருத்த அவநம்பிக்கைகளுடன் இரு பிரிவாக செயல்பட்டுவந்தால் எவ்வாறு ஒன்றுபடமுடியும். மிதவாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் செயல்படுவது சரியாக எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினார். காலம்தான் நம்மை குணப்படுத்தும். அதுவரை பகைமையை அதிகப்படுத்தும் கருத்துக்களை பேசாமல் இருப்போம் என்கிற பொது அறிவுரையை அவர் தந்தார்.
இந்தியாவின் மத, சமுக, அரசியல் நிலைமைகள் தனியானதாக இருக்கிறது. பண்டைய நாகரீகங்கள் எனப்படும் கிரேக்க, ரோமன், எகிப்தியன், பெரிசியன், பாபிலோனியன் ஆகிய எதற்கும் இந்திய ஆர்ய நாகரீகம் போன்ற பல்வகைத்தன்மையை- பெறவில்லை எனலாம்.. இங்குள்ள இந்துக்கள், முசல்மான்கள் ஒரே இனத்தவர்கள். அவர்களிடம் ஒரே இரத்தம்தான் ஓடுகிறது. ஒரே ஆர்யன் ஸ்டாக் சார்ந்தவர்கள். திராவிட மொழிகள் கூட ஆர்யன் தாக்கம் கொண்டவை எனவும் லஜ்பத் எழுதினார். இந்தியாவிற்கு சில நல்லெண்ணம் கொண்ட ஆங்கிலேயரகளால் நவீன கல்வி அறிமுகமாகியுள்ளது. ஆங்கிலவழி என்பதில் சில எதிர்மறை விளைவுகள் இல்லாமல் இல்லை. ஆனாலும் பலன் கிடைத்துவருகிறது என்பதை மறுக்கமுடியாது.
இந்திய பொதுவாழ்வை எப்படி இணக்கப்படுத்துவது, அர்ப்பணிப்புடன் இளைஞர்களை ஈடுபடுத்துவது என்பது மிக முக்கிய கடமையாகிறது. ஆர்யசமாஜ் உலக முழுதும் உள்ளது. தேசிய இன வேறுபாடுகள் பார்க்காதது.. வேதமதம் உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வை தரக்கூடியதாக இருக்கிறது. நாட்டை விடுவிக்கும் உயர்த்தும் சக்தியாக ஆர்யசமாஜ் விளங்குகிறது என்றார் லாலாஜி. அதனால் சட்டமற்ற நிலைமைகளை, அராஜகத்தை அங்கீகரிக்க இயலாது என்றார். தனிமையிலும், பொதுவாழ்விலும் சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் என்பதை அது கோருகிறது.
இளைஞர்கள் சில மத நூல்களை படித்துவிட்டு சச்சரவுகளை உருவாக்குவது ஏற்புடையதல்ல. முரண்பாடுகளை உருவாக்காத மதவிஷயங்களை பாடங்களில் மாணவர்களுக்கு சேர்ப்பதில் தவறில்லை என கருதினார் லஜ்பத். அவை broad religious truths விரிந்து பரந்த உண்மைகளை பேசுபவையாக இருக்கவேண்டும் என்றார்.  வறட்டு கோட்பாடுகளாக அமைந்துவிடக்கூடாது என்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட வேதப்பாடல்கள சிலவற்றை ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் குழந்தைகள் மனனம் செய்வது சிறப்பானது எனக் கருதினார்.
துறவு- துறவறம் குறித்த எண்ணங்கள் நமது வளர்ச்சியை மிகவும் பாதித்துவிட்டது. உலகம் மாயை என சொல்வது, செக்யூலர் நலன்களைவிட துறவறம் உயர்ந்தது என்று பேசுவதெல்லாம் கொடுரமானது என்றார். முதிர்ச்சியில்லாதவர் விளக்கங்களில் உபநிடதங்கள் சிக்கிவிடக்கூடாது என்றார். நடைமுறை வாழ்க்கை பற்றி அறியாதவர் அதை சரியாக விளக்க முடியாதென்றார். கட்டுமஸ்தான உடல்வளர்ச்சி ஆரியகுமாரர்கள் பெறவேண்டிய பயிற்சி. தங்கள் உணவு பழக்கங்களில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கவேண்டும். மேற்குநாடுகளின் உணவுமுறையை காப்பியடிப்பது உகந்ததல்ல என்றார் லஜ்பத். அருந்தக்கூடியவற்றில் நமது பாலை விடுத்து ஒயின், காபி, டீ என செல்வது ஏற்புடையதல்ல என்றார்.
தேர்வில் வெற்றி என்பதுதான் திறமை என கருதப்படுகிறது. திறமை என்பது தேர்வுடன் நிற்பதல்ல. விளையாட்டுத்திறன் மிக அவசியம். உடல் தகுதி மிக முக்கியமானது என்கிற பொதுப்புத்தி நமக்கு தேவைப்படுகிறது என்றார். பெற்றோர்கள் முட்டாள்தனமாக சொல்கிறார்கள் என்பதற்காக சிறுவயதில் திருமணம், கட்டாய திருமணம் என்பதை நம் இளைஞர்கள் ஏற்ககூடாது. பள்ளிகளில் சக மாணவர்களுக்கு குழந்தை திருமணம் என்பதை அறிந்தால் அதை தடுக்க ஆர்யகுமாரர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார். சாதிதடைகளை தாண்டி, படித்தவர் பாமரர் என வித்தியாசமில்லாமல் விளையாட்டுக் கூடங்களில் நமது இளைஞர்கள் திரளும் பழக்கம் உருவாகவேண்டும். ஆர்யகுமார சபாக்கள் மல்யுத்தம், பிற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி விளையாட்டுதிறனை ஊக்குவிக்கவேண்டும்.
உணவிற்கே வழியில்லாமல் பள்ளிக்கு வரமுடியாமல் போகும் குழந்தைகளுக்கு உணவு உத்தரவாதம் தந்து கல்விக்கூடம்  வருவதற்கு சபாக்கள் உதவவேண்டும் என்ற வேண்டுகோளை இளைஞர்களுக்கு விடுத்தார் லஜ்பத். ரெளடிகளிடமிருந்து பெண்குழந்தைகளை பாதுகாப்பதற்கு ஆர்யகுமார சபா முன்வரவேண்டும் என்றார். சேவா மண்டலிகளை அமைக்கவேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று ஆரம்ப கல்விக்கு உதவி செய்தல், பஞ்சம் பாதிப்பு நிவாரணவேலை, தொற்றுநோய் பாதிப்பறிந்து தேவையான மருந்துகளை  கொண்டுசேர்த்தல் போன்றவற்றை இளைஞர்கள் செய்யவேண்டும் என்றார் இளைஞர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக மாற்றிட தனது வேலைத்திட்டம் உதவும் என லஜ்பத் கருதினார்.
ஆர்யசமாஜ் என்பது அமைப்பு என்பதால் வேலை செய்யும்போது கருத்துவேறுபாடுகள் வரலாம் .மேல் அமைப்பு, கீழ் அமைப்பு என பிரச்சனைகள் வரலாம். முடிந்தவரை நமக்கு இடப்பட்ட வேலைகளில் கவனம் குவித்தால் பிரச்சனைகள் குறையும் என்றார் லஜ்பத். கிளைகள் உயிர்ப்பற்றதாக இருந்தால் அதற்கு எவ்வித அர்த்தமும் இருக்கப்போவதில்லை. செயல்படாதவர் புலம்பலால் எந்தப் பயனும் விளையாது. யார் துடிப்புடன் செயல்படுகிறார்களோ அவர்தான் அமைப்பில் உயரமுடியும். என்னை விஞ்சிவிட்டாரே என்கிற குறைபேச்சுக்கள் உதவாது . அமைப்பு எனில் அதில் ஜீவன் உயிர்துடிப்பு அவசியம் என உணர்த்தினார் லாலாஜி.

வர்ணாஸ்ரம் என்ற பெயரில் இங்கு தவறாகவே சொல்லித்தரப்பட்டுள்ளது. தன்னை உணர்தல் என்கிற பெயரில் சந்நியாசிகளும், சாதுக்கள் பலரும் சுயநலக்காரார்களாக இருந்துள்ளனர். வேலை கடினமானதாக இருக்கலாம். ஆபத்துக்கள் நிறைந்தும் இருக்கலாம். துன்பம் பற்றலாம். ஆனாலும் செய்தாக வேண்டும். நாட்டின் விருப்பமும், கடவுளின் விருப்பமும் அதுவே என இளைஞர்களுக்கு அவர் அறைகூவல் விடுப்பவராக இருந்தார்.

No comments:

Post a Comment